லக்ஷ்மி (இந்தி) - பட விமர்சனம்

லக்ஷ்மி

பட மூலாதாரம், LAXMII

நடிகர்கள்: அக்ஷய் குமார், கியாரா ஆத்வானி, ஷரத் கேல்கர், ராஜேஷ் ஷர்மா, அஷ்வினி கல்சேகர்; இசை: அமர் மொஹிலே; ஒளிப்பதிவு: வெற்றி பழனிச்சாமி, குஷ் சப்ரியா; இயக்கம்: ராகவா லாரன்ஸ். வெளியீடு: டிஸ்னி - ஹாட்ஸ்டார் ஓடிடி.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2011ல் தமிழில் வெளிவந்த "முனி - 2: காஞ்சனா" திரைப்படத்தின் இந்தி ரீ-மேக்தான் இந்த Laxmii. "முனி" முதல் பாகம் இந்தியில் Pratisodh: Ek Real Revenge என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வெற்றிபெற்றதால், முனியின் அடுத்த பாகத்தை ரீ - மேக் செய்திருக்கிறார்கள். டிஸ்னி - ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

கதையில் பெரிய மாற்றவில்லை. ஆசிஃபும் (அக்ஷய் குமார்) ராஷ்மியும் (கியாரா ஆத்வானி) காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். மூன்றாண்டுகளுக்குப் பிறகும் ராஷ்மியின் பெற்றோர் கோபமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், பெற்றோரின் 25வது திருமண நாள் வருகிறது. அதை ஒட்டி, பெற்றோர் வீட்டிற்குச் சென்று சமாதானமாகிவிட நினைக்கிறார்கள் ஆசிஃபும் ராஷ்மியும்.

அங்கே சென்ற பிறகு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் காலி இடத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக செல்லும் ஆசிஃப் ஸ்டெம்பை தரையில் தட்ட, உள்ளே புதைக்கப்பட்டிருந்த காஞ்சனாவின் ஆவி ஆசிஃபின் உடலில் புகுந்துவிடுகிறது. தன்னைக் கொன்றவர்களை, ஆசிஃபின் உடலில் இருந்தபடி காஞ்சனா பழிவாங்குவதுதான் மீதிக் கதை.

LAXMII

பட மூலாதாரம், LAXMII

"முனி 2: காஞ்சனா"வைப் போல் இல்லாமல், படம் வேறு மாதிரிதான் துவங்குகிறது. ஆனால், இடைவேளைவரை எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் நகர்கிறது கதை. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கும் மேல் பொறுமையை சோதித்த பிறகு மெல்ல பேயை உசுப்புகிறார்கள். சரி, பேய் எழுந்து நம்மை பயமுறுத்தும் என்று பார்த்தால்.. ம்ஹும். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாறி மாறி ஓடுகிறதே தவிர, நம்மை பயமுறுத்தும் நோக்கம் அந்தப் பேய்க்கு சுத்தமாக இல்லை.

இந்தக் கொடுமைக்கு நடுவில், காமெடி என்ற பெயரில் மொக்கை ஒன்-லைனர்களை பேசி கடுப்பேத்துகிறார்கள். அக்ஷய் குமார், கியாரா ஆத்வானி என பெரிய நடிகர்கள் இருந்தும் யாருடைய நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பள்ளிக்கூட நாடகங்களில் நடிக்கும் மாணவர்களின் நடிப்பே தேவலை என்ற வகையில்தான் வந்து போயிருக்கிறார்கள். லக்ஷ்மியாக நடித்திருக்கும் ஷரத் கேல்கர் மட்டுமே ஒரே விதிவிலக்கு.

கதைப்படி கதாநாயகியின் பெற்றோருக்கு 25வது திருமண நாள் என்கிறார்கள். கதாநாயகிக்கே ஒரு இருபத்து ஐந்து வயது இருக்கும். இது தவிர, அவருக்கு 30 - 35 வயதில் அண்ணன் வேறு இருக்கிறார். எப்படி? இப்படியெல்லாம் செய்தால் பேய் குழம்பிவிடாதா?

சம்பந்தா சம்பந்தமில்லாமல் பாடல்கள் வருகின்றன. இருந்தாலும் "ஃபுர்ஜ் கலீஃபா" பாடலும் "பாம் போலே" பாடலும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கின்றன.

சமீபத்தில் வந்த பேய்ப் படங்களில் ஒரு காட்சியில்கூட திகிலை ஏற்படுத்தாத ஒரு பேய்ப் படம் இதுவாகத்தான் இருக்கும். இரண்டு மணி நேரம் வேஸ்ட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: