தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதா? - டிஜிபி திரிபாதி சிறப்புப்பேட்டி

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம் ஏ பரணிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

பொது முடக்க காலத்தில் பல வகை குற்றங்கள் குறைவாக பதிவானபோதும், சைபர் குற்றங்கள், அசாதாரணமான வகையில் 100% அதிகரித்ததாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் காலத்தில் பல வகை குற்றங்களின் நிலை குறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்:

கோவிட்-19 வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதிவரை முழுமையான பொது முடக்கமும் அதன் பிறகு கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்க நடவடிக்கையும் அமலில் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதா?

புதிய வடிவில் குற்றங்கள்

இந்த இடைப்பட்ட காலத்தில் பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக, கடைகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு போன்றவை காரணமாக, சந்தேகத்துக்குரிய வகையில் குற்றங்களின் வடிவங்கள் பதிவாகியிருக்கின்றன.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, சமீபத்திய பொது முடக்க கட்டுப்பாடு அமலில் இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் மாநில அளவில் குற்றங்கள் 75% குறைந்துள்ளதாக காவல்துறை சேகரித்த தரவுகள் காண்பிக்கின்றன.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த குற்றங்களின் வகைகளை வீடு புகுந்து கொள்ளையடித்தல், உடல் ரீதியிலான குற்றங்கள், குடும்ப வன்முறைகள், சொத்துகள் சார்ந்த குற்றங்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள், சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் என வகைப்படுத்தலாம்.

வீடு புகுந்து நடத்தப்பட்ட கொள்ளை சம்பவங்கள், 70% குறைவாக இருந்துள்ளன. அதேபோல, பொது முடக்க கட்டுப்பாடு முழுமையாக அமல்படுத்தப்பட்ட காலத்தில் உடல் ரீதியாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வகையிலான குற்றங்கள், 45% குறைந்துள்ளன. கொலை சம்பவங்களும், பாலியல் வல்லுறவு குற்றங்களும் 50% குறைந்துள்ளன.

குடும்ப வன்முறை புகார்கள்

குடும்ப வன்முறை குற்றங்களான, வரதட்சணை மரணங்கள், கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் மீது வரதட்சணை தடுப்பு சட்டத்தின்படி பதிவாகும் வழக்குள் 80% குறைந்துள்ளன.

எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக மாநில அளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களின் அழைப்புகள் அதிகமாக இருந்தன. கடந்த மார்ச் 24 முதல் மே 21-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இவ்வாறு 1,496 முதல் 5,740 அழைப்புகள் பதிவாகி, அவை அனைத்தும் அவசரகால ரோந்து வாகனங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள் மூலம் விசாரிக்கப்பட்டுள்ளன.

பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டமான போக்சோ சட்டப்படி வழக்கமாக பதிவாகும் வழக்குள், பொது முடக்க காலத்தில் 50% குறைந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

மாநில அளவில் பொது முடக்கம், முழுமையாக அமல்படுத்தப்பட்ட காலத்தில், வாகன விபத்துகள் 80% குறைந்திருந்தன. அந்த காலகட்டத்தி்ல உயிரிழப்புகளும் 75% குறைந்திருந்தன.

முந்தைய காலங்களில் அடையாளம் காணாத சடலங்கள் சரிபார்ப்புடன் ஒப்பிடும்போது, பொது முடக்க காலத்தில் அத்தகைய சடலங்கள் கிடைப்பதும் 45% குறைந்திருந்தது.

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

ஆனால், எச்சரிக்கை மிகுந்த நடவடிக்கையாக, பொது முடக்க காலத்தில் சைபர் குற்றங்கள் 100% அதிகரித்துள்ளன. முன்னெப்போதுமில்லாத வகையில், அசாதாரணமாக பதிவான சைபர் குற்றங்களின் கடுமையான உயர்வை சமாளிக்க சைபர் குற்றப்பிரிவின் செயல்பாட்டை வலுப்படுத்தினோம். பல வழக்குகள் கடுமையான முறையில் விசாரிக்கப்பட்டன.

எனினும், வழக்கமாக ஆன்லைன் புகார்கள் அதிகமாக இருக்கும். ஆனால், பொது முடக்க காலத்தில் அத்தகைய புகார்கள் பதிவு செய்யும் செயல்பாடு 10% குறைந்து காணப்பட்டது என்று டிஜிபி திரிபாதி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: