மாநிலங்களவை உறுப்பினர் அமர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்

அமர் சிங்

பட மூலாதாரம், Hindustan Times

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 64.

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் சனிக்கிழமையன்று (ஆகஸ்டு 1) உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த அமர் சிங்?

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் 1956ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிறந்த இவர், கொல்கத்தாவிலுள்ள சென்ட் சேவியர்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு 1996ஆம் ஆண்டு இவர் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது பதவிக்காலத்தின்போது, பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளார்.

முலாயம் சிங் உடனான நட்பு

ஒரு காலத்தில் சமாஜ்வாதி கட்சியின் அதிகாரம் மிக்க தலைவராக அமர் சிங் கருதப்பட்டார்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவுடன் நெருங்கிய நட்பு கொண்ட ஒருவராக இவர் அறியப்படுகிறார்.

அமர் சிங்

பட மூலாதாரம், Hindustan Times

ஆனால், அமர் சிங் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியிலிருந்துதான் தொடங்கினார். அவர் அந்த கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு கட்சிகளிலும் உறுப்பினராக இருந்துள்ள அமர் சிங், பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

அதாவது, இந்தியன் ஏர்லைன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேசிய ஜவுளி கழகத்தின் இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.

இதுமட்டுமின்றி, இந்திய அரசு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசின் பல்வேறு ஆலோசனை குழுக்களிலும் அவர் உறுப்பினராக இருந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: