தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; காவல் ஆய்வாளர் இடைநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தில் வியாபாரி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை மாநில குற்றப்புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) உத்தரவிட்டுள்ளார். அந்த சம்பவத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன். இவர் அந்தப் பகுதியில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி அவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கார் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டார். இதற்குப் பிறகு அவரது உடல் கடக்குளம் காட்டுப்பகுதியில் கிடைத்தது.
இந்த வழக்கை திசையன்விளை காவல்துறை விசாரித்து வந்தது. இந்த விவகாரத்தில் தட்டார்மடம் உசரத்து குடியிருப்பைச் சேர்ந்த திருமணவேல் என்பவருக்கும் செல்வனுக்கும் இடையில் சொத்துப் பிரச்சனை இருந்ததும் இதன் காரணாகவே அவர் கடத்திச் செல்லப்பட்டதும் தெரியவந்தது. தலைமறைவான திருமணவேலை காவல்துறை தேடிவருகிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் தட்டார்மடம் காவல்துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சம்பந்தப்பட்டிருப்பதாக செல்வனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். திருமணவேலின் தூண்டுதலால் செல்வன் மீதும் அவரது சகோதரர் மீதும் காவல்துறை பொய் வழக்குகளைப் பதிவுசெய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் புகார் அளித்தார்.
இதற்குப் பிறகு, திருமணவேல், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ஆனால், ஹரிகிருஷ்ணன், திருமணவேல் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும்; செல்வனின் உடலுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திய செல்வனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர்.
நேற்று மூன்றாவது நாளாக செல்வனின் வீட்டின் முன்பாக அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர், திமுக உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அங்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கை மாநில காவல்துறையின் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி விசாரணைக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டிருக்கிறார். முன்னதாக, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்த ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை, தற்போது இடைநீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீண் குமார் அபினபு உத்தரவிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயரதிகாரி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண நிதி, பசுமை வீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து செல்வனின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- ' சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய பத்திரிகையாளர்': விலகி நிற்கும் சீன அரசு ஊடகம்
- நடுவரின் தவறான தீர்ப்பால் பஞ்சாப் அணியின் வெற்றி பறிபோனதா?
- 'சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய பத்திரிகையாளர்': விலகி நிற்கும் சீன அரசு ஊடகம்
- `தமிழகத்தின் கடன் சுமை இந்த ஆண்டு அதிகரிக்கும்`: ரங்கராஜன் குழு அறிக்கை
- விவசாய மசோதாக்கள் வாக்கெடுப்பில் அமளி: 'எதிர்க்கட்சிகள் எல்லை மீறி விட்டன' - இந்திய அரசு
- புலம்பெயர் தொழிலாளர்களின் இன்னலுக்கு யார் பொறுப்பு - போலிச் செய்திகளா இந்திய அரசா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












