ராமநாதபுரத்தில் நூறு ஏக்கரில் புதிதாக அலையாத்தி காடுகள் – சுற்றுச்சூழலை காக்க ஒரு புதிய முயற்சி

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ராமநாதபுரம் வனத்துறை சார்பில், கடலோர கிராமங்களில் வனப்பரப்பை விரிவுபடுத்தவும், உயிர் பல்வகைத் தன்மை அதிகரிக்கும் வகையிலும் 100 ஏக்கரில் புதிதாக அலையாத்தி (மாங்குரோவ்) காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கையின் வரப்பிரசாதம் அலையாத்தி காடுகள்
கடலில் ஏற்படும் பேரலைகளால் குடியிருப்பு பகுதிகளின் பாதிப்பை தடுப்பதோடு, நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்கும் வகையில், இயற்கையின்வரப்பிரசாதமாக, 'அலையாத்தி காடுகள்', எனப்படும் மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன.
மண் அரிப்பை தடுத்தல், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருத்தல், மீன்வளத்தை அதிகரித்தல் என அலையாத்தி காடுகளின் பங்கு அதிகமாக இருக்கிறது. சுனாமி ஏற்பட்ட போது அலையாத்தி காடுகள் உள்ள பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அலையாத்தி காடுகளை அமைக்கும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அலையாத்தி காடுகளில் இவ்வளவு வகைகளா!

அலையாத்தி காடுகளை பொறுத்தமட்டில் எல்லா இடங்களிலும் வளர்க்க முடியாது. ஆற்றுநீர், கடல்நீர் இரண்டும் சேரும் இடங்களில் தான் அலையாத்திகாடுகள் வளரும். மொத்தம் அலையாத்தி காடுகள் 8 வகையில் உள்ளன. இந்திய அளவில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 100 ஹெக்டேர் பரப்பில் அலையாத்திகாடுகள் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது காரங்காடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக இயற்கை தந்தகொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் அலையாத்தி காடுகள் அடர்த்தியாக உள்ளன. இவை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.
காரங்காட்டில் அலையாத்தி காடுகள்
இப்பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் தாழைகள், நட்சத்திர மீன்வகைகள், அரிய வகை நண்டுகள், கடல் அட்டைகள்போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன.
மேலும் இங்குள்ள சதுப்புநில காடுகள் பறவையினங்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்ததாக இருப்பதால் இங்கு கொக்கு, நீர் காகம், நாரை, அரிவாள் மூக்கன் நாரை, உள்ளான், நத்தை கொத்தி நாரை, சிட்டு, வண்ண வண்ண குருவிகள் போன்ற பலவகையானஉள்நாட்டு பறவைகளும் அதே போல் பிளமிங்கோ போன்ற வெளி நாட்டு பறவைகளும் வலசை வருகின்றன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக புவி வெப்பமயமாதல்,கடலில் கலக்கும் கழிவுகளால் அலையாத்தி காடுகளின் பரப்பளவு சுறுங்கி வருவதுடன்காடுகளில் உள்ள மரங்களும் அழிந்து வருகிறது. எனவே ராமநாதபுரம் வனத்துறையினரால் காந்திநகர், கடலூர், காரங்காடு ஆகிய இடங்களில் 100 ஏக்கரில் தரிசு நிலத்தில் ரூ.10 லட்சத்து 64ஆயிரம் செலவில் அலையாத்தி காடுகள் வளர்க்கப்படுகிறது. இதற்காக கடல் நீரை கொண்டு வர வாய்க்கால் தோண்டி, நீர் தேங்காமல் சுழற்சியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மணோலி தீவில் விதைகள் சேகரிப்பு
இது குறித்து ராமநாதபுரம் வனசரகர் சதீஸ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் காரங்காடு அருகாமையில் உள்ள கடற்கரை கிராமங்களில் அவிசீனியா, மெரைனா வகை சதுப்புநில காடுகள் வனத்துறையினரால் வளர்க்கப்படுகிறது. மணோலி தீவிலிருந்து ரைசோபோரா ஏபிகுலேட்டா சதுப்புநில செடி விதைகள் கொண்டு வரப்பட்டு உப்பூர் அருகே கடலூர் பகுதியில் விதைக்கப்பட்டு 95 சதவீதம் முளைத்துள்ளன.
இரட்டைப்பாலம் பகுதியில் மணல் மேடாகிபோன நிலங்களை ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் செலவில் சுத்தம் செய்து கால்வாயை தூர்வாரி அலையாத்தி காடுவளர்க்கப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வனப்பரப்பு விரிவுபடுதலுடன், உயிர் பல்வகைத் தன்மை அதிகரிக்கும். இதனால் மீன்கள், நண்டுகள், நுண்ணுயிரிகள் உற்பத்தி வாழ்விடமாக மாறும் அது மட்டுமின்றி நிலத்தடி நீர் உவர்தன்மை மாறும்," என்றார் ராமநாதபுரம் வனச்சரகர் சதீஸ்
இது குறித்து காரங்காடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெரால்டு மேரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "சுனாமி வந்த போது எங்கள் மீனவ கிராமத்தை சுற்றியுள்ளதுறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மற்றும் துறைமுகங்கள் சேதமடைந்தது ஆனால், இந்த அலையாத்தி காடுகளால் எங்கள் கிராமத்துக்கு எந்த வித பாதிப்பும் வரவில்லை."
150 கி.மீ., வேக கடல் அலைகளை தாங்கும் சக்தி
"கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அலையாத்தி காடுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் எங்கள் கிராம மக்கள் அலையாத்தி காடுகளில் உள்ளமரங்களை விறகுக்காக வெட்டி பயன்படுத்தி வந்தனர். இதனால் மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு வனத்துறையினர் அலையாத்தி காடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதையடுத்தது மக்கள் அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதை கைவிட்டுவிட்டுபாதுகாக்க தொடங்கினர்." என்கிறார் ஜெரால்ட் மேரி.
பிற செய்திகள்:
- பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை: எப்படி நடந்தது அந்த `அதிசயம்` - மருத்துவரின் ஆச்சரிய அனுபவம்
- 'என் பெற்றோர் மதுவிற்கு அடிமை..' பிக் பாஸ் பாலாஜி கண்ணீர்
- கேதர் ஜாதவ் நீக்கம், தமிழக வீரர் சேர்ப்பு - CSK வெற்றிப்பாதைக்கு திரும்புமா?
- KKIP Vs KKR: 360 டிகிரியில் சுழன்று விளாசிய தினேஷ் கார்த்திக் - பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கொல்கத்தா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












