டெல்டாவில் மீத்தேன்: "உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்" மற்றும் பிற செய்திகள்

டெல்டாவில் மீத்தேன்: உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்டாவில் மீத்தேன்: உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்

டெல்டாவில் மீத்தேன்: உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்

மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் குறித்து ஓஎன்ஜிசி உண்மையை மறைக்க முயற்சிக்கிறது என மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

"மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என காரைக்காலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஓஎன்ஜி-சியின் காரைக்கால் காவிரிப் படுகை பிரிவு மேலாளர் மிஸ்ரா பேசியுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளதும் தவறானது. ஹைட்ரோகார்பன் திட்டம் என்பது ஷேல் மீத்தேன், ஷேல் ஆயில் உட்பட அனைத்து வகை எண்ணெய் எரிவாயுவையும் எடுக்கும் திட்டமாகும். அபாயகரமான நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்திதான் ஹைட்ரோகார்பனை எடுக்க முடியும். காவிரிப் படுகையில் மட்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க 7,000 ச.கி.மீ பரப்பளவுக்கு மேல் ஏலத்தில் விடப்படுகிறது. இதில் ஓஎன்ஜிசி முக்கிய பங்கு வகிக்கிறது." - இவ்வாறாக கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரிக்கிறது.

line

பிலிப்பைன்ஸ் தேவாலய குண்டுவெடிப்பில் 20 பேர் பலி

பிலிப்பைன்ஸ் தேவாலய குண்டுவெடிப்பில் 20 பேர் பலி

பட மூலாதாரம், AFP/Getty Images

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இரு வெடிகுண்டுகள் வெடித்ததில் 20 பேர் இறந்துள்ளதாகவும், பல டஜன் மக்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய போராளிகள் தீவிரமாக உள்ள ஜோலோ தீவில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தின்போது முதல் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு கருவி ரிமோட் மூலம் வெடித்தது.

இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை முஸ்லீம் பகுதிக்கு அதிக சுயாட்சி தர கோரி நடந்த கருத்தறியும் வாக்களிப்புக்கு பிறகு இந்த தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

line

சீனாவுக்கான கனடா தூதரை நீக்கிய ஜஸ்டின் ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

சீனாவுக்கான கனடா தூதர் ஜான் மெக்கலனை பதவியிலிருந்து நீக்கி உள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரியை அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தது. இது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருந்தார் மெக்கலன். இதனை தொடர்ந்துதான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஜஸ்டின் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் பதவியிலிருந்து விலகும்படி மெக்கலனை கேட்டுகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஏன் என்று சொல்லவில்லை

line

குடியரசு தினத்தன்று வெளியே வர 'மதரஸா மாணவர்கள்' அச்சப்படுவது ஏன்?

குடியரசு தினத்தன்று வெளியே வர 'மதரஸா மாணவர்கள்' அச்சப்படுவது ஏன்?

சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் குடியரசு தினம் (ஜனவரி 26) போன்ற முக்கிய நாட்களின்போது, குர்தா-பைஜாமா அணிந்து, தலையில் தொப்பியும் கையில் இந்தியக் கொடியையும் வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதை காணமுடியும்.

பொதுவாக இந்த புகைப்படங்களில் காணப்படுவது மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மதரஸாக்கள் இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள் என்று கருதப்படுகிறது. இருந்தாலும், பல மதராசங்களில், இந்தி, ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பல்வேறுவிதமான மதரஸாக்கள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாதான் அனைத்திலும் பெரியது.

அங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் குடியரசு தினநாள் மற்றும் அதை அடுத்து வரும் விடுமுறை தினத்தன்று பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்று தாரூல் உலூம் தேவ்பந்த் மதரஸா அறிவுறுத்தியது.

line

நெட்ஃப்ளிக்ஸும், ஹாட்ஸ்டாரும் இந்தியாவில் சுயதணிக்கைக்கு ஆர்வம் காட்டுவதேன்?

நெட்ஃப்ளிக்ஸும், ஹாட்ஸ்டாரும் இந்தியாவில் சுயதணிக்கைக்கு ஆர்வம் காட்டுவதேன்?

பட மூலாதாரம், Facebook

இந்தியாவில் இணையதளம் மூலமாக ஆன்லைன் தொடர் நாடகங்களை ஒளிபரப்பும் சில தளங்கள் தங்கள் உள்ளடக்கங்களை சுயதணிக்கை செய்ய திட்டமிட்டுள்ளன.

இதற்காக, மொபைல் மற்றும் ஆன்லைன் சேவைகள் வழங்கும் துறையில் இயங்கும் நிறுவனமான 'இண்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேசன் (IAMAI) உடன் இணைந்து வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜியோ, ஜீ ஃபைவ், ஆல்ட் பாலாஜி மற்றும் வேறு சில ஆன்லைன் தளங்களும் இந்த வரைவுத் திட்டத்தை பின்பற்றவிருக்கின்றன.

இந்தியாவில் திரைப்படம், அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றின் உள்ளடக்கங்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் முறைமை இருந்தாலும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளடக்கங்களை தணிக்கை செய்வதற்கான முறைமையோ, சட்டங்களோ இல்லை.

"ஆன்லைன் உள்ளடக்க வழங்குநர்களின் சிறந்த நடைமுறைகளுக்கான நெறிமுறைகள்" என்ற இந்த வரைவுத் திட்டம் பிபிசிக்கு கிடைத்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :