கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு; 1,974 பேர் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் புதிதாக 1,974 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் இன்று 38 நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 435ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதான் தமிழகத்தில் இதுவரை ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும். இன்று இறந்த 38 நபர்களில், 22 நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், 16 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.
இறந்தவர்களில் 15 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுத் திணறல் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாதிப்புக்கு உள்ளான 1,974 நபர்களில் 33 நபர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், பஹ்ரைன், தாய்லாந்து, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,896ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 1,415 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 79 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 7,10,599 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 18,782 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1,138 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,547ஆக உயர்ந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












