அழியும் அபாயத்தில் சுமார் 10 லட்சம் உயிரினங்கள் - பருவநிலை மாற்றத்தை தொடர்ந்து புதிய சிக்கல் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
உலகளவில் பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அனைவரும் ஒன்றிணைவது போல, இயற்கை வளங்களை பாதுகாக்கும் கொள்கைக்காகவும் ஒன்றிணையும் தேவை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகில் சுமார் 10 லட்சம் இனங்கள் முழுமையாக அழியும் அபாயத்தில் இருப்பதாக கடந்த ஆண்டு வெளிவந்த ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது.
இயற்கை மற்றும் மனிதர்களுக்கு இடையேயான சமநிலையின் முக்கியத்துவத்தை கொரோனா வைரஸ் தொற்று உணர்த்தி இருக்கிறது. வன விலங்குகளை வேட்டையாடுவது, வர்த்தகம் செய்வது போன்ற மனித செயல்பாடுகளால், புதிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற இலக்கை அடைவது என்பது, ''மனிதர்கள் மற்றும் இந்த பூமியில் வாழும் பிற உயிர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே'' ஆகும் என்கிறார் லண்டனை சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜியா மேஸ்.

பட மூலாதாரம், Getty Images
உலகளவில் பரவி வரும் பெருந்தொற்று காரணமாக இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
ஏற்கனவே மனிதர்களால் 500கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் பல விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. தற்போது உலகளவில் ஆறாம் கட்டமாக இன அழிப்பு நடைபெற துவங்கிவிட்டதற்கான ஆதாரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது பல வகையான செடிகள், விலங்குகள், கடல் மற்றும் நிலத்தில் வாழும் பூஞ்சைகளுக்கும் பொருந்தும்.
பல்லுயிர்களை பாதுகாக்க 2020ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பீலா ராஜேஷ் மாற்றம்; தமிழக அரசின் சுகாதார துறை செயலராகும் ஜெ. ராதாகிருஷ்ணன்- பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநில சுகாதாரத் துறையின் செயலரை மாற்றி உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. இதன் பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் தற்போது சுமார் 38 ஆயிரம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். மாநிலத் தலைநகரான சென்னையில் மட்டும் 27,000 நோயாளிகள் இருக்கின்றனர். தினமும் சுமார் 1,800க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.
மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. இந்த சிக்கலான நிலையில்தான் மாநில சுகாதாரத் துறையின் செயலராக கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பதவிவகித்த பீலா ராஜேஷை வேறு துறைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.
இதுகுறித்து விரிவாக படிக்க:பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: 'இந்தியாவின் ராணுவ பலம் சீனாவுக்கு புரிந்திருக்கிறது'

பட மூலாதாரம், Getty Images
சில வாரங்களுக்கு முன்பு இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே தொடங்கிய பதற்றம் இரு நாட்டு ராணுவங்களையும் தங்கள் நிலைகளில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் முன்னேற வைத்தது.
இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய எல்லைப் பேச்சுவார்த்தையால் சுமூக நிலை திரும்புவது போல தெரிகிறது.
இதற்கு மத்தியில் பிபிசி செய்தியாளர் ஜுஹல் புரோஹித்துக்கு பேட்டியளித்தார் இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனெரல் பிக்ரம் சிங், இந்திய சீன எல்லையில் இருக்கும் பல பகுதிகளை இந்திய ராணுவம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறது என்றும் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதற்கு பதிலடி தரும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளை எடுக்க இந்திய ராணுவத்துக்கும் தெரியும் என்கிறார். அவருடனான பேட்டியில் இருந்து.
இதுகுறித்து விரிவாக படிக்க:''சீன எல்லைக்குள் நுழைய இந்திய ராணுவத்துக்கு தெரியும்'' - முன்னாள் ராணுவ தளபதி

கொரோனா ஊரடங்கு: சென்னையில் முடக்கநிலையை அமல்படுத்தும் திட்டமுள்ளதா? தமிழக அரசு விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தமிழக அரசிடம் இல்லையென தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ - பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்படவில்லையென்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அதனைத் தடுக்க முயற்சிகள் ஏதும் எடுக்கப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கேள்வியெழுப்பியிருந்தது. அது தொடர்பாக இன்று (ஜூன் 12) பதிலளிக்கும்படியும் கூறியிருந்தது.
இந்த விவகாரம் இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி - சுரேஷ் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அரசின் கூடுதல் வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபல் ஆஜராகி விளக்கமளித்தார்.
இதுகுறித்து விரிவாக படிக்க:சென்னையில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமுள்ளதா? தமிழக அரசு விளக்கம்

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் ஊரடங்கை தளர்த்தியதை கொண்டாடிய விருந்தால் 180 பேருக்கு கோவிட்-19

பட மூலாதாரம், Getty Images
முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை கொண்டாடும் வகையில், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் இளைஞர் ஒருவர் அளித்த விருந்தால் அங்கு 180 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
விருந்து அளித்த இளைஞர் ஒருவர் செய்த இந்த தவறின் காரணமாக நாக்பூரின் நாயிக் தலாவ் பகுதியில் இருக்கும் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விருந்தின் காரணமாக 180 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நாக்பூர் மாநகராட்சியின் ஆணையர் துக்காராம் முண்டே பிபிசியிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து விரிவாக படிக்க: ஊரடங்கை தளர்த்தியதால் கொண்டாட்டம்: 180 பேருக்கு பரவிய கொரோனா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












