வேலை நிறுத்தம் ஏன்? "4 ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு 3.15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி"

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இந்தியாவில் நடக்கும் நாடுதழுவிய வேலை நிறுத்தத்துக்கான காரணம் என்ன என்று கேட்டபோது, "கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் கார்ப்பரேட்டுகள் பெற்ற சுமார் 3.15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓர் அரசு கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்புக்கு ஓராண்டுக்கு செலவிடும் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட இது அதிகம்" என்று ஒரு வங்கி ஊழியர் சங்கத் தலைவர் கூறினார்.

பேங்க் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (பெஃபி) அமைப்பின் அகில இந்திய இணைச் செயலாளரும், தமிழ்நாடு பொதுச் செயலாளருமான சி.பி.கிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்திய அளவிலான தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டின் வங்கி ஊழியர்கள் பங்கேற்பு பற்றியும், இந்த வேலை நிறுத்தத்துக்கான காரணம் பற்றியும் பேசினார்.

இந்த வேலை நிறுத்தத்துக்கான காரணங்களை விவரித்த அவர், புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்து 23 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் எந்த அளவுக்கு விற்கப்பட்டனவோ அதைப் போல 137 சதவீதம் கடந்த நாலரை ஆண்டு பாஜக ஆட்சியில் மட்டும் விற்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

பெட்ரோல் விலை ரூ.38 ஆக இருந்திருக்கவேண்டும்

எல்லாவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கொண்டுவந்த பாஜக அரசு, பெட்ரோல், டீசலுக்கு மட்டும் ஜி.எஸ்.டி கொண்டுவர மறுப்பது ஏன்? என்று கேள்வி கேட்ட அவர், ஜி.எஸ்.டி.யில் அதிகபட்ச வரிவிதிப்பே 28 சதவீதம்தான். அந்த விகிதத்தில் பெட்ரோல் - டீசலுக்கு வரி விதித்திருந்தால்கூட பெட்ரோல் விலை லிட்டர் 38 ஆகவும், டீசல் விலை லிட்டர் 28 ஆகவும் இருந்திருக்கும்.

எண்ணெய் வளமும், கிளர்ச்சியும்

பட மூலாதாரம், Getty Images

ஏனென்றால் மோதி ஆட்சிக்கு வந்தபோது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 102 டாலர். தற்போது 71 டாலர்தான். ஆனால், 70 முதல் 75 சதவீத வரி விதித்து, சர்வதேச சந்தையில் விலை குறைந்தபோதும், இங்கே விலை ஏற்றி விற்கிறார்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் வாழ்க்கை மிகப்பெரும் அளவில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஒரு கணக்கீட்டின்படி 82 சதவீத ஆண்களும், 92 சதவீத பெண்களும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.

இதையெல்லாம் எதிர்த்துத்தான் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது என்று கூறினார் கிருஷ்ணன்.

தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமிய வங்கிகள், ரிசர்வ் வங்கிக் கிளை, நபார்டு வங்கி உள்ளிட்ட அனைத்துவகை வங்கிகளின் ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அவர் கூறினார்.

எனினும், ஏஐபிஓசி, என்.சி.பி.சி. ஆகிய இரு வங்கி ஊழியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்பதால் ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளும் திறந்திருக்கும் என்று தெரிகிறது.

அரசு ஊழியர்கள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அவர்களுடன் இணைக்கப்பெற்ற 72 துறைவாரி சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன என்பதால் அரசு அலுவலகங்கள் பெருமளவில் செயல்படாது என்று தெரிகிறது.

பிபிசி தமிழிடம் பேசிய அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம். அன்பரசு அரசின் மிரட்டல்களுக்குப் பயப்படாமல் தங்கள் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்று 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய இந்த அரசு ஊழியர், பொதுத்துறை நிறுவன ஊழியர் வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.கவை தவிர...

2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில், பா.ஜ.க. தொழிற்சங்கமான பி.எம்.எஸ். தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன. தமிழ்நாட்டில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர் என்று மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுப்படபோவதாக கூறி உள்ளனர்.

ஆனால், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

நடவடிக்கை

கிரிஜா வைத்தியநாதன்
படக்குறிப்பு, கிரிஜா வைத்தியநாதன்

"தமிழக அரசு ஊழியர்கள் வரும் 8, 9 தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அன்று விடுப்பு எடுக்கக் கூடாது. மீறினால் ஊதியம் பிடிக்கப்படும்" என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: