கொரோனா வைரஸ் பரவலை கண்டறியும் ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் இல்லையா?

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

ஆரோக்கிய சேது செயலி இல்லாமலும் பயணிக்கலாம் - மத்திய அரசு : இந்து தமிழ்
பெங்களூருவில் உள்ள மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தை சேர்ந்த அனிவார் அரவிந்த் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "உள்ளூர் விமானம் மற்றும் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியில் பச்சை நிற அனுமதி கிடைத்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்வது தொடர்பான சட்டப்பூர்வமாக எந்த ஆணையும் வெளியிடவில்லை. அதே வேளையில் இந்த செயலிஅரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது. இதனை பதிவிறக்கம் செய்யாத பயணிகளை ரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் கட்டாயப்படுத்தி பதிவிறக்கம் செய்ய வைக்கிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்''என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இவ்வழக்கு வெள்ளிக்கிழமை அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.பி.நரகுந்த் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார். அதில், "ரயில், விமானத்தில் பயணம் செய்வோர் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை. இந்த செயலியை பயன்படுத்த விரும்பாதவர்கள் தங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய உறுதி மொழி கடிதத்தை தரலாம்''என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ், மத்திய அரசின் வழக்கறிஞர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி இவ்வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் என இந்து தமிழ் இணைய செய்தி விவரிக்கிறது.

வரலாற்றில் முதல் முறையாக தமிழக தலைமை செயலகம் மூடப்பட்டது: தினகரன்

பட மூலாதாரம், Getty Images
சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வரலாற்றில் முதல்முறையாக சென்னை கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை செயலகம் நேற்று மூடப்பட்டது என்கிறது தினகரன் நாளிதழ் செய்தி.
முதல்வர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அறைகள் மற்றும் பல துறை சார்ந்த அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தலைமை செயலகத்தில் உள்ள சுமார் 32 துறை அலுவலகங்களும் நேற்று முன்தினம் மாலை மூடப்பட்டு, அதன் சாவிகள் அனைத்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் தலைமை செயலகத்தில் பணியாற்றும் 6000 ஊழியர்களும் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தலைமை செயலகம் போல சென்னை எழிலகம், பள்ளிக்கல்வி துறை அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீண்டும் திங்கள் கிழமை முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயல்பாக இயங்க துவங்கும் என தினகரன் நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஏரி - என்ன காரணம் ? - தினத்தந்தி

பட மூலாதாரம், SANDIP MAPARI,LONAR
மும்பையில் இருந்து சுமார் 500 கி.மீ. தூரத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தின் புகழ்பெற்ற லோனார் ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. 1.2 கி.மீ. விட்டத்தில் முட்டை வடிவில் அமைந்து உள்ள இந்த ஏரி 150 மீட்டர் ஆழம் உடையது.
இந்தநிலையில் பச்சை நிறத்தில் காணப்படும் ஏரி சமீபத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. இது அடிக்கடி நிகழ்ந்தாலும், இந்த முறை நீர் அதிக அளவில் ஒளிர்வதால் உள்ளூர்வாசிகளும், ஆய்வாளர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்த விவாதங்கள் தொடங்கி உள்ளன. நீரின் உப்புத்தன்மை அல்லது நீரில் உள்ள பாசிகளால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய லோனார் ஏரியில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ய உள்ளது.
இது குறித்து புல்தானா மாவட்ட கலெக்டர் சுமன் சந்திரா கூறுகையில், ''லோனார் ஏரி சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வருகிறது. வனத்துறையினர் ஏரி தண்ணீரை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
மேலும் அந்த நிறுவனத்தை சோ்ந்த ஆராய்ச்சியாளர்களும் தண்ணீர் மாதிரியை எடுத்து சென்று ஆய்வு செய்ய உள்ளனர் என தினத்தந்தி இணைய செய்தி விவரிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












