சீனாவுக்கு ரயிலில் சென்றார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், EPA
சீனாவுக்கு ரயிலில் சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டார். செவ்வாய்க்கிழமையன்று அவர் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்தார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 7 - 10 வரை இருப்பார் என வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபரிடையே இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுவதாக பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த பயணச் செய்தி வந்துள்ளது.
பாதுகாப்பு வசதிகளுடன் மற்ற சில மூத்த வட கொரிய அதிகாரிகளுடன் அதிபர் கிம் சீனாவுக்கு பயணித்துள்ளார். ஒரு வருடத்துக்குள் நான்காவது முறையாக சீனா சென்றுள்ளார் அதிபர் கிம்.
வட கொரியாவுடன் ராஜீய உறவில் முக்கிய கூட்டாளியாக விளங்குகிறது சீனா. வட கொரியாவுக்கு வர்த்தக உறவிலும் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. அதிபர் ஷி ஜின்பிங் பதவியேற்ற பின் ஆறு வருடங்களாக சந்திக்காமல் இருந்த வடகொரிய அதிபர் கடந்த வருடம் (2018-ல்) மட்டும் மூன்று முறை சந்தித்தார்.


இலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம்
இலங்கையின் வட மாகாணத்திற்கான ஆளுநராக, தமிழரொருவர் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை பிற்பகல் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு, இலங்கை ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றது.
ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இவர்? விரிவாக படிக்க - இலங்கை வட மாகாணத்தின் முதல் தமிழ் ஆளுநர்

இஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண், பாங்காக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பினார் - விரிவான தகவல்

பட மூலாதாரம், EPA/THAI IMMIGRATION BUREAU
சௌதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தெரியாமல் குவைத்தில் இருந்து தப்பித்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 18 வயதுப் பெண், வழியில் தாய்லாந்து வந்து சேர்ந்தார்.
அவரது பாதுகாப்பு கருதி, அவரது விருப்பத்துக்கு மாறாக சௌதிக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என்று தாய்லாந்து குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.நா. அகதிகள் குழுமத்தின் பாதுகாப்பில் அந்தப் பெண் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பினார் என்று தாய்லாந்து குடியேற்றப் பிரிவு போலீஸ் தலைவர் கூறினார்.
என்ன நடந்தது? விரிவாக படிக்க - இஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண், விமான நிலையத்தில் இருந்து கிளம்பினார்


பட மூலாதாரம், Getty Images
ரிஷப் பந்த் அதிரடி ஆட்டம் - தோனியின் இடத்தை பூர்த்தி செய்கிறாரா?
2014-ல் மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார் மகேந்திர சிங் தோனி.
அயல்மண்ணில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த சமயம் அது. ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் டெஸ்ட் தொடரின் இடையிலேயே கேப்டன் பதவியை விட்டு விலகினார் தோனி, தவிர டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட்டார். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்து வந்தவர் திடீரென ஓய்வு பெற்றது அவரது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய விருத்திமான் சாஹா, பார்த்தீவ் படேல், தினேஷ் கார்த்திக் என சீனியர் வீரர்களை விக்கெட் கீப்பராக களமிறக்கியது கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம். விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பிங் பணியில் ஜொலித்தபோதும் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீரர்களை எதிர்கொண்டு பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை.
கொல்கத்தாவில் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் சதமடித்தார். ராஞ்சியில் 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் குவித்தார். இதைத்தவிர தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகளுக்கு எதிராக ஒரு அரைசதம் கூட விளாசியதில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்த ரிஷப் பந்த் தனது திறமையின் மூலம் பெரும் கவனம் பெற்றிருக்கிறார்.
யார் இந்த ரிஷப் பந்த்? விரிவாக படிக்க -தோனியின் இடத்தை பூர்த்தி செய்கிறாரா ரிஷப் பந்த்?


பட மூலாதாரம், Getty Images
வேலை நிறுத்தம் ஏன்? "4 ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு 3.15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி"
செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இந்தியாவில் நடக்கும் நாடுதழுவிய வேலை நிறுத்தத்துக்கான காரணம் என்ன என்று கேட்டபோது, "கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் கார்ப்பரேட்டுகள் பெற்ற சுமார் 3.15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓர் அரசு கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்புக்கு ஓராண்டுக்கு செலவிடும் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட இது அதிகம்" என்று ஒரு வங்கி ஊழியர் சங்கத் தலைவர் கூறினார்.
பேங்க் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (பெஃபி) அமைப்பின் அகில இந்திய இணைச் செயலாளரும், தமிழ்நாடு பொதுச் செயலாளருமான சி.பி.கிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்திய அளவிலான தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டின் வங்கி ஊழியர்கள் பங்கேற்பு பற்றியும், இந்த வேலை நிறுத்தத்துக்கான காரணம் பற்றியும் பேசினார்.
இந்த வேலை நிறுத்தத்துக்கான காரணங்களை விவரித்த அவர், புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்து 23 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் எந்த அளவுக்கு விற்கப்பட்டனவோ அதைப் போல 137 சதவீதம் கடந்த நாலரை ஆண்டு பாஜக ஆட்சியில் மட்டும் விற்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
விரிவாக படிக்க - வேலை நிறுத்தம் ஏன்? "4 ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு 3.15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












