"டெல்லியில் கொரோனா பரிசோதனை 3 மடங்கு அதிகரிக்கப்படும்" - அமித்ஷா

கொரோனா பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

இந்தியத் தலைநகர் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்த ஆறு நாட்களில் பரிசோதனை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு டெல்லியில் உள்ளது. இங்கு இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1200 பேர் இறந்துள்ளனர்.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், அதை தடுப்பது குறித்து இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில், ''டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் கொரோனா பரிசோதனை இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும். அடுத்த ஆறு நாட்களில் இது மூன்று மடங்காக அதிகரிக்கப்படும்'' என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட 5,000 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று அதிகம் உள்ள மற்ற மாநிலங்களை விட டெல்லியில் குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகளே செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Banner image reading 'more about coronavirus'

இதில், அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் டெல்லியில் பரிசோதனை செய்யப்படும் நபர்களில் மூன்றில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.

டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) பரிசோதனை செய்யப்பட்ட 4,900 பேரில் 2,134 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லியில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே உண்மையான நிலை தெரியும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

இந்த நிலையில், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மேலும் அவர்,'' டெல்லியில் உள்ள ஒவ்வொரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலும், சில நாட்களில் பரிசோதனை மையங்கள் திறக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

அத்துடன் டெல்லியில் மருத்துவமனை படுக்கை பிரச்சனையைத் தீர்க்க, 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் என்றும், அந்த பெட்டிகளில் 8,000 படுக்கைகள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த கூட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் 60% கொரோனா படுக்கைகளைக் குறைந்த கட்டணத்தில் அளிக்க வேண்டும் தொற்று அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று சுகாதார கணக்கெடுப்புகளைச் செய்து ஒரு வாரத்தில் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: