இளமதி - "சுயவிருப்பத்தோடுதான் பெற்றோருடன் சென்றேன்” - நீதிபதி முன் வாக்குமூலம்

செல்வன் - இளமதி
படக்குறிப்பு, செல்வன் - இளமதி

தனது மனைவியை கடத்திச் சென்றதாக செல்வன் கொடுத்த வழக்கில் ஆஜரான இளமதி, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், சுயவிருப்பத்தில் தான் பெற்றோருடன் சென்றேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மார்ச் 09ஆம் தேதி அன்று கொளத்தூர் காவல்நிலையத்தில் செல்வன் கொடுத்த புகாரில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் தன்னை இளமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும், சாதியின் பெயரை குறிப்பிட்டு இழிவுபடுத்தி தனது மனைவி இளமதியை கடத்திச்சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராவதற்காக இளமதி, அவரின் தாய் மற்றும் உறவினர்களோடு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

உறவினர்களோடு இளமதி
படக்குறிப்பு, உறவினர்களோடு இளமதி

மதியம் 3 மணி அளவில் முதன்மை மாவட்ட நீதிபதி முன்னர் ஆஜரான இளமதி, சுயவிருப்பத்தோடுதான் பெற்றோருடன் சென்றதாக வாக்குமூலம் அளித்தார் என இளமதியின் வழக்கறிஞர் சரவணன் பிபிசியிடம் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை முடிந்ததும் இளமதி தனது உறவினர்களோடு சென்றுவிட்டார்.

பவானி அருகே கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 28). இவர் இளங்கலை படிப்பு முடித்துவிட்டு, மாயபுரத்தில் உள்ள பருத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த குரும்பநாயக்கம்பாளையத்தைச் சேர்ந்த இளமதியும் (வயது 23), செல்வனும் மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர்.

செல்வன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு தனது வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என இளமதி கூறியதையடுத்து, மார்ச் 9 ஆம் தேதி மேட்டூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இருவரும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

செல்வன்

அன்று இரவே, சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியினர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், தாக்குதல் நடத்திய 50 பேர் கொண்ட கும்பல், மணப்பெண்ணை கடத்தி சென்றதாகவும் கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான இளமதி, ”தற்போது யாரிடமும் பேச விரும்பவில்லை, எனது தாயாருடன் செல்கிறேன். மேலும், தன்னை யாரும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கவில்லை” என கூறியதாக செல்வன் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: