பீலா ராஜேஷ் மாற்றம்; தமிழக அரசின் சுகாதார துறை செயலராகும் ஜெ. ராதாகிருஷ்ணன்- பின்னணி என்ன?

பீலா ராஜேஷ்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநில சுகாதாரத் துறையின் செயலரை மாற்றி உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. இதன் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 38 ஆயிரம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். மாநிலத் தலைநகரான சென்னையில் மட்டும் 27,000 நோயாளிகள் இருக்கின்றனர். தினமும் சுமார் 1,800க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.

மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. இந்த சிக்கலான நிலையில்தான் மாநில சுகாதாரத் துறையின் செயலராக கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பதவிவகித்த பீலா ராஜேஷை வேறு துறைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்த காலகட்டத்தில், சுதாதாரத் துறை எடுத்துவரும் தகவல்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரே தினமும் இரவில் செய்தியாளர்களைச் சந்தித்து விவரித்தார். ஒரு கட்டத்தில் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்திப்பது நிறுத்தப்பட்டு, மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்திக்க ஆரம்பித்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

தினமும் மாலை 6 மணி அளவில் நடந்த அவரது செய்தியாளர் சந்திப்பு பெரும் ஊடக கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. சுகாதாரத் துறையின் பணிகள் குறித்த நேர்மறையான பார்வையும் ஏற்பட்டது. ஆனால், செய்தியாளர்களுக்கு மத்தியிலும் கொரோனா பரவ ஆரம்பித்த பிறகு, அவருடைய செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டது.

மே மாத மத்தியிலிருந்து தமிழ்நாட்டில் கொரோனா மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக, மாநிலத் தலைநகரான சென்னை, கொரோனா தொற்றின் மையமாக மாறியது. இந்த நிலையில், வருவாய் நிர்வாகத் துறை ஆணையராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன், ஜூன் மாதம் ஒன்றாம் தேதியன்று சென்னை நகரில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

12 நாட்கள் கழித்து, சுகாதாரத் துறை செயலர் பதவியிலிருந்து பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, ஜெ. ராதாகிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, மீண்டும் தமிழக சுகாதாரத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ. ராதாகிருஷ்ணன்.

"துவக்கத்திலிருந்தே அவர் பிற அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இந்த மாற்றம் மிகத் தாமதமாக நடந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்" என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெருந்தொற்றை மாநில அரசு எதிர்கொண்டிருக்கும் நிலையில், எல்லோரையும் ஒருங்கிணைத்து அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி செயல்படவில்லை. பிறரது ஆலோசனைகளைக் கேட்கவில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

கொரோனா கட்டுப்படுத்துதலைப் பொறுத்தவரை, பொது சுகாதாரம், உள்ளூராட்சி அமைப்புகள், சி.எம்.டி.ஏ ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த ஒருங்கிணைப்பை அமைச்சர்கள் செய்ய முடியாது. துறைச் செயலர்கள்தான் செய்ய வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இது நோய்த் தடுப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் அவர்.

சுகாதாரத் துறையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஓர் இடமாற்றத்தை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம்ஸ் ப்ராஜக்ட் என்ற திட்டத்தின் செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ். நாகராஜன் அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டார்.

"தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம்ஸ் ப்ராஜக்ட் என்பது மிகவும் சிக்கலான தொழில்நுட்பத்தை கையாளும் ஒரு துறை. இதற்கு முன்பாக தரேஷ் அகமது இதனைச் சிறப்பாகச் செயல்படுத்தினார். அதற்குப் பிறகு நாகராஜன் அதனை முன்னெடுத்துச் சென்றார். இந்த நிலையில், அவரை அங்கிருந்து மாற்றியது மிகமிக மோசமான நடவடிக்கை," என்கிறார் ராதாகிருஷ்ணன்.

கொரோனா வைரஸ்

இதையெல்லாம்விட மோசம், சுகாதாரத் துறையை விமர்சித்தவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டதுதான். ஏற்கனவே ஸ்ரீராம் என்ற புகைப்படக் கலைஞர் ட்விட்டரில் விமர்சித்ததால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அடுத்ததாக, செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

"குறிப்பாக ஸ்ரீராம் மீது மாநில பொது சுகாதாரத் துறையே புகார் கொடுத்தது. நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

இந்தக் காரணங்கள் எல்லாம் தவிர, இந்த இடமாற்றத்தின் மூலம் மாநில அரசு நோயைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக ஒரு கருத்தை ஏற்படுத்த முடியும் என்பதும் மிக முக்கியமான காரணம்.

அந்தக் கருத்தை செயல்பாடாக மாற்ற வேண்டிய பொறுப்பு தற்போது செயலராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: