''மற்ற மாநிலங்களில் வன்முறையை தூண்டி தப்பிக்கலாம். இங்கு நடக்காது'' - சங்பரிவாரை சாடிய பினராயி விஜயன்

பட மூலாதாரம், Mint
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.
தினமணி : ''மற்ற மாநிலங்களில் வன்முறையை தூண்டி தப்பிக்கலாம். இங்கு நடக்காது'' - சங்பரிவாரை சாடிய பினராயி விஜயன்
சபரிமலை ஐயப்பன் கோயில் விஷயத்தில் பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பின் அச்சுறுத்தல்களுக்கும் வெற்று மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டோம் என பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
கேரளாவில் பினராயி ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மக்களவையில் நேற்று (திங்கள்கிழமை) வலியுறுத்தினார்.
''மாநிலத்தில் வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மற்ற மாநிலங்களில் பாஜக - ஆர்எஸ்எஸ் வன்முறையை தூண்டியபோதும், படுகொலைகளில் ஈடுபட்டபோதும் நடவடிக்கைகளில் இருந்து தப்பி இருக்கலாம். ஆனால் இங்கு இது அனுமதிக்கப்படமாட்டாது. இவர்களின் வெற்று அச்சுறுத்தல்களுக்கு மாநில அரசு அஞ்சாது. இதையும் மீறி யாரும் தூண்டினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சங் பரிவார அமைப்புகள் கேரளத்தில் வன்முறையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைய முயல்கின்றன''.
''சபரிமலையில் பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்கின்றனர். அங்கு எந்த பிரச்சனையும் இல்லை. பக்தர்கள் அமைதியான முறையில் கோயிலுக்குச் சென்று வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் தான் சபரிமலை விவகாரத்தை வைத்து மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகின்றன'' என பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்
தினத்தந்தி: விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண்
மகாராஷ்டிர மாநிலத்தின் லாத்தூர் பகுதியைச் சேர்ந்த விருசாலி காம்லே என்ற பெண் 'பதான் சேனா' என்ற அமைப்பில் இணைந்து சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். அவருடன் பணியாற்றிய சில அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த அப்பெண் மன உளைச்சளால் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்தார். பேஸ்புக் மூலமாக நேரலையில் பேசிய அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் கொசு மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிந்தார். பின்னர் திடீரென நேரலையிலே விஷம் குடித்தார்.
அவரது பேஸ்புக் நண்பர்கள் இதைப்பார்த்து காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்து வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
தினகரன் - சிக்கலான சாலைகளை கடந்த பெருமாள் சிலை
வந்தவாசியில் இருந்து பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட பெருமாள் சிலை திருவண்ணாமலை நகரின் சிக்கலான சாலைகளை நேற்று கடந்தது.
வந்தவாசி அடுத்த கொரக்கொட்டை கிராமத்தில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பெருமாள் சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் ஏற்றப்பட்டு கடந்த மாதம் 7-ம் தேதி புறப்பட்டது. ஆனால் டயர் வெடித்தது, நெருக்கடியான சாலைகளில் கட்டடங்கள் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் மற்றும் போராட்டங்களை கடந்து இந்த சிலையின் பயணம் தொடர்கிறது.


பட மூலாதாரம், SAJJAD HUSSAIN
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - செம்மறியாட்டை திருடியதாக சந்தேகப்பட்டு தலித்தை சாகும் வரை தாக்கிய ஆதிக்கசாதியினர்
குஜராத்தில் போடட் எனும் விவசாய கூலி கடந்த டிசம்பர் 24-ம் தேதி குண்டோல் கிராமத்தின் வழியாக சென்றபோது ஒரு குழுவால் சிறைபிடிக்கப்பட்டார். கிராமவாசி ஒருவரின் பண்ணையில் இருந்து ஒரு செம்மறியாட்டை திருடியதாக சந்தேகப்பட்டு அவரை அக்குழு அடித்து உதைத்தது. இந்த சம்பவம் நடந்த பின்னர் 51 வயதான போடட் மரணமடைந்துள்ளார். இதில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ஆதிக்க சாதிகள் என்றும் குஜராத்தின் ஆரவல்லி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்துவரும் துணை காவல்துறை கண்காணிப்பாளர் நரேஷ் கஞ்சாரியா, ''போடட் அடித்து உதைக்கப்பட்டு ஷம்லாஜி காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். எனது முதல்கட்ட விசாரணையில் இருவரிடையே சமாதானம் ஏற்பட்டு, போடட் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். யாரும் புகார் பதிவு செய்யவில்லை'' எனத் தெரிவித்ததாக அந்நாளிதழின் செய்தி கூறுகிறது.
''காவல்துறை எங்களிடம் சில ஆவணங்களை கொடுத்து கையெழுத்திடச் சொன்னது பின்னர் நாங்கள் கிளம்பலாம் என்றார்கள். நானும் எனது தந்தையும் எனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிககொண்டிருந்தோம். வீட்டை அடையும் வேளையில் என் அப்பா வண்டியை நிறுத்தச் சொன்னார். ஆனால் அவர் இருக்கையில் இருந்து கீழே விழுந்து மூர்ச்சையானார். அதன் பின்னர் எழுந்திருக்கவே இல்லை'' என போடட் மகன் ரமேஷ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
'' உடல் கூறாய்வு அறிக்கையின்படி போடட் சாகுமளவு அடித்து உதைக்கப்பட்டுள்ளார். அவரது இடுப்பெலும்பு முறிந்துள்ளது. மேலும் பல்வேறு உள் காயங்களும் அவருக்கு மரணம் ஏற்படுத்தியுள்ளன'' என கஞ்சாரியா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













