'மூக்குத்தி அம்மன்' ஆர்.ஜே. பாலாஜி: "இனிமேல் ஹீரோதான். அமெரிக்க மாப்பிள்ளை வேடங்கள் வேண்டாம்"

'மூக்குத்தி அம்மன்' ஆர்.ஜே. பாலாஜி

பட மூலாதாரம், Facebook/ RJ Balaji

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நயன்தாரா அம்மன் வேடத்தில் நாயகியாக நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தில் நாயகனாக நடித்து, அதை இயக்கியிருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி. இந்தத் திரைப்படம் தொடர்பாகவும் தான் செய்துவரும் கிரிக்கெட் வர்ணனை தொடர்பாகவும் பிபிசியிடம் பேசினார் ஆர்.ஜே. பாலாஜி. அதிலிருந்து:

கே. மூக்குத்தி அம்மன் எந்த மாதிரியான திரைப்படம்?

ப. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சகமான திரைப்படம் என நாளிதழ்களில் குறிப்பிடுவார்களே... அந்த மாதிரி படம்தான் இது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு சாமி படம் வரும்போது எப்படிப் பார்ப்பீர்களோ அப்படிப் பார்க்கலாம். இரட்டை அர்த்த வசனங்கள், அதைத் தவிர்க்க படத்தை ஓட்டிவிடுவது போன்ற எதுவும் இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவதற்கான படம் இது.

கே. எல்.கே.ஜி - ஒரு அரசியல் நையாண்டி திரைப்படமாக இருந்தது. இந்தப் படம் எப்படி?

ப. இதில் நையாண்டி ஏதும் கிடையாது. பெரும்பாலும் நல்ல விஷயங்களையே சொல்லியிருக்கிறோம்.

ஆர்.ஜே. பாலாஜி

பட மூலாதாரம், RJ Balaji / Facebook

கே. இந்தப் படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்தப் பாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்தது எப்படி?

ப. படத்தில் இந்தப் பாத்திரம் மிகவும் வலுவான ஒரு பாத்திரம். கடந்த காலங்களில் பல பெரிய நடிகைகள் அம்மனாக நடித்திருந்தார்கள். கே.ஆர். விஜயா, ரம்யா கிருஷ்ணன், போன தலைமுறையில் நடித்திருந்தார்கள். இந்தத் தலைமுறையில் யோசிக்கும்போது நயன்தாரா பொருத்தமாகத் தோன்றினார். இப்போது ட்ரெய்லர், பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் நயன்தாராவைப் பார்ப்பவர்கள் அவர் அந்தப் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது. திரைத்துறையில் ஹீரோக்களுக்கு இணையாக இருக்கிறார். இந்த கம்பீரம் திரையிலும் வெளிப்படும்.

கே. அம்மனாக நடிக்க வேண்டுமெனக் கோரி நயன்தாராவை அணுகும்போது அவர் என்ன சொன்னார்?

ப. அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக ஒப்புக்கொண்டார். ஏற்கனவே ராமராஜ்யம் என்ற படத்தில் நடிக்கும்போது சில விஷயங்களையெல்லாம் கடைப்பிடித்தார். அதற்கேற்றபடி, ஷூட்டிங் நடந்த நாட்கள் அனைத்திலும் நாங்கள் சைவ உணவைத்தான் உட்கொண்டோம். மனதளவிலும் உடலளவிலும் தூய்மையாகத்தான் இந்தப் படத்தை எடுத்தோம். அவரும் அதேபோலத்தான் நடந்து கொண்டார்.

ஆர்.ஜே. பாலாஜி

பட மூலாதாரம், Facebook/ RJ Balaji

கே. நீங்கள் நாயகனாக நடித்த முந்தைய படத்தை வேறொருவர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை நீங்களே இயக்கியிருக்கிறீர்கள். என்ன காரணம்?

ப. நான் தயாராகிவிட்டேன் என்று தோன்றியது. போன படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றினேன். அந்தப் படத்தில் என்னுடன் சேர்ந்து இணை இயக்குனராகப் பணியாற்றிய என்.ஜே. சரவணன் என்பவரும் நானும் சேர்ந்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறோம். சரவணன் 19 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். அவருக்கு இது முதல் படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. பிறகு தயாரிப்பாளரிடம் கேட்டுவிட்டு அவரிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

போன படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தேன். இந்தப் படத்திலும் எழுதியிருக்கிறேன். போன படத்தில் இயக்குநர் பிரபு எப்படி செட்டில் பணியாற்றுகிறார் என்பதைப் பார்த்தேன். இந்த அனுபவத்தோடு ஒரு படத்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவம்.

கே. எல்.ஆர். ஈஸ்வரி இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடித்திருக்கிறார். அவரை நடிக்க வைக்கலாம் என எப்படி தோன்றியது?

ப. ஒரு அம்மன் படம் எடுக்கிறோம். பாட்டுப்பாட யாரை தேர்வுசெய்வது? உஷா உதூப்பையா தேர்வுசெய்ய முடியும்? ஒரு சாமி படம் எடுக்கிறோம் என்றவுடன் எல்.ஆர். ஈஸ்வரியே பாட வேண்டுமெனத் தோன்றியது. வந்தவர் 20 நிமிடங்களுக்குள் பாடி முடித்துவிட்டார். கடந்த 60 ஆண்டுகளில் அவர் எந்தப் படத்திலும் நடித்ததில்லை. எங்கள் படத்தில் நடித்திருக்கிறார். அது எங்களுக்கு ஒரு பெரிய பெருமை.

ஆர்.ஜே. பாலாஜி

பட மூலாதாரம், Facebook/ RJ Balaji

கே. எல்.கே.ஜி படத்தில் நிறைய அரசியல் விமர்சனங்கள் இருந்தன. அது தொடர்பாக கண்டனங்கள், எச்சரிக்கைகள் ஏதும் வந்ததா?

ப. எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள்தான் வந்தன. பெரிய தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் நிறைய பாராட்டினார்கள். இந்தப் படமும் அப்படித்தான். ஆனால், சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என ஏதாவது சொன்னார்கள் என்றால் அதை நான் புறக்கணித்து விடுவேன். எல்.கே.ஜி அரசியல் படம்தான். ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தவறு என சொல்கிறோம் என்றால், ஓட்டுக்குப் பணம் வாங்குவதும் தவறு என்பதைப் பலரும் புரிந்து கொண்டிருந்தார்கள். ஆகவே அது ஒரு திருப்தியான அனுபவத்தைத்தான் கொடுத்தது.

கே. இந்தப் படத்தின் ட்ரைலரில் வரும் சில வசனங்கள், விவாதங்களை ஏற்படுத்தியது. இது விவாதங்களை ஏற்படுத்த வேண்டுமென்றே வைக்கப்பட்ட வசனமா? 

ப. ட்ரைலரை 22 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். அதில் ஒரு ஐயாயிரம் பேருக்கு பிரச்னை என்றால் என்ன சொல்ல முடியும்? இன்று பொருத்தமாக இருக்கக்கூடிய சில விஷயங்களைப் பேச வேண்டும் என நினைத்தோம். அவ்வளவுதான். மற்றபடி சர்ச்சையை ஏற்படுத்தும் நோக்கமில்லை. சர்ச்சையை ஏற்படுத்துவதைப் போல இல்லை என்பதால்தான் இன்று இவ்வளவு பேர் அதைப் பகிர்கிறார்கள். மக்கள் அதை சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல.

கே. அந்த வசனம் ஒரு அரசியல் தலைவரைக் குறிக்கும்வகையில் இருக்கிறது என்பதுதான் இந்த சர்ச்சைகளுக்குக் காரணம்...

ப. யாரையும் மனதில் வைத்து அந்தக் காட்சியை எழுதவில்லை. நான் ஒரு ஃபோன் என்று சொன்னால், கேட்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஃபோனை மனதில் நினைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் இதுவும். நாங்கள் கற்பனையாகத்தான் எழுதினோம். அதை யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம். அது ஒரு கற்பனைத் திரைப்படம் அவ்வளவுதான்.

கே. பெரிய நடிகர்கள் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. இப்போது திரையரங்குகள் திறந்துவிட்டன. திரையரங்குகளில் வெளியிட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

ப. இல்லை. அப்படி நினைக்கவில்லை. திரையரங்குகள் திறப்பது மகிழ்ச்சிகரமான செய்திதான். ஆனால், இன்று திரையரங்கங்கள் திறந்துவிட்டாலும் குடும்பத்தோடு மக்கள் வர எவ்வளவு நாள் ஆகுமென எனக்குத் தெரியவில்லை. உண்மையில் யாருக்கும் தெரியாது. ஆகவே, குடும்பங்கள் பார்க்கக் கூடிய திரைப்படமாக எடுத்திருக்கிறோம். குடும்பங்களிடமே நேரடியாக எடுத்துச் சென்றுவிடலாமே என்றுதான் டிஸ்னி - ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடுகிறோம். இப்போது இருக்கும் சூழலில் இதுதான் சரியான முடிவாகப்பட்டது. அதுவும் தீபாவளி சமயத்தில் வெளியிட்டால் சரியாக இருக்குமென்று தோன்றியது.

"இனிமேல் ஹீரோதான். அமெரிக்க மாப்பிள்ளை வேடங்கள் வேண்டாம்": ஆர்.ஜே. பாலாஜி

பட மூலாதாரம், Facebook/ RJ Balaji

கே. ஆர்ஜே, கிரிக்கெட் வர்ணனையாளர், திரைப்பட நடிகர் என பல பணிகளைச் செய்கிறீர்கள்.. நேரத்தை எப்படி நிர்வகிக்கிறீர்கள்?

ப. எனக்கு நிறைய நேரம் இருப்பதாகத்தான் படுகிறது. நன்றாகத் தூங்குகிறேன். குடும்பத்தோடு நிறைய நேரம் செலவிடுகிறேன். எனக்கு இது தொடர்பாக புகார்கள் ஏதும் இல்லை. சில சமயம் அதிக வேலை இருப்பதாகத் தோன்றும். ஆனால், பிடித்த வேலைகளைச் செய்வதால், பெரிதாக ஏதும் தோன்றாது. சில சமயம் களைப்பாக இருக்கும். நேரமின்மை என்ற பிரச்னையே எனக்கு இல்லை. 

கே. நீங்கள் ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது இந்தப் படத்தின் ட்ரெய்லரும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.. ஆகவே இனிமேல் நாயகனாகத்தான் நடிப்பது என்ற முடிவு ஏதும் எடுத்திருக்கிறீர்களா?

ப. நான் இப்போதே நாயகன்தான். கடந்த சில வருடங்களாகவே என்னுடைய மனதில் நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். எல்.கே.ஜி எடுத்ததே அந்தக் காரணத்தால்தான். எனக்கு நானே நல்ல பாத்திரத்தை எழுதிக்கொண்டேன். கடந்த இருபதாண்டுகளாக சினிமாவை எடுத்துக்கொண்டால் முக்கால்வாசிப் படத்தில் ஹீரோ ஒன்று ரவுடியாக இருக்கிறார். அல்லது போலீஸாக இருக்கிறார். இதைப் பார்த்து எனக்கே கொஞ்சம் களைப்பாகிவிட்டது. வேறு பாத்திரங்களே இல்லையா என தோன்றியது. குறிப்பாக ஒரு ஆசிரியர், வேலையை இழந்த ஒருவர் போன்ற சாதாரண பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென நினைத்தேன். பாலிவுட்டில் இதுபோல நிறையப் படங்கள் வர ஆரம்பித்துள்ளன. ராஜ்குமார் ராவ், ஆயுஷ்மான் குரானா போன்றவர்கள் நிறைய நல்ல படங்களில் நடிக்கிறார்கள். அதுபோன்ற பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென நினைக்கிறேன். 

ஆகவே, நடிச்சா ஹீரோதான். அமெரிக்க மாப்பிள்ளை, வில்லன் போன்ற ரோல்களெல்லாம் இனி இல்லை. 

கே. திரைப்படங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு கேள்வி. நீங்கள் ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையை தமிழில் செய்தபோது, சிலரை உருவகேலி செய்ததாகவும் நிறத்தை வைத்து குறிப்பிட்டதாகவும் விமர்சனங்கள் இருக்கின்றன. நீங்கள் இதற்கு வருந்துகிறீர்களா?

ப. ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஸ்டார் ஸ்போர்ட்சிற்காக இந்த வர்ணனையைச் செய்கிறேன். அது ஒரு மிகப் பெரிய, ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றும் ஒரு நிறுவனம். இதில் நிறைய குழுக்கள் இருக்கின்றன. சட்ட விஷயங்களுக்கான குழு, தரத்திற்கான குழு என பல அணிகள் இருக்கின்றன. நீங்கள் ஒரு வார்த்தையைத் தவறாகச் சொல்லிவிட்டால், இத்தனை அணிகளும் கவனிப்பார்கள். உடனடியாக உங்களை உஷார் படுத்துவார்கள். பிறகு அது தொடர்பாக மின்னஞ்சல் வரும். பிறகு கமிஷன் வைத்து, தவறு செய்தது உண்மையென்றால் நடவடிக்கை எடுப்பார்கள். நான் இப்போதும் ஐ.பி.எல். வர்ணனை செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன விஷயங்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் எனக்கு இந்த வேலையே இருந்திருக்காது. 

வர்ணனையின்போது சின்னதாக ஒரு விஷயம் மாற்றிச் சொல்லிவிட்டால்கூட, உடனே நீங்கள் செய்தது தவறு எனச் சொல்வார்கள். எல்லோரும் பார்த்து, இதில் ஏதும் உண்மையில்லை என்று சொன்னதால்தான் இந்த விவகாரத்திற்கு நான் பதிலளிக்கவில்லை. அந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஐ.பி.எல் வர்ணனைக்கு தமிழ்நாடு முழுவதும் கிடைத்திருக்கும் வரவேற்பை எங்களாலேயே நம்ப முடியவில்லை. இப்போது கிரிக்கெட்டை குடும்பமாக உட்கார்ந்து பார்க்கிறார்கள். அப்போது வெறும் கிரிக்கெட்டை மட்டும் பேச முடியாது. ஒருவர் இரண்டு கலரில் ஷூ அணிந்திருக்கிறார், இன்னொருவர் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே விளையாடுகிறார் போன்ற விஷயங்களைச் சொல்வதுதான் என் வேலை. கிரிக்கெட்டைப் பற்றிப் பேச முன்னாள் வீரர்கள் இருக்கிறார்கள், இந்தியாவிற்காக உலகக் கோப்பையை வென்றுகொடுத்தவர்கள் இருக்கிறார்கள். நான் செய்வதில் விளையாட்டையும் பொழுதுபோக்கையும் சரிவிகிதத்தில் அளிக்கிறேன். 

நான் நன்றாக வேலைசெய்யவில்லையென்றால், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை, நல்ல சம்பளம், தொடர்ந்து வர்ணனை செய்யும் வேலை எல்லாம் நடக்காது. அது ஒரு உண்மையில்லாத விஷயம். ஆகவே பதில் சொல்ல விரும்பவில்லை. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: