கொரோனா வைரஸ் ஊரடங்கால் அதிகரிக்கும் குற்றங்கள்: புதிய நெருக்கடியை சமாளிக்குமா இந்தியா?

லாக் டவுன் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம் ஏ பரணிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா வைரஸ் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், அதன் விளைவாக பல மாநிலங்களில் சில வகை குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்றன.

இந்தியாவில் பொது முடக்க கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது தொழில்கள் முடக்கம், நிறுவனங்கள் மூடல், மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் நீங்கலாக, பெரும்பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இதனால் திருட்டு, வழிப்பறி கொள்ளை போன்ற செயல்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலையை நாடு எதிர்கொண்டது.

தற்போது பொது முடக்க கட்டுப்பாடுகள், ஐந்தாவது கட்டமாக நீடிக்கப்பட்டாலும், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பதிவான குற்றங்களின் தொகுப்பை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலத்தில் நகரில் 10,579 புகார்கள் பதிவாயிருப்பதாகவும், இந்த ஆண்டு அதே ஏப்ரல் மாதத்தின் முதல் பாதி நாட்களில், 2,574 புகார்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், அதன் விளைவாக பல மாநிலங்களில் சில வகை குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்றன.

Banner image reading 'more about coronavirus'
Banner

குறிப்பாக, நகரில் கொலை, பாலியல் ரீதியிலான குற்றங்கள் 75% பதிவானதையும் அந்த தரவுகள் காண்பிக்கின்றன. கடந்த மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 கொலை வழக்களும் 21 பாலியல் தொடர்புடைய வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பொது முடக்க கட்டுப்பாடு அமலில் இருக்கும் காலத்தில் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் பொதுமக்களின் நேரடி புகார்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், ஆன்லைனில் புகார் அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பலரும் அந்த அமைப்பிடம் புகார்களை பதிவு செய்கிறார்கள்.

அதில், பொது முடக்கத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் பெண்கள் தொடர்பான சைபர் குற்றங்கள் தொடர்பாக 54 புகார்கள் பதிவானதாக அந்த ஆணையத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான புகார்கள் மீது சரியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கவலையை மாநில அரசிடம் தேசிய மகளிர் ஆணையம் பகிர்ந்து கொண்டுள்ளது.

தலைவலியாகும் சைபர் குற்றங்கள்

டெல்லியை பொருத்தவரை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 முதல் 31-ஆம் தேதிவரையில் 3,416 வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், இந்த ஆண்டு அதே மார்ச் மாதம், 1,990 வழக்குகள் பதிவாயின.

லாக் டவுன் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

இதில் 53 வழக்குகள் வழிப்பறி, 181 வழக்குகள் சங்கிலி பறிப்பு, 27 வழக்குகள் கடுமையாக காயம் ஏற்படுத்துதல், 55 வழக்குகள் வீடு புகுந்து கொள்ளையடித்தல், 1,243 வழக்குகள் வாகன திருட்டு, 72 வழக்குகள் பெண்களின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்த குற்றங்கள், 150 வழக்குகள் ஆள் கடத்தல் தொடர்புடையவை.

தமிழ்நாட்டை பொருத்தவரை, பொது முடக்க அமல் காலத்தில் குற்றங்கள் பரவலாக குறைந்து வருவதாக மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், இதே காலத்தில் சைபர் குற்றங்கள் அதிகமாகி வருவது காவல்துறையினருக்கு புதிய சவாலாகி இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

பெரும்பாலான நகரங்களில் வீட்டில் இருந்தபடி ஊழியர்கள் அதிகம் பணியாற்றுவதால், போலி செயலிகள், போலி இணையதளங்கள், போலி பணம் செலுத்தும் செர்வர்கள் என அவர்களை இலக்கு வைத்து சைபர் குற்றங்கள் நடக்கின்றன.

தகவல்களை திருடும் போலி செயலிகள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, அதன் சமீபத்திய சர்வதேச நிலவரத்தையும் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து தெரிவிப்பதாகவும் கூறி corona live 1.1 என்ற பெயரில் ஒரு செயலி சமீபத்தில் ஆண்ட்ராய்ட் செல்பேசிகளில் பதிவிறக்கும் வசதியுடன் அறிமுகமாகியது

அதை நம்பி பதிவிறக்கம் செய்த பலரது தனி உரிமை தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள், இருப்பிடத்தை அறியும் வசதி போன்றவற்றை அந்த செயலி, அதன் பயனருக்கு தெரியாமலேயே அணுகி தகவல்களை திருடியதாக பின்னர் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில்தான், இந்திய அரசின் ஆரோக்கிய சேது செயலி அதிகாரப்பூர்வமாக மத்திய மின்னணு தொழில்நுட்ப அமைச்சக ஆதரவுடன் வெளிவந்தது. ஆனாலும், ஆரோக்கிய சேது செயலியில் உள்ள அம்சங்களை கொண்ட பல போலி செயலிகள் இருப்பது கணினி குற்ற புலனாய்வாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

லாக் டவுன் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

மிகப்பெரிய இடம்பெயர்வு

இத்தகைய சூழலில், பொது முடக்க கட்டுப்பாடுகளால் வேலையிழந்த வெளி மாநில தொழிலாளர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதுவரை தேசிய அளவில் வேலை பார்க்கும் இடங்களை விட்டு சொந்த வசிப்பிடங்களுக்கு சுமார் 5 கோடி பேர்வரை திரும்பியிருக்கிறார்கள். முன்னதாக, சொந்த மாநிலங்களுக்கு அரசு உதவியுடனும், சொந்த செலவிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தும் ரயில் மற்றும் பேருந்துகளில் சென்ற காட்சிகளும் ஊடகங்களில் ஒளிபரப்பாகின. சில உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகின.

அவ்வாறு சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் பலரும், அடிப்படையில் சொந்த ஊரில் வேலை செய்ய ஆதாரமின்றி வெளி மாநிலங்களுக்கு வேலை தேடி வந்தவர்கள். தற்போது நகரங்களில் வேலையில்லாமல் அவர்கள் ஊருக்கு திரும்பிய வேளையில், அவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் வாழ்வதற்கு தேவையான பணத்தை திரட்டுவது பெரும் சவாலாக இருக்கும்.

இதில் சிலர், குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்படுவதால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனித்தோ, கும்பலாக சேர்ந்தோ குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக இந்திய உளவுத்துறை மத்திய, மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

புதிய மாவட்டத்தில் என்ன நிலை?

தமிழ்நாட்டில் 35-ஆவது புதிய மாவட்டமாக கடந்த ஆண்டு திருப்பத்தூர் அறிவிக்கப்பட்டது. அங்கு முதலாவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் பி. விஜயகுமார், தனது காவல் வரம்புக்குட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி போன்ற தொழிற்துறை அதிகம் நிறைந்த பகுதிகளில் சுமார் 1,200 வெளிமாநில தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது பலரும் தொழில் செய்யும் இடத்திலேயே வசிக்க விரும்பினர். சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை மட்டும் அவர்களது ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று கூறினார்.

தொழில் வாய்ப்புகளை இழந்து வசிப்பிடங்களுக்கு சென்றவர்கள், வேலை கிடைக்காத விரக்தியில் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதா என கேட்டபோது, "இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் சொந்த ஊர்களில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு பல தொகுப்புதவி திட்டங்களை அறிவித்துள்ளதால், அவர்கள் குற்றங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அரிது" என விஜயகுமார் தெரிவித்தார்.

ஆனால், "வீட்டிலேயே ஊழியர்கள் வேலை செய்யும் நிலை அதிகரித்து இருப்பதால், அதைப்பயன்படுத்தி ஆன்லைன் குற்றங்கள் அதிகமாகலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இணையவழி குற்றங்களுக்கு வாய்ப்பு

"Phishing எனப்படும் சைபர் குற்றத்தின் அங்கமான மின்னஞ்சல், தொலைபேசி, எஸ்எம்எஸ் போன்றவை மூலம் தனி நபர்களை ஏமாற்றி தகவல்களை திருட சிலர் முயலக்கூடும். வங்கிகளில் கடன் தவணை செலுத்த வழங்கப்பட்டுள்ள வசதியை விஷமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை திருடவோ தனிப்பட்ட தகவல்களையோ திருடவோ முற்படுவார்கள்" என்று விஜயகுமார் எச்சரித்தார்.

"பொது முடக்க காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கலாம். இண்டர்நெட் சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை பின்தொடர்ந்து அவர்களின் தகவல்களை அறிந்து ஏமாற்ற சில நபர்கள் முயலக்கூடும்" என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, தமிழ்நாட்டின் தெற்கே உள்ள திருநெல்வேலியில் நிலைமை குறித்து அறிய அதன் மாநகர துணை ஆணையாளர் எஸ். சரவணனை பிபிசி தொடர்பு கொண்டு பேசியபோது, பொது முடக்க கட்டுப்பாடுகளால், தொழில்கள் முடங்கிய காலத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.

எத்தகைய குற்றங்கள் நிகழலாம்?

தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதால், வீட்டுவசதி கடன்கள், கல்விக்கடன்கள், தொழில்களுக்கான கடனுதவி போன்றவற்றுக்கான செலவினத்தை எதிர்கொள்ளும் நிலையை மக்கள் எதிர்கொள்வார்கள் என்றும் அவர்களை குறி வைத்து நடக்கும் மோசடி சம்பவங்கள் தொடர்பான விழிப்புணர்வை மாவட்ட நிர்வாக உதவியுடன் காவல்துறை ஏற்படுத்தி வருவதாக துணை ஆணையாளர் சரவணன் கூறினார்.

பொது முடக்க காலத்தில் ஆன்லைன் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதை ஏற்றுக் கொண்ட அவர், ரம்மி, லூடோ போன்ற விளையாட்டுகள் பற்றி முன்பு அறியாத பலரும் இப்போது அதை தீவிரமாக விளையாட தொடங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்று மாத பொது முடக்க காலத்தில், சிறார்கள், பதின்ம வயதினர் அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பது அதிகரித்துள்ளதாக காவல்துறைக்கு புகார்கள் வருவதாகவும் துணை ஆணையாளர் சரவணன் கூறினார்

அதுபோலவே, சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடப்பதால், அவற்றை கண்காணக்கவும் தடுக்கவும் திருநெல்வேலியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு குடும்ப வன்முறை தொடர்புடைய புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் அடிப்படையில், மீண்டும் பழைய புகார்தாரர்களின் நிலையை நேரில் ஆய்வு செய்து வருவதால், பெருமளவில் குற்றங்கள் தடுக்க முடியும் என்று சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

Banner image reading 'more about coronavirus'

விடுவிக்கப்பட்ட கைதிகளால் ஆபத்தா?

சிறைச்சாலைகளில் வைரஸ் பரவலை தவிர்க்கும் விதமாக, சிறிய குற்றங்களுக்காக நீதிமன்ற காவலில் இருந்தவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். மற்ற தண்டனை கைதிகள், பரோலில் விடுவிக்கப்பட்டார்கள்.

மகராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இவ்வாறு 50% விசாரணை கைதிகள் உட்பட 17 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் 11 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், அதன் பிறகு அந்த மாநிலங்களில் குற்றச்செயல்கள் பரவலுக்கும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அம்மாநில காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

ஆனால், கைதிகள் விடுவிக்கப்பட்டது தற்காலிக நடவடிக்கைதான் என்றும் அவர்கள் வசிப்பிடத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது, தினமும் காவல்நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகள் அடிப்படையில்தான் விடுவிக்கப்பட்டுள்ளதால், அவர்களால் குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு அரிது என்று டெல்லி திஹார் சிறை உயரதிகாரி தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் பெரும்பாலான உணவகங்கள், நகை கடைகள், ஜவுளிக்கடைகள் போன்றவற்றில் வெளி மாநில தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த நிறுவனம் அடிப்படையிலோ, நேரடியாகவோ நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதால், வேலைக்கு போதுமான ஆட்களின்றி பல நிறுவனங்கள் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளன.

இது குறித்து பிபிசியிடம் டெல்லி தமிழ் சங்க பொதுச்செயலாளர் இரா. முகுந்தன் பேசுகையில், பல தமிழக நிறுவனங்களின் நிர்வாகிகள், வேலைக்கு ஆள் கிடைக்காததால் வட மாநிலங்களில் இருந்து மீண்டும் தொழிலாளர்கள் தமிழகம் வர வாய்ப்புள்ளதா என தன்னிடம் கேட்டு வருவதாகக் கூறினார்.

ஏற்கெனவே தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா போன்ற தென் மாநிலங்களில் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு சேர்க்கப்பட்டு வந்த வடக்கு மற்றும் வடக்கிழக்கு மாநில தொழிலாளர்கள் இல்லாததால், பொது முடக்க தளர்வுக்குப் பிறகு மீண்டும் தொழிற்சாலைகள் திறந்தபோதும், அவை முழுமையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளன.

இந்த நிலையில், சொந்த ஊர் சென்ற வெளி மாநில தொழிலாளர்கள், வேலை தேடி மீண்டும் பழைய பணியிடத்துக்கே வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அத்தகைய தொழிலாளர்களை கண்காணிப்பதும் கடினம் என்ற சூழலில், அதில் யார் குற்றம் செய்வார்கள், யார் குற்றமிழைக்க தூண்டப்படுவார்கள் போன்ற குழப்பம், சட்ட அமலாக்க அமைப்புகளிடையே காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியுடன் இந்தியா உட்பட உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த நிலையில், கணினி வழி குற்றங்கள் ஒருபுறமும், லாக் டவுன் காலத்தில் குற்றம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவோரின் செயல் மறுபுறமும் அரசுக்கும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் புதிய தலைவலியாகலாம் என்று கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: