விவசாய மசோதாக்கள் அமளி: 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம்

பட மூலாதாரம், Getty Images
மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள், ஒரு வார காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய நாயுடு அறிவித்துள்ளார்.
ஞாயிறு நடந்த வாக்கெடுப்பின்போது அவைத் தலைவரிடம் மோசமான வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களான திரிணமூல் காங்கிரசின் டெரிக் ஓ ப்ரையன் மற்றும் டோலா சென், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சதாவ், ரிபுன் போரா மற்றும் நசீர் ஹூசைன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளமாறன் கரீம் மற்றும் கே.கே. ராகேஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியவற்றுக்கான மசோதாக்கள் ஞாயிறன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 வாக்கெடுப்புக்கு வரவில்லை.
மசோதா நகல்களை கிழித்த உறுப்பினர்கள்
நேற்று அவை நடந்து கொண்டிருந்தபோது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ ப்ரையன் திடீரென எழுந்து அவைத் தலைவரின் இருக்கை பகுதிக்கு சென்றார். மேலும் விவசாய மசோதாக்களின் பிரதிகளை அவைத் தலைவரின் முன்பு நீட்டி காட்டினார். அவரை முன்னேறி வர வேண்டாம் என அவைத் தலைவர் கூறினார். அப்போது அவரது உதவியாளரும் தடுத்து நிறுத்த முற்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து அமளியில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், RSTV
திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவும் மசோதாக்களின் நகலை கிழித்து எறிந்தார்.
ராஜ்ய சபா தொலைக்காட்சியின் நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம்
இந்த சம்பவத்திபோது ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மாநிலங்களவை அலுவல்களின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான சில செய்திகளும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
"அவர்கள் ஏமாற்றினார்கள். நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் அவர்கள் மீறினார்கள். இது வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் என்பதை மோசமான பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் இதைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ராஜ்யசபா தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்தினார்கள். ராஜ்யசபா தொலைக்காட்சியை தணிக்கை செய்தார்கள். உங்கள் பிரசாரங்களை பரப்பாதீர்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது," என்று டெரிக் ஓ ப்ரையன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
விவசாய மசோதாக்கள் - எதிர்ப்பு ஏன்?
விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் இல்லாதது மட்டுமல்லாது, ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது , விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இல்லாமல் போகும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசுகளின் வேளாண் விளைபொருட்களுக்கான சந்தைப்படுத்தல் கமிட்டி முறை தொடரும். ஆனால் எதிர்க்கட்சியினர் தவறான தகவல் பரப்பி வருகிறார்கள். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும். இந்தியாவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய இந்த சட்டங்கள் வழிவகுக்கும்," என்று ராஜ்நாத் சிங் ஞாயிறு மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் செய்து அமளியைக் குறிப்பிட்டு பேசிய அவர் எதிர்க் கட்சியினர் அனைத்து எல்லைகளையும் கடந்து விட்டனர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இவ்வாறு நடந்து கொள்வதை இதுவரை நான் பார்த்ததில்லை என்று குறிப்பிட்டார்.
விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் குற்றம்சாட்டி இந்த மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பதவி, நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார்.
இப்படியான சூழலில் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












