விவசாய மசோதாவுக்கு ஆதரவு: "ரவீந்திரநாத் எம்.பிக்கு தெரிந்தது அவ்வளவுதான்" - எஸ்.ஆர்.பி அளிக்கும் புதிய விளக்கம்

எஸ்ஆர்பி

பட மூலாதாரம், RSTV

விவசாய மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது, அவற்றில் உள்ள தவறுகளை விமர்சிக்க தனக்கு உரிமை உண்டு என்றும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு அவ்வளவுதான் விஷயம் தெரியும் என்றும் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் விவசாய மசோதாவை எதிர்த்துப் பேசியது ஏன்? என்பது குறித்து திங்கட்கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் பேசினார்.

அப்போது அவரிடம் "மக்களவையில் விவசாய மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்ட அதிமுக, மாநிலங்களவையில் எதிராக பேசியிருக்கிறதே. இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?" என கேட்கப்பட்டது.

அதற்கு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், "இரட்டை நிலைப்பாடு எல்லாம் ஒன்றுமில்லை. மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத், அரசியலுக்கு புதியவர். அவருக்கு அந்த அளவுக்குதான் விஷயம் தெரியும். அதனால் அப்படி பேசினார். நான் அரசியலுக்கு புதியவன் இல்லை. விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அது எனக்கும் உண்டு. அதை நான் செய்தேன். மசோதாவை அதிமுக ஆதரித்தது. அதே சமயம் விமர்சிக்கும் உரிமையும் அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமையும் எனக்கு உண்டு." என்று பதிலளித்தார்.

"விவசாய மசோதாக்களில் சில தவறுகள், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காத நிலையில், அதை விமர்சிக்க வேண்டிய தேவை எழுந்தது. அதனால் நான் விமர்சித்தேன். சில குறைகள் இருக்கத்தான் செய்தன. அதை நான் சுட்டிக்காட்டிப் பேசினேன்."

ஆனால், அதற்காக அந்த மசோதாவை எதிர்த்து அதிமுக வாக்களிக்கவில்லையே. விமர்சனம் செய்த அதே சமயம், மசோதாவை நாங்கள் ஆதரித்து வாக்களித்தோம் என்று அவர் விளக்கினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதையடுத்து, "விவசாய மசோதா தொடர்பான உங்களுடைய சொந்த கருத்து, அதிமுகவின் நிலைப்பாடு அல்ல என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியது பற்றி கேட்டதற்கு, அது வைகைச்செல்வனுடைய கருத்தாக இருக்கலாம். அதிமுவின் கருத்து அல்ல" என்று எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கூறினார்.

மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களின் நகலை கிழித்தெறிந்த சில எம்.பி.க்களின் செயல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், "மாநிலங்களவையில் நேற்று நடந்தது துரதிருஷ்டவசமான சம்பவம். உணர்வை வெளிப்படுத்தும் விவகாரத்தில் சில தவறு நடந்தது. இல்லை என்று கூறவில்லை. ஆனால், அதை கொஞ்சம் பொறுமையாக கையாண்டிருக்கலாம்" என்று கூறினார்.

முன்னதாக, மக்களவையில் கடந்த வாரம் விவசாயம் தொடர்பான விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) மசோதா, விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) மசோதா. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அவற்றின் மீதான விவாதத்தில் பேசிய தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத், புதிய மசோதாக்களால் விவசாயிகளளின் வருவாய் இரட்டிப்பாகும் என்றும் இந்த திட்டத்தை கொண்டு வந்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறி அவர் சார்ந்த கட்சியின் ஆதரவை பதிவு செய்தார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

ஆனால், மாநிலங்களவையில் இதே விவசாய மசோதா மீதான விவாதம் நடந்தபோது, "இம்மாதிரி ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வர என்ன நெருக்கடி இருக்கிறது? பெரும்பாலான விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள்தான். ஒப்பந்த முறை விவசாயம் என்பது உலக அளவில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மத்திய அரசானது விவசாயத் துறை சீர்திருத்தங்களை அழித்தொழிக்க இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவசரச் சட்டங்களைக் கொண்டுவருகிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது" என்று எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் பேசினார்.

மேலும், "ஒப்பந்த முறை விவசாயத்தை சட்டபூர்வமாக்க அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது இந்திய விவசாயத் துறையை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எம்என்சிகளுக்கும் தனியார் மயமாக்கம் செய்வதைப் போன்றது. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் விவசாயத் துறையில் நுழைவார்கள். இது உற்பத்தியை அதிகரிக்கும். ஆனால், அதற்கான விலை என்ன? விவசாயிகள் தங்கள் நிலத்திலேயே விவசாயக் கூலிகளாக மாற்றப்படுவார்கள். ஒப்பந்தத்தில் பிரச்சனை வந்தால், அதைத் தீர்க்க விரிவான ஏற்பாடு இருக்கிறது. ஆனால், ஒரு சிறிய விவசாயியால், பெரிய நிறுவனங்களை எதிர்த்து இவற்றைப் பயன்படுத்த முடியுமா?" என்று எஸ்.ஆர்.பி கேள்வியெழுப்பினார்.

இருந்தபோதும், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா நீங்கலாக மற்ற இரண்டு மசோதாக்களும் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: