அர்னாப் கைது முழு விவரம்: அன்வே நாயக் வழக்கு முதல் பாஜக ஆதரவு வரை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி
ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் மற்றும் பத்திரிகையளர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட காணொளி, சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் இது குறித்த பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
எந்த வழக்கின் கீழ் அர்னாப் கைது செய்யப்பட்டார்?
கான்கார்ட் டிசைன் என்கிற நிறுவனத்துக்கு தான், மும்பையில் இருக்கும் ரிபப்ளிக் டீவி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் ஸ்டூடியோக்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இந்த கான்கார்ட் டிசைன் என்கிற கம்பெனியின் நிர்வாக இயக்குநர் தான் அன்வே நாயக். கடந்த மே 2018-ல், அன்வே நாயக் மற்றும் அவரது தாயார், ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் அலிபாக் வீட்டில், இறந்து கிடந்தார்கள்.
அன்வே நாயக் இறந்த போது, அவர் வீட்டில், ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. காவலர்கள், இதை ஒரு தற்கொலை வழக்காக பதிவு செய்தார்கள். அந்த நேரத்தில், இந்த தற்கொலை குறிப்பு நிரூபிக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Reuters
அக்ஷதா தரப்பு
தன் கணவர் அன்வே நாயக்குக்கு, அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக் & நிதிஷ் சர்தா ஆகியோர்கள், கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என, அன்வே நாயக்கின் மனைவி அக்ஷதா சொல்லி இருக்கிறார்.
90% பணம் கொடுத்துவிட்டோம்
அன்வே நாயக்குக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில், 90 சதவிகித பணத்தை செலுத்திவிட்டதாகவும், பாக்கி வேலைகளைச் செய்யாததால், மீதமுள்ள 10 சதவிகித பணத்தைக் கொடுக்கவில்லை என, அர்னாப் கோஸ்வாமியின் ஏ ஆர் ஜி அவுட்லையர் மீடியா பிரைவேட் லிமிடெட் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள். காவல் துறை தான், அன்வே மாலிக்குக்கு அர்னாப் தரப்பு பணத்தைக் கொடுத்ததா இல்லையா என்பதைக் விசாரிக்க வேண்டும்.
பாஜக ஆட்சி - போதுமான ஆதாரம் இல்லை - மூடப்பட்ட வழக்கு

பட மூலாதாரம், Getty Images
காவல் துறை, கடந்த ஏப்ரல் 2019-ல், அர்னாபுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என, இந்த வழக்கை மூடக் கோரி அறிக்கை தாக்கல் செய்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்த சம்பவங்கள் எல்லாம் மகாராஷ்டிராவை, பாஜக ஆட்சி செய்து கொண்டு இருக்கும் காலத்தில் நடந்தவை. 2019ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின், பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து, சிவ சேனை கட்சி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
உள்துறை அமைச்சரிடம் முறையிட்ட அக்ஷதா
ஆட்சி மாறிய பின்பும், அன்வே நாயக்கின் மனைவி அக்ஷதா, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கைச் சந்தித்தார். முன்பு இருந்த பாஜக அரசு, அர்னாப் கோஸ்வாமிக்கு நெருக்கமாக இருந்ததால், தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என, உள் துறை அமைச்சரிடமே சொன்னார். அனில் தேஷ்முக்கும், உடனடியாக மறு விசாரணைக்கு உத்தரவிட்டார். அதோடு சிஐடி விசாரணையையும் அறிவித்தார். மீண்டும் ராய்காட் மாவட்ட காவல் துறை, தன் விசாரணையைத் துவங்கியது.
அர்னாப் கைது
இந்த விசாரணையின் ஒரு பகுதியாகத் தான், ராய்காட் காவல் துறை, மும்பைக்கு வந்து அர்னாப் கோஸ்வாமியை, அன்வே நாயக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்கின் கீழ் குற்றம்சாட்டி கைது செய்தார்கள். அர்னாபை கைது செய்ய காவல் துறையினர் சென்றபோது, பெரிய நாடகமே நடந்து இருக்கிறது.
அர்னாப் கைது காணொளி

பட மூலாதாரம், ANI
அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்படும் காணொளியிலேயே, காவல் துறையினரால், அர்னாப் தள்ளப்படுவதைப் பார்க்க முடிகிறது. அர்னாப் எல்லா சட்ட உரிமைகளையும் பெறலாம், இப்போது தங்களோடு ஒத்துழைக்குமாறு காவலர்கள் சொல்வதும், வீடியோவில் தெரிகிறது.
காவல்துறையினர், தன்னை உடல் ரீதியாக தாக்கினார்கள் என்றார் அர்னாப். ஆனால் நீதிமன்றம், அர்னாப் கோஸ்வாமியின் குற்றச்சாட்டை ஊக்குவிக்கவில்லை.
இந்த வழக்கை சட்ட ரீதியாகப் பார்க்கும் போது, இது ஒரு கிரிமினல் வழக்கு. இதற்கும், அர்னாபின் பத்திரிகையாளர் வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இந்த வழக்கை நாம் தனித் தனியாகப் பார்க்க முடியாது. காரணம், இந்த பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருந்த போது, பல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தது. எனவே அதன் சூழலையும் நாம் பார்க்க வேண்டும்.
பாஜக சார்பு
ரிபப்ளிக் டீவியைத் தொடங்கிய பின், ராஜிவ் சந்திரசேகர் பாஜகவில் இணைந்தார். அர்னாப் கோஸ்வாமி பாஜக பக்கம் சாய்வதாக குற்றம்சாட்டப்பட்டார். அர்னாப் எடுத்துப் பேசும் பிரச்சனைகள் எல்லாமே சிவ சேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சிப்பதாகவே இருந்தது. சமீப காலங்களில் அர்னாப் கோஸ்வாமி, மத்தியில் ஆளும் பாஜகவை அதிகம் விமர்சிக்கவில்லை.
ஆக, அன்வே நாயக் வழக்கு மூடப்பட்ட போது, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்தது. அர்னாப் பாஜகவை அதிகம் விமர்சிக்கவில்லை. தற்போது அன்வே நாயக் வழக்கை மீண்டும் திறந்து இருக்கிறார்கள். சிவ சேனா - தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமி, அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அர்னாப் கோஸ்வாமி, ஆதித்யா தாக்கரேவை, சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் திஷா சலியன் மரணத்தில் தொடர்புபடுத்தி, நியாயமற்ற முறையில் குறிவைத்து தாக்குகிறார் என்கிறார்கள், சிவ சேனா கட்சித் தலைவர்கள்.
தற்போது, பல்வேறு வழக்குகள் தன் மீது தொடுக்கப்பட்டு, வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. பத்திரிகையாளனாக தான் கேட்கும் கேள்விகளுக்கு, குறிவைத்து தாக்கப்படுவதாக சொல்லி இருக்கிறார் அர்னாப்.
மகாராஷ்டிரா சட்ட சபையில், அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக, ஒரு சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர், உரிமை மீறல் தீர்மானத்தை முன் மொழிந்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதை எதிர்த்து, அர்னாப், உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்கும் வரை, இந்த வழக்கின் கீழ், அர்னாபை கைது செய்யக் கூடாது என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, மகாராஷ்டிர சட்ட சபைச் செயலரிடம் சொல்லி இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அர்னாப் சிறைவாசம்
ஏற்கனவே, அன்வே நாயக் தற்கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவராக, நீதித் துறை காவலில், அர்னாப் கோஸ்வாமி அலிபாக் சிறையில், சில இரவுகளைக் கழித்துவிட்டார். அர்னாப் கோஸ்வாமியை, அரசு பள்ளி ஒன்றில் வைத்திருக்கிறார்கள். அது ஒரு கொரோனா தனிமைப்படுத்தும் மையம். சிறைவாசிகளுக்கு கொரோன பரவாமல் இருக்க, குற்றம்சாட்டப்பட்டவர்களை, சிறையில் வைக்காமல், இந்த பள்ளியில் வைத்திருக்கிறார்களாம். அன்வே நாயக் வழக்கில், தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி இருக்கிறார் அர்னாப். இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்துக் கொண்டு இருக்கிறது.
அர்னாப் Vs அர்னாப்
பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்கள், அர்னாப் கைதை இரண்டு விதமாகப் பார்க்கிறார்கள்.
ஒரு சாரார், அர்னாப் உண்மையை நோக்கி, மாற்றத்துக்காக போராடுபவர், அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து கேள்வி எழுப்ப தயங்காதவர் என்கிற ரீதியில் பார்க்கிறார்கள்.
மற்றொரு சாரார், அர்னாப் கோஸ்வாமி செய்வதை பத்திரிகையியலே இல்லை. அர்னாப், பாஜாகவுக்கு எதிரானவர்களிடம் மட்டுமே கேள்வி எழுப்புகிறார். பாஜகவின் அரசியல் கருத்துக்களை முன் எடுக்கிறார் என்கிறார்கள்.
எது எப்படியோ, அர்னாப் கோஸ்வாமிக்கு, பாஜகவின் ஆதரவு இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அர்னாப் கைது செய்யப்பட்ட அன்று, உள் துறை அமைச்சர் தொடங்கி ஜார்கண்ட் முதலமைச்சர் வரை, பலரும் அர்னாபுக்கு ஆதரவாக ட்விட் செய்து இருந்தது நினைவு கூரத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












