கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுரோட்டில் கைவிடப்பட்ட நோயாளி உயிரிழப்பு - என்ன நடந்தது?

- எழுதியவர், தீப்தி படினி
- பதவி, பிபிசி செய்தியாளர்
"என்னை காப்பாற்றுங்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். என்னால் மூச்சு விட முடியவில்லை" 60 வயதான ஸ்ரீனிவாச பாபுவின் கடைசி வார்த்தைகள் இவை.
உடல்நல குறைவால் சாலையோரம் விழுந்திருந்த ஸ்ரீனிவாஸ் உதவி கேட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் ஸ்ரீனிவாசிடம், பெண் ஒருவர் பல கேள்விகளை கேட்கிறார். தெலங்கானாவின் மேடாக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
''ஸ்ரீனிவாஸ் உடல்நல பாதிப்பில் சாலையில் மயங்கி விழுந்தவாறு அருகில் உள்ள நபர்களிடம் உதவி கேட்டார். உடனே அம்புலான்சை அழைத்தோம். ஆனால் ஒரு மணிநேரத்திற்கு பிறகே ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் தங்களிடம் பிபிஇ கிட்டுகள் எனப்படும் பாதுகாப்பு கவசம் இல்லை என்றும் இந்த நோயாளிக்கு கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இருப்பதால் வேறு ஆம்புலன்ஸை அழையுங்கள் எனவும் கூறி சென்றனர். மற்றொரு ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஸ்ரீனிவாஸ் உயிரிழந்துவிட்டார்'' என அப்பகுதியில் உள்ள மக்கள் சம்பவம் நடத்த இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ''முதலில் வந்த ஆம்புலன்சில் ஊழியர்களுக்கு தேவையான இரண்டு பிபிஇ கிட்டுகள் இருந்தன. ஆனால் நோயாளிக்கான பிபிஇ கிட்டு இல்லை. எனவே கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் காரணமாக நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மறுத்துள்ளனர்'' என்பது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து மேடாக் மருத்துவ அதிகாரியான மருத்துவர் வெங்கடேஷ்வர ராவிடம் பிபிசி தெலுங்கு சேவை பேசியது.

பட மூலாதாரம், UGC VIDEO
அவர் அளித்த தகவலின்படி, ''ஸ்ரீனிவாஸ் ஹைத்திராபாத்திற்கு மாநகர பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறான அசாதாரண சூழலில் பேருந்தையே மருத்துவமனைக்கு திருப்பும்படி ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். எனவே செகுண்டா எனும் பகுதியில் உள்ள சுகாதார மையத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீனிவாஸ் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டுள்ளார். அதன் பிறகு தான் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டுள்ளது, ஆனால் பலனில்லை'' என மருத்துவர் வெங்கடேஸ்வரராவ் கூறுகிறார்.
ஜிவிகே இ.எம்.ஆர். ஐ என்ற நிறுவனத்துடனான கூட்டணியில் தெலங்கானா மாநிலத்தில் 108ஆம்புலன்ஸ் சேவைகள் இயங்குகின்றன.
மேடாக் மாவட்டத்தில் மட்டும் எட்டு ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் கோவிட் 19 நோயாளிகளுக்காக பயன்படுத்தபடுகிறது. மற்ற ஆறு ஆம்புலன்ஸ்களும் அவசர சிகிச்சைக்காக எப்போதும்போல பயன்பாட்டில் உள்ளன.
எனவே ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் பிபிஇ கிட்டுகள் வழங்குவது ஜிவிகே இ.எம்.ஆர். ஐ நிறுவனத்தின் பொறுப்பு. இருப்பினும் நாங்கள் 100 பிபிஇ கிட்டுகளை வழங்கியுள்ளோம் என மருத்துவர் வெங்கடேஷ்வர ராவ் கூறுகிறார்.
''மேலும் ஆம்புலன்ஸ் நோயாளியிடம் விரைந்து சென்று முதலுதவி அளித்து காலதாமதமின்றி நோயாளியை மருத்துவமனை அழைத்து செல்வதே ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கடமை. ஆனால் இவர்கள் அதை செய்யவில்லை. ஏன் ஆம்புலன்சில் பிபிஇ இல்லை என்பது குறித்தும் எனக்கு தெரியவில்லை. எனவே ஆம்புலன்சில் இருந்த ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன்" என்கிறார் மருத்துவர் வெங்கடேஷ்வரராவ்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
ஸ்ரீனிவாசை அழைத்து செல்ல தவறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவரச மருத்துவ வல்லுநர் இருவரிடமும் பிபிசி தெலுங்கு சேவை பேசியது.
''நாங்கள் ஸ்ரீனிவாஸ் இருந்த இடத்திற்கு 30 நிமிடங்களில் சென்றோம். அங்கு போலீஸ், ஆரம்ப சுகாதார மையத்தின் செவிலியர் மற்றும் இன்னொரு மருத்துவ ஊழியர் உடன் இருந்தனர். இந்த நோயாளிக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன என அங்கிருந்த செவிலியரிடன் கூறினோம். யாருமே அவர் அருகில் செல்லவில்லை. செவிலியர் மற்றும் மருத்துவ ஊழியர் இருவருமே கைக்கவசம் மற்றும் முகக்கவசம் மட்டுமே அணிந்திருந்தனர். நாங்கள் இதுவரை கொரோனா நோயாளிகளை கையாண்டது இல்லை என்பதால் மிகவும் பயந்தோம். மேலும் எங்களுக்கு தேவையான இரண்டு பிபிஇ கிட்டுகள் மட்டுமே இருந்தன. அவரை ஆம்புலன்சில் ஏற்றி சென்றால் மீண்டும் ஆம்புலன்சை சுத்தம் செய்ய எங்களிடம் கிருமிநாசினியும் இல்லை. எனவே எங்களின் மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோவிட் 19 நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆம்புலன்சை அனுப்புமாறு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்'' என்றனர்.

ஸ்ரீனிவாஸ் அவரின் மனைவி மற்றும் மகளுடன் ஹைத்திராபாத்தில் வசித்துவந்துள்ளார். அவரின் மகள் மாற்றுத்திறனாளி.
"கடைசியாக என்னை அலைப்பேசி மூலம் அழைத்து எல்லாம் முடிந்துவிட்டது. இன்னும் எனக்கு ஐந்து நிமிடங்கள் தான் உள்ளது. ஆம்புலன்ஸ் வரவில்லை. நீயும் மிக தூரத்தில் இருக்கிறாய். மகளையும் அப்பாவையும் பார்த்துக்கொள் என கூறிவிட்டு எங்களைவிட்டு சென்றுவிட்டார்'' என ஸ்ரீனிவாசன் மனைவி கல்யாணி கண்கலங்குகிறார்.

ஸ்ரீனிவாசன் மகன் பானுச்சந்தர் கூறுகையில், இந்த காணொளியை பார்த்து யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை. கொரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில் பிபிஇ இல்லை என விளையாட்டாக கூறுகிறர்கள். நீங்கள் செய்த அத்தனை ஏற்பாடுகளும் என்ன ஆனது? என கேள்வி எழுப்புகிறார்.
ஜிவிகே இ.எம்.ஆர். ஐ ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிரமாநந்த ராவிடம் பேசினோம்.
தங்கள் நிர்வாகத்தில் மாநிலம் முழுவதும் 351 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது என்றும் இதில் 92 இரண்டு ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்காக இயக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
"இந்த ஆம்புலன்களுக்கு 10 பிபிஇ கிட்டுகளும், கிருமிநாசினிகளும் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அல்லாத அவசர சேவைகளுக்காக இயங்கும் ஆம்புலன்ஸ்களுக்கு 4 பிபிஇ கிட்டுகள் வழங்கப்பட்டுள்ளது" என பிரமாநந்த குறிப்பிடுகிறார்.
மேலும் அனைத்து மூச்சு திணறல் பிரச்சனையும் கொரோனா அல்ல என நாங்கள் அறிவுரை வழங்கியுள்ளோம். ஏன் பிபிஇ இல்லாமல் போனது என்பது குறித்தும் தெரியவில்லை என அவர் கூறுகிறார்.
தற்போது ஆம்புலன்சின் ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ வல்லுநர் இருவருமே ஹைத்திராபாத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.

இந்நிலையில் தெலங்கானாவில் போதிய எண்ணிக்கையில் பிபிஇ கிட்டுகள் உள்ளன என உயர் நீதிமன்றத்தில் மாநில மருத்துவ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜூன் 2 ம் தேதி வரை 7 லட்சம் பிபிஇ கிட்டுகள் உள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் ''நாம் எத்தனை பிபிஇ கிட்டுகள் சேமித்து வைத்திருக்கிறோம் என்பது முக்கியமில்லை, அனைத்தும் சரியாக எல்லா மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டதா என்ற விளக்கமே வேண்டும்'' என நீதிமன்றம் கூறியது.
உயிரிழந்த ஸ்ரீனிவாஸிடம் இருந்து கோவிட் 19 பரிசோதனைக்கான எந்த மாதிரிகளும் சேகரிக்கப்படவில்லை. தெலங்கானா நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் மட்டுமே சடலங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஸ்ரீனிவாஸ் கொரோனாவால் உயிரிழந்தாரா அல்லது ஆஸ்த்துமா பிரச்சனையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாரா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












