வாரணாசியிலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு பேருந்து - நெய்வேலியை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உதவி

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - வாரணாசியிலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு பேருந்து - நெய்வேலியை சேர்ந்த ஐ.ஏ.எஸ். உதவி
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முடக்க நிலையால் அங்கு தவித்து வந்த நிலையில் அவர்களில் 250க்கும் மேற்பட்டோரை அந்த மாவட்டத்தின் துணை ஆட்சியர் சிறப்பு பேருந்து மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“வாரணாசியில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தவித்து வருவது குறித்து அறிந்த நெய்வேலியை பூர்விகமாக கொண்டவரும், வாரணாசி மாவட்டத்தின் துணை ஆட்சியருமான மணிகண்டன், மாநில அரசிடம் அனுமதி பெற்று கடந்த 45 நாட்களில் ஏழு பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தமிழகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளார்.”
“தற்சமயம் வாரணாசியில் தமிழகத்தை சேர்ந்த 80 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களை சிறப்பு ரயில் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்க முயற்சித்து வருகிறேன். இங்கிருந்து தமிழகம் திரும்பும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டாயமாக செய்யப்பட்டு, நோய்த்தொற்று இல்லை என்று உறுதியானால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: இந்தியாவில் ஊரடங்கு மறுபடியும் நீட்டிக்கப்படுமா? - இன்று முக்கிய ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images
ஊரடங்கு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி இன்று (திங்கட்கிழமை) மாநில முதமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
“கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவ்வப்போது நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒன்றரை மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோதி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்புக்கு பிறகு அவர் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவது இது 5-வது தடவை ஆகும். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளது” என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி: “சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்”

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் மருத்துவப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு வாரத்துக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி கொரோனா நோய்த் தடுப்பு சிறப்பு அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
“சென்னையில் கடந்த 9 நாள்களாக கோயம்பேடு சந்தை, வடசென்னை பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என நாளொன்றுக்கு சுமார் 3,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.”
“கோயம்பேடு சந்தையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் வடசென்னை மற்றும் திருவான்மியூர் சந்தை பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தீவிரமாக பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அடுத்த ஒரு வாரத்துக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிமாக இருக்கும். அதைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.













