அர்னாப் கோஸ்வாமி: இடைக்கால மனு தள்ளுபடியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு
(இன்றைய நாளில் உலக அளவிலும், இந்தியா மற்றும் தமிழகத்திலும் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம்.)

2018-ம் ஆண்டு அன்வே நாயக் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிவின் ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை நேற்று (9 நவம்பர் 2020, திங்கட்கிழமை) மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்னாப், ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தியது. அப்படி தாக்கல் செய்யப்படும் மனு மீது நான்கு நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் கோஸ்வாமி சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நவம்பர் 7ஆம் தேதி தன்னை கைது செய்ய காவல்துறையினர் வந்தபோது தனது மாமனார், மாமியார், மனைவி ஆகியோரை காவல்துறையினர் உடல் ரீதியாக தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக காவல்துறையினரும் தங்களின் பணிக்கு இடையூறை விளைவித்ததாக அர்னாப் மீது தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது அர்னாப் கைதாகியுள்ள அன்வே நாயக் தற்கொலை வழக்கை முடித்துக் கொள்ளும் அறிக்கையை காவல்துறையினர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், அன்வே நாயக்கின் மனைவி, தனது கணவரின் மரணம் தொடர்பாக விசாரிக்குமாறு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக அன்வே நாயக்கின் மகள் அளித்த புதிய புகார் மனு அடிப்படையில் அந்த வழக்கை மறுவிசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியின் பெயரை அன்வே நாயக் கடிதம் எழுதியது தொடர்பாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான செய்தியை படிக்க:அர்னாப் கோஸ்வாமி: அன்வே நாயக் வழக்கு முதல் பாஜக ஆதரவு வரை
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை விசாரித்தார். அப்போது ஸ்ரீதரை ஜாமீனில் விடுதலை செய்ய சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபராக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளார். குற்றவாளிகளை தாக்கியதில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது இவர் காவல் ஆய்வாளராக இருப்பதால், ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் வழக்கின் விசாரணை பாதிக்கக்கூடும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், "இந்தியாவில் தமிழகத்தில் தான் விசாரணை உயிரிழப்புகள் அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். காவல் நிலைய மரணம் என்பது மனித தன்மையற்ற செயல் இது ஜனநாயகத்திற்கு எதிரானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று" என்று கூறினார்.
"அனைத்து காவல் நிலையங்களிலும் முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். அது முறையாக செயல்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் இதில் விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதி கூறினார்.
மேலும், "புகார் அளிக்க வரும் பொது மக்களின் உரிமைகள் குறித்து ஒவ்வொரு காவல் நிலையத்திலும் முன்பகுதியில் அறிவிப்புப் பலகை வைத்திருக்க வேண்டும். அந்த தகவல் பலகையில் எழுத்துகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.
"இந்த உத்தரவு குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதனை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்" என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- கொரோனா பரவலுக்குப் பிந்தைய சூழலுக்கு தமிழக பள்ளிகள் தயாரா?
- சசிகாந்த் செந்தில்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
- ஜோ பைடனின் முதல் நடவடிக்கை எது? கொரோனா முதல் இனவெறி பிரச்னை வரை
- லக்ஷ்மி: லவ் ஜிஹாத், இந்து கடவுள் இழிவு சர்ச்சையில் அக்ஷய் குமார் படம் - தற்போதைய நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












