விவசாயிகள் மசோதா: பஞ்சாப், ஹரியாணாவில் கடும் எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம், ANI Photo
- எழுதியவர், மான்சி தாஸ்
- பதவி, பிபிசி
கடந்த வாரம், விவசாயத்துடன் தொடர்புடைய மூன்று முக்கியமான மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதன் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் கடுமையான எதிர்ப்பு காணப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் ஆங்காங்கே விவசாயிகள் அதை எதிர்க்கின்றனர்.
ஆனால், கடந்த ஆண்டு விவசாயிகள் நடைப்போராட்டம் நடந்த மகாராஷ்டிராவிலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் வன்முறை போராட்டங்கள் நடந்த மத்திய பிரதேசத்திலும், விவசாய மசோதக்களுக்கான எதிர்ப்பு குறைவாகவே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மூன்று மசோதாக்களுக்கு சில மாநிலங்களில் எதிர்ப்பு காணப்படுவதைத்தவிர உண்மையில் அவ்வளவாக எதிர்ப்பு இல்லையா? இது உண்மை என்றால், இதன் பின்னணியில் என்ன இருக்கிறது?
இந்த மூன்று மசோதாக்கள் தொடர்பாக எதிர்கட்சிகள் அரசை தாக்கி வருகின்றன. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று எதிர்கட்சிகள் அழைக்கும் அதே வேளையில், அவை விவசாயிகளின் நலனுக்கானவை என்று அரசு கூறுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாபில் பாஜகவின் கூட்டணி கட்சியான அகாலிதளம் , அதனுடன் உறவை முறித்துக்கொள்வது குறித்து சிந்தித்து வருகிறது. இந்த மசோதா, விவசாயிகளுக்கு எதிரானவை அல்ல என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Bharat Bhushan/Hindustan Times via Getty Images
விவசாய சந்தைகளை அகற்ற அரசாங்கம் விரும்புகிறது, இது நாட்டின் உணவுப் பாதுகாப்பை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதன் மூலம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) தராமல் இருக்க அரசு நினைக்கிறது என்று அவை கூறுகின்றன.
எதிர்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டிற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி, தற்போதுள்ள குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி) மற்றும் அரசாங்க கொள்முதல் முறை தொடர்ந்து இருக்கும் என்று சமூக ஊடகங்களின் மூலம் உறுதியளித்தார்.
ஆனால், விவசாயிகள் அவருடைய உத்தரவாதங்களில் திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. மோதி உறுதியளித்த பிறகும், அவர்கள் போராட்டம் நடத்தி அரசை எதிர்க்கின்றனர்.
தற்போதுள்ள எம்.எஸ்.பி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று பிரதமர் மோதி விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் எதிர்ப்புகள்

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images
சில இடங்களில் எதிர்ப்பு ஏற்படுவதற்கு, அங்குள்ள அரசியல் மற்றும் உழவர் அமைப்புகள் காரணமாக உள்ளன. ஆனால், தானியங்களை கொள்முதல் செய்யும் அரசு முறையுடனும் இதற்கு தொடர்பு உள்ளது என்று ஹிந்த் கிசானின் முதன்மை ஆசிரியரும் விவசாய விவகாரங்களில் நிபுணருமான ஹர்வீர் சிங் கூறுகிறார்.
"நீங்கள் வேளாண் இயக்கத்தின் வரலாற்றைப் பார்த்தால், இயக்கத்தின் மையம் பெரும்பாலும் பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசம் என்பதை காண்பீர்கள்."என்று அவர் விளக்குகிறார்.
"மகாராஷ்டிராவை எடுத்துக்கொண்டால், கரும்பு மற்றும் வெங்காயம் பயிரிடப்படும் மேற்குப் பகுதியில்தான் இந்த இயக்கங்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. மத்திய பிரதேசத்தில் போராட்டம் நடக்காது என்று சொல்லமுடியாது. விவசாயிகளின் ஒரு வலுவான அமைப்பு அங்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் அங்கேயும் சந்தைகளில் எதிர்ப்பு நிலவுகிறது, சந்தை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் தெரிவிக்கிறார்.
"மகாராஷ்டிராவில் விவசாயிகள் ஒரு பெரிய வாக்கு வங்கி. ஆனால் இங்கு அதிகமான கரும்பு விவசாயிகள் உள்ளனர். கரும்பு வாங்குவதற்கு ஒரு நியாயமான உயர் விலை அளிக்கும் (எஃப்ஆர்பி) முறை இங்கு உள்ளது. விலையை நிர்ணயிக்க கரும்பு கட்டுப்பாட்டு உத்தரவு (sugarcane control order) இப்போதும் உள்ளது. உத்தரபிரதேசத்திலும் ஏராளமான நிலம், தோட்டப்பயிருக்காக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எம்.எஸ்.பி உடன் எந்த தொடர்பும் இல்லை, "என்று ஹர்வீர் சிங் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், STR/NurPhoto via Getty Images
"இந்த மசோதாக்களால் எங்கெல்லாம் நேரடியாக பாதிப்பு ஏற்படுமோ அந்த பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அவை விவசாயிகளை நேரடியாக பாதிக்காத இடங்களில், அதிக எதிர்ப்பு காணப்படவில்லை," என்று அவர் சொல்கிறார்.
விவசாயிகள் இதை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், அது அவர்களின் நலனுக்கு ஏற்றவை அல்ல என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் சந்தை இதை எதிர்க்கவில்லை, ஏனெனில் அவை சந்தை முதலாளிகளுக்கு லாபம் தரும் என்று வேளாண் நிபுணர் தேவிந்தர் ஷர்மா கூறுகிறார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளின் பிரச்சனைகள், நிலைமைகள் மற்றும் அரசியல் வேறுபட்டவை. எனவே அவர்களின் எதிர்ப்பை பார்க்கும் கண்ணோட்டத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் விளக்குகிறார்.
"அரசு கொள்முதல் செய்யும் உணவு தானியங்களில் சுமார் 90 விழுக்காடு, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் இருந்து வருகிறது. நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எம்எஸ்பி என்றால் என்ன என்பதுகூடத்தெரியாது. இப்படிப்பட்ட சூழலில், இது பற்றிய பேச்சு ஏன் நடக்கிறது என்பதை அவர்களுக்கு விளக்க அதிக காலம் ஆகும், " என்று அவர் கூறுகிறார்.
"நேரடி தாக்கத்தை சந்திப்பவர், முதலில் எதிர்ப்பார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மதிப்பீட்டின்படி, நாட்டில் 6 சதவிகித விவசாயிகள் மட்டுமே எம்எஸ்பி பெறுகிறார்கள். ஆனால் 94 சதவிகித விவசாயிகளுக்கு ஏற்கனவே எம்எஸ்பி கிடைக்கவில்லை. அவர்கள் சந்தையைச் சார்ந்து இருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும், " என்று தேவிந்தர் சர்மா கூறுகிறார்.
இந்திய வேளாண் துறை தொடர்ந்து நெருக்கடியுடன் போராடி வருவதாக அவர் சொல்கிறார். ஆனால் இந்த நெருக்கடியிலிருந்து தப்பிய ஒரு சில விவசாயிகள் மட்டுமே உள்ளனர். "உத்தரவாத வருமானம் கிடைப்பதால் எம்.எஸ்.பி பெறும் 6 சதவிகித விவசாயிகள், இந்த நெருக்கடியில் இருந்து தப்பியுள்ளனர்," என்று அவர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், STR/NurPhoto via Getty Images
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் அரசியலானது, விவசாயிகளுடன் இணைந்திருப்பதாகவும், இந்த காரணத்திற்காக கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக வருவது கட்டாயமாகிவிட்டது என்றும் ஹர்வீர் சிங் கூறுகிறார்.
"இதைப் புரிந்து கொள்ள, என்ன விவசாயம் எங்கு செய்யப்படுகிறது என்பதையும், அரசு அதிக தானியங்களை எங்கிருந்து வாங்குகிறது என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். ஆகவே இந்த பிரச்சனை பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளை நேரடியாக பாதிக்காது," என்று அவர் விளக்குகிறார்,
"ஆனால் இது சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்வரும் நாட்களில் இயக்கம் பல மாநிலங்களில் தீவிரமடையக்கூடும் என்று நான் நினைக்கிறேன்."என்று அவர் கூறுகிறார்.
எம்எஸ்பி மற்றும் விவசாயிகள்
நாட்டின் விவசாயிகளில் 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தங்கள் விளைபொருட்களை எம்.எஸ்.பி முறையில் விற்கின்றனர் என்று 2012-13 ஆம் ஆண்டின் என்.எஸ்.எஸ்.ஓ( நேஷனல் சாம்பிள் சர்வே ஆபிஸ்) அறிக்கை தெரிவிக்கிறது.
மறுபுறம், தானியங்களை வாங்குவதற்கான அரசின் நடவடிக்கையின் நன்மை, அதிக விவசாயிகளையோ, அதிக மாநிலங்களையோ அடையவில்லை என இந்திய உணவுக்கழகத்தின் செயல்திறன் மற்றும் நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சாந்தகுமார் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து அரசு அதிகம் வாங்கும் தானியங்களில் கோதுமை மற்றும் அரிசி அடங்கும். மேலும் தானியங்கள் கொள்முதல் குறித்த தரவுகளைப் பார்த்தால், மொத்த உற்பத்தி மற்றும் மாநிலத்தின் கொள்முதல் அடிப்படையில் பஞ்சாபும் ஹரியாணாவும், மற்ற மாநிலங்களவை விட சிறந்த நிலையில் உள்ளது தெளிவாகிறது.

பட மூலாதாரம், Bharat Bhushan/Hindustan Times via Getty Images
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் அறிக்கையின்படி, கடந்த சில ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் மொத்த நெல் உற்பத்தியில் 80 சதவிகிதத்தை அரசு கொள்முதல் செய்துள்ளது. அதே நேரம் கோதுமை விஷயத்தில், இந்த இரண்டு மாநிலங்களிலிருந்தும் மொத்த உற்பத்தியில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக அரசாங்கம் வாங்கியது. ஆனால் மற்ற மாநிலங்களின் நிலை அப்படி இல்லை. மற்ற மாநிலங்களில், மொத்த உற்பத்தியில் ஒரு சிறிய பகுதியை அரசாங்கம் வாங்கிவருகிறது. ஆகவே முன்பிருந்தே விவசாயிகள் அங்குள்ள சந்தையை நம்பியுள்ளனர்.
பிஹார் மற்றும் சந்தை விஷயங்கள்
விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக 2006 ஆம் ஆண்டில் ஏபிஎம்சி சட்டத்தை (வேளாண் உற்பத்தி சந்தைக் குழு அதாவது விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை சந்தைக் குழு) ரத்து செய்த முதல் மாநிலம் பிஹார். இதன் பின்னர், தனியார் துறைக்கு வழி தெளிவானது.
ஆனால் மாநிலம் உண்மையில் பயனடைந்தது என்று சொல்ல முடியாது. இது அங்கு விவசாய விளைபொருட்களை விற்கும் முறையை கடுமையாக பாதித்துள்ளது மற்றும் சந்தை மீதான சிறு விவசாயிகளின் சார்பு அதிகரித்துள்ளது என்று 2013 ஆம் ஆண்டின் இந்திய வாழ்வாதார நிலை குறித்த அறிக்கை கூறுகிறது.
ஐடியாஸ் ஃபார் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, 2001-02 முதல் 2016-17 வரை, பிகாரின் விவசாய வளர்ச்சி விகிதம் நாட்டின் சராசரி விவசாய வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக உள்ளது.

பட மூலாதாரம், NARINDER NANU/AFP via Getty Images
அந்த அறிக்கையின்படி, ஏபிஎம்சி அகற்றப்பட்ட பின்னர், நெல், கோதுமை, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை அதிகரித்திருப்பது பதிவு செய்யப்பட்டன. ஆனால் விவசாயிகளின் வருமானத்தில் நிச்சயமற்ற தன்மையும் சமமாக அதிகரித்தது. அதே நேரத்தில், விலைகளில் நிச்சயமற்ற தன்மையும் நீடித்தது. இதன் காரணமாக நஷ்டம் ஏற்படாமல், எவ்வளவு நிலத்தை பயிரிட வேண்டும் என்று விவசாயிகளுக்கு புரியவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மைதான் விவசாய வளர்ச்சி விகிதம் குறையக்காரணம் என்று இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
சமீபத்தில் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது,புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பும் பயணம் தொடங்கியது என்று தேவிந்தர் சர்மா கூறுகிறார். புலம் பெயர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் பிஹாரைச் சேர்ந்தவர்கள். இதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

பட மூலாதாரம், Sameer Sehgal/Hindustan Times via Getty Images
"நாட்டின் 94 சதவிகித விவசாயிகள் சந்தையை நம்பியிருக்கிறார்கள், எம்எஸ்பியை அல்ல என்று பார்க்கும்போது, சந்தை விவசாயிகளுக்கு பயனளித்திருந்தால் கடந்த 70 ஆண்டுகளில் விவசாயிகளின் நிலைமை மேம்பட்டிருக்கும். ஆனால் இது நடக்கவில்லை. விவசாயிகளின் பிரச்சனையை சந்தையால் தீர்க்க முடியாது என்பதை இது குறிக்கிறது," என்று அவர் கூறினார்.
"இந்த மூன்று மசோதாக்கள் மூலம், தற்போது எம்எஸ்பி காரணமாக சிறந்த நிலையில் இருக்கும் பஞ்சாப் விவசாயிகளை, சந்தையின் சவால்களை தொடர்ந்து எதிர்கொண்டு வரும் பிஹார் விவசாயிகளின் நிலைக்கு அரசு கொண்டு வந்துவிடும் " என்று அவர் தெரிவித்தார்.
மசோதாவை கொண்டு வருவதற்கு முன் அரசு விவசாயிகளின் கருத்துக்களை கேட்கவில்லை, சந்தையை நம்பி அவர்களை கைவிட்டுவிட்டதாக அவர் கூறுகிறார்.
எம்எஸ்பி மற்றும் உணவு பாதுகாப்புடன் அதன் உறவு
இந்தியாவில் இரண்டாம் உலகப் போரின்போது எழுந்த உணவு நெருக்கடியைச் சமாளிக்க, 1942 ஆம் ஆண்டில் உணவுத் துறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, 1947 ஆகஸ்ட் 29 ஆம் தேதி இது உணவு அமைச்சகமாக மாற்றப்பட்டது. 1960 ஆம் ஆண்டில், இந்த அமைச்சகத்தின் கீழ் உணவுத் துறை மற்றும் வேளாண் துறை ஆகிய இரண்டு துறைகள் உருவாக்கப்பட்டன.
உணவு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் உணவு தானியங்களை கொள்முதல்செய்யும் பணி உணவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது . சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக, நாடு 60 களின் முற்பகுதியில் கடுமையான தானிய பற்றாக்குறையை எதிர்கொண்டது.

பட மூலாதாரம், NARINDER NANU/AFP via Getty Images
இந்த காலகட்டத்தில் விவசாயத் துறைக்கு கொள்கைகள் வகுக்கப்பட்டன. உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டது.
இதன் பின்னர், தானியங்களை வாங்குவதற்காக அரசு, 1964 ஆம் ஆண்டில் உணவு கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்திய உணவு கார்பரேஷனை உருவாக்கியது. விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் (குறைந்தபட்ச ஆதரவு விலை) தானியங்களை வாங்குவதற்காக, வேளாண் விலை ஆணையம் ஓராண்டிற்குப்பிறகு உருவாக்கப்பட்டது.
பின்னர், பொது விநியோக முறையின் (பி.டி.எஸ்) கீழ், அரசாங்கம் இந்த தானியங்களை தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதோடு கூடவே , உணவுப் பாதுகாப்பிற்காக உணவு தானியங்களையும் சேமிக்கிறது.
பொது விநியோக முறையைப் பொருத்தவரை, இது இந்தியாவில் ஒரு ரேஷன் முறையைப் போல இருந்தது. இது சுதந்திரத்திற்கு முன்பு சில நகர்ப்புறங்களில் மட்டுமே இருந்தது. ஆனால் 1951 ஆம் ஆண்டில் இது நாட்டின் சமூகக் கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு, முதல் ஐந்தாண்டு திட்டத்தில் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது, அது மேலும் விரிவாக்கப்பட்டது.
வேளாண் விலை ஆணையம் உருவாக்கப்பட்ட பின்னர், பி.டி.எஸ் மேலும் முக்கியத்துவம் பெற்றது. ஏனெனில் இது ஒருபுறம் விவசாயிகளுக்கு ஒரு நிச்சயமான வருமானத்தைப் பெறுவதற்கான நம்பிக்கையை அளித்தது. மறுபுறம் உணவு தானியங்கள் தேவைப்படுபவர்களுக்கு குறைந்த விலையில் அவை வழங்கப்பட்டன. கூடவே உணவுப் பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டது.
இந்த மூன்று மசோதாக்களும் விரிவான பலனைத்தருமா?

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/AFP via Getty Images
தற்போதுள்ள எம்எஸ்பி மற்றும் உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் வழிமுறையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அரசு கூறியுள்ளது என்று மும்பையைச் சேர்ந்த இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ரிசர்ச் நிறுவனத்தின் வேளாண் பொருளாதார நிபுணர் சுதா நாராயணன் தெரிவிக்கிறார்.
"இந்த மசோதாக்களில் அரசு என்ன சொல்கிறது என்பதைப் பற்றி விவசாயிகள் கவலைப்படவில்லை, மாறாக இதில் கூறப்படாதவை பற்றி கவலைப்படுகிறார்கள் ," என்று அவர் குறிப்பிடுகிறார்.
"இந்த மசோதாக்கள் நடைமுறைக்கு வந்தால், ஏபிஎம்சி ஒழிக்கப்படும் என்றும் பின்னர் அரசு, இந்த அறிக்கையின் அடிப்படையில் , தானிய கொள்முதலின் முழு செயல்முறையையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்றும் விவசாயிகள் மத்தியில் ஒரு அச்சம் உள்ளது என்று நான் நினைக்கிறேன்," என்ற சாந்தகுமார் குழு அறிக்கையை சுட்டிக்காட்டி, இவர் மேலும் தெரிவிக்கிறார்.
இந்த மசோதாக்களில் இதுபோன்ற எதுவும் வெளிப்படையாக எழுதப்படவில்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் இந்த மசோதாக்கள் வேளாண்துறையின்ன் பெரிய சீர்திருத்தங்களின் திசையில் ஒரு முக்கிய படியாகும். இது அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாகும்.
"சாந்தகுமாரின் அறிக்கையில் அரசு, தானியங்களை வாங்குவதற்கான முறையை முடிவுக்குக் கொண்டுவந்து, பொது விநியோக முறையை கைவிட்டு பணமாக அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தான் இந்த மசோதாவின் விரிவான நோக்கம். இந்த மசோதாக்கள் அந்த செயல்முறையைத் தொடங்குவதற்கான ஒரு பயிற்சியாகக் கருதப்படுகின்றன. இது கவலைக்குரிய விஷயம், "என்று அவர் சொல்கிறார்.
"இதன் மூலம் ஏபிஎம்சி ரத்து செய்யப்படும் என்பது குறித்துதான் நான் அதிகமாக கவலைப்படுகிறேன். மேலும் உணவு தானியங்களின் விலையை நிர்ணயிக்கும் ஒரு முழுமையான அமைப்பு இல்லாதிருப்பது, விவசாயிகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், விவசாயிகளுக்கான விலைகளின் அளவுகோல் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் சந்தைகளை நம்பியிருப்பது மேலும் அதிகரிக்கும்" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"சாந்தகுமார் குழு அறிக்கையின்படி அரசு, தனது சார்பில் தானியங்களை வாங்குமாறு, தனியார் துறை நிறுவனங்களிடம் கேட்கக்கூடும். எனவே பொது விநியோக முறையில் தாக்கம் இருக்கும் என்றும் கூற முடியாது."
எஃப்.சி.ஐ தொடர்பாக சாந்தகுமாரின் பரிந்துரைகளை செயல்படுத்துவது அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று நுகர்வோர் விவகார அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், 2019 ஜூன் மாதம் கூறினார்.
பொது விநியோக முறையின் கீழான உள்ளடக்கம் , 70 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜூன் மாதம் பொருளாதார ஆய்வில் மோதி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் கூறியபோது, இந்த திசையில் அரசு முன்னேறிச்செல்லக்கூடும் என்ற அறிகுறி கிடைத்தது. தானியங்கள் கொள்முதலைக்குறைத்து நேரடி பண அனுப்பலை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார். சாந்தா குமார் குழு அறிக்கையிலும் இதே போன்ற யோசனைகள் கூறப்பட்டுள்ளன.
எதிர்க்கப்படும் அந்த மூன்று விவசாய மசோதாக்கள் எவை?

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/AFP via Getty Images
இந்த வாரம், மக்களவையில் முன்மொழியப்பட்ட மூன்று மசோதாக்களை அரசு நிறைவேற்றியது.- முதலாவதாக, விவசாயிகள் விளைபொருள் வியாபார மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்தல்) மசோதா 2020. இரண்டாவது, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் தொடர்பான ஒப்பந்த மசோதா, 2020.
மற்றும் மூன்றாவது, அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020.
விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் சந்தைக்கு வெளியே விளைபொருட்களை விற்கும் சுதந்திரம் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்க, முதல் மசோதா வகை செய்கிறது.
இரண்டாவது மசோதா விவசாய ஒப்பந்தங்கள் தொடர்பான தேசிய கட்டமைப்பிற்கானது. விவசாய பொருட்களின் விற்பனை, பண்ணை சேவைகள், விவசாய வணிக நிறுவனங்கள், பதப்படுத்தல், மொத்த விற்பனையாளர்கள், பெரிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆகியோருடன் இணைய விவசாயிகளுக்கு இது வலு அளிக்கிறது.
மூன்றாவது மசோதாவில், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து அகற்றுவதற்கான ஏற்பாடு உள்ளது.
இந்த மசோதாவின் விதிகள் காரணமாக சந்தையில் போட்டி அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் சரியான விலையைப் பெற இது உதவும் என்று நம்பப்படுகிறது.
பிற செய்திகள்:
- திமுக எம்.பி கதிர் ஆனந்தை உளவுத்துறை விசாரித்ததா? மக்களவையில் கிளம்பிய புதிய பிரச்சனை - என்ன நடந்தது?
- 'இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர்
- இந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்? - ஜாகிர் நாயக் விளக்கம்
- கொலம்பிய போராளி குழு தலைவரின் தலைக்கு 37 கோடி ரூபாய் விலை வைத்த அமெரிக்கா
- 'அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் வேண்டும்'
- "நான் அணியும் உடைக்காக ஏன் அபராதம் விதிக்கப்பட வேண்டும்?" - சீறும் கம்போடிய பெண்கள்
- ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய தமிழ் அதிகாரி செந்தில்குமார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












