அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை

பட மூலாதாரம், Getty Images
அன்வே நாயக் எனும் உள்ளரங்க வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பிற இருவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியுள்ளது. பிணைத்தொகையாக அவர்கள் மூவரும் தலா 50,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
மும்பை காவல் ஆணையர் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அர்னாப் உள்ளிட்டோரின் மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றம் இவர்கள் மூவரையும் பிணையில் விடுவிக்க மறுப்பு தெரிவித்தது தவறானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அன்வே நாயக் தற்கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் வாதம் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், தற்போது அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீதிஷ் சார்தா, ஃபிரோஸ் முகமது ஷேக்கும் தங்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவிக்க மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்களின் மனுக்களை அவசர விவகாரமாகக் கருதி நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு புதன்கிழமை காலையில் முதல் வழக்காக விசாரித்தது.
அப்போது அர்னாப் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சால்வே, 2008ஆம் ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட அன்வே நாயக்கின் தற்கொலை வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரத்தை மகாராஷ்டிரா அரசு தவறாக பயன்படுத்தியிருப்பதாக வாதிட்டார்.
அன்வே நாயக்கும் அவரது தாயும் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தனர். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அர்னாப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், அந்த வழக்கு ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டது. ஆனால், திடீரென்று சில வாரங்களுக்கு முன்பு, அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக காவல்துறை ஆணையாளர் செய்தியாளர் சந்திப்பை கூட்டி டிஆர்பி வழக்கில் குற்றம்சாட்டினார். அதன் பிறகு சில தினங்களில் மாநில சட்டப்பேரவையிலும் அர்னாப் பற்றி பேசப்படுகிறது. அரசியல் அழுத்தங்களால் அவருக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது. காவல்துறை திடீரென பழைய வழக்கில் அர்னாபை கைது செய்கிறது என்று வழக்கறிஞர் சால்வே சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவர் வேறொருவருக்கு கொடுக்க வேண்டிய பணம் தரப்படாத நிலையில், அந்த நபர் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு பணம் கொடுக்க வேண்டியவரே காரணம் என்பதே சரியாகுமா? தற்கொலை செய்து கொண்ட நபருக்கு ரூ. 6.45 கோடி அளவுக்கு கடன் இருந்துள்ளது. அர்னாப் தரப்பு ரூ. 88 லட்சம் தர வேண்டும் என விசாரணை ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த ரூ. 88 லட்சம் கொடுக்காததற்காக அவரை வழக்கில் குற்றவாளியாக சேர்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இந்த விவகாரம் அனைத்தும் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
அப்போது நீதிபதி சந்திரசூட், இந்த வழக்கில் இப்போது நீதிமன்றம் தலையிடாவிட்டால், அது அழிவுப்பாதைக்கு தனி நபர் உரிமை, சுதந்திரத்தை கொண்டு செல்வதற்கு ஒப்பாகலாம். ஒருவர் நிதிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக வைத்துக் கொண்டால், அதற்கு தூண்டியதாகக் கூறி ஒருவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 306ஆவது பிரிவு பயன்படுத்தப்படலாமா? அதற்கு அடிப்படை முகாந்திரம் இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், "கீழமை நீதிமன்றத்தை மீறி மேல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும்போது, நடைமுறை பின்பற்றப்படவில்லை எனக்கூறி அதை நிராகரிப்பது தனி நபர் சுதந்திரத்துக்கு எதிரானதாகவும் ஆகலாம். இந்த விவகாரத்தி்ல் அர்னாப் மீதான குற்றச்சாட்டு தீவிரவாத வழக்கு ஒன்றும் கிடையாதே" என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.
அப்போது மும்பை காவல்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், "அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீது முதலில் செஷன்ஸ் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். அதற்கு பிறகு மேல்முறையீடு செய்யப்பட்டால் மேல் நீதிமன்றம் அதை விசாரிக்கட்டும். அதுதான் முறையும் கூட" என்று வாதிட்டார்.
தான் மாநில அரசுக்கோ, குற்றம்சாட்டப்பட்டவருக்கோ ஆதரவாக பேசவில்லை. சட்டத்தின் நடைமுறையைத்தான் விளக்குகிறேன். ஒரு ஜாமீன் மனு மீது எடுத்தவுடனேயே உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாமா என்பதை பார்க்க வேண்டும் என்று தேசாய் தெரிவித்தார்.
"ஒரு வழக்கில் தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர் கருதினால், அரசியலமைப்பின் 14 மற்றும் 21ஆவது விதிகளின்படி அவர் அரசை நாடும்போது, இரு அரசியலமைப்பு விதிகளின் உரிமைகளுக்கு இடையை நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டியது மாநில அரசாங்கத்தின் கடமை. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடக்கும்போது, அதிகார வரம்பை மீறி இப்போதே ஏன் உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களை விசாரிக்க வேண்டும் என்றே நான் கேள்வி எழுப்புகிறேன்" என்று வழக்கறிஞர் தேசாய் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் வாதங்கள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியபோது அர்னாபுடன் கைது செய்யப்பட்ட ஃபிரோஸ் முகமது ஷேக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், அர்னாப் மற்றும் ஃபிரோஸ் ஆகியோர் இடையே தொடர்பே இல்லாதபோதும், இருவருக்கும் பொதுவான நோக்கம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதே வழக்கில் கைதாகியுள்ள நிதீஷ் சார்தா என்பவரின் வழக்கறிஞர் முகுல் ரோகத்தியும் அன்வே நாயக் தற்கொலை வழக்கில் கைதாகியுள்ள மூன்று குற்றவாளிகளுக்கும் ஒருவருடன் மற்றொருவருக்கு தொடர்பில்லை என்று தெரிவித்தார்.
எந்த வழக்கின் கீழ் அர்னாப் கைது செய்யப்பட்டார்?
கான்கார்ட் டிசைன் என்கிற நிறுவனத்துக்கு தான், மும்பையில் இருக்கும் ரிபப்ளிக் டீவி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் ஸ்டூடியோக்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இந்த கான்கார்ட் டிசைன் என்கிற கம்பெனியின் நிர்வாக இயக்குநர் தான் அன்வே நாயக். கடந்த மே 2018-ல், அன்வே நாயக் மற்றும் அவரது தாயார், ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் அலிபாக் வீட்டில், இறந்து கிடந்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
அன்வே நாயக் இறந்த போது, அவர் வீட்டில், ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. காவலர்கள், இதை ஒரு தற்கொலை வழக்காக பதிவு செய்தார்கள். அந்த நேரத்தில், இந்த தற்கொலை குறிப்பு நிரூபிக்கப்படவில்லை.
தன் கணவர் அன்வே நாயக்குக்கு, அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக் & நிதிஷ் சர்தா ஆகியோர்கள், கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என, அன்வே நாயக்கின் மனைவி அக்ஷதா சொல்லி இருக்கிறார்.
அன்வே நாயக்குக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில், 90 சதவிகித பணத்தை செலுத்திவிட்டதாகவும், பாக்கி வேலைகளைச் செய்யாததால், மீதமுள்ள 10 சதவிகித பணத்தைக் கொடுக்கவில்லை என அர்னாப் கோஸ்வாமியின் ஏ ஆர் ஜி அவுட்லையர் மீடியா பிரைவேட் லிமிடெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சியில் மூடப்பட்ட வழக்கு
காவல் துறை, கடந்த ஏப்ரல் 2019-ல், அர்னாபுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என இந்த வழக்கை மூடக் கோரி அறிக்கை தாக்கல் செய்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்த சம்பவங்கள் எல்லாம் மகாராஷ்டிராவை பாஜக ஆட்சி செய்து கொண்டு இருக்கும் காலத்தில் நடந்தவை. 2019ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின், பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து, சிவசேனை கட்சி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
உள்துறை அமைச்சரிடம் முறையிட்ட அக்ஷதா
ஆட்சி மாறிய பின்பு, அன்வே நாயக்கின் மனைவி அக்ஷதா, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கைச் சந்தித்தார். முன்பு இருந்த பாஜக அரசு, அர்னாப் கோஸ்வாமிக்கு நெருக்கமாக இருந்ததால், தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என, உள் துறை அமைச்சரிடமே சொன்னார். அனில் தேஷ்முக்கும், உடனடியாக மறு விசாரணைக்கு உத்தரவிட்டார். அதோடு சிஐடி விசாரணையையும் அறிவித்தார். மீண்டும் ராய்காட் மாவட்ட காவல் துறை, தன் விசாரணையைத் துவங்கியது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாகத் தான், ராய்காட் காவல் துறை, மும்பைக்கு வந்து அர்னாப் கோஸ்வாமியை, அன்வே நாயக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்கின் கீழ் குற்றம்சாட்டி கைது செய்தார்கள்.
பிற செய்திகள்:
- "இனிமேல் ஹீரோ தான். அமெரிக்க மாப்பிள்ளை வேடங்கள் கிடையாது": ஆர்.ஜே. பாலாஜி பேட்டி
- நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”
- பிகார் தேர்தல்: நிதிஷ் குமாரின் தனித்துவத்துக்கு முடிவு கட்டிய முடிவுகள்
- "இனிமேல் ஹீரோ தான். அமெரிக்க மாப்பிள்ளை வேடங்கள் கிடையாது": ஆர்.ஜே. பாலாஜி பேட்டி
- பிஹார் தேர்தல்: தேஜஸ்வி, நிதிஷ் குமார், பாஜக, காங்கிரஸ் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகள்
- கொரோனா பரவலுக்குப் பிந்தைய சூழலுக்கு தமிழக பள்ளிகள் தயாரா?
- சசிகாந்த் செந்தில்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
- ஜோ பைடனின் முதல் நடவடிக்கை எது? கொரோனா முதல் இனவெறி பிரச்னை வரை
- லக்ஷ்மி: லவ் ஜிஹாத், இந்து கடவுள் இழிவு சர்ச்சையில் அக்ஷய் குமார் படம் - தற்போதைய நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












