தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை - பதவி இழக்கிறார்

பட மூலாதாரம், facebook
தமிழக அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு பேருந்துகளை கல் வீசித் தாக்கிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த தண்டனையை நிறுத்திவைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் அ.தி.மு.க. சார்பில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
1998ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள பாகலூரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாலகிருஷ்ண ரெட்டி உட்பட 108 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதில் பாலகிருஷ்ண ரெட்டி 78வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் தற்போது அமைச்சராக இருக்கும் நிலையில், இந்த வழக்கு சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி கூறினார். இதில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, தாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாகவும் அதுவரை தங்கள் மீதான தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென 16 பேரும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு மாதத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி தண்டனையை நிறுத்திவைப்பதாகக் கூறினார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஒரு குற்ற வழக்கில் இரண்டாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அவரது உறுப்பினர் பதவி பறிபோகும். அதன்படி பாலகிருஷ்ண ரெட்டி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்கிறார்.
தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் இது மாறுமா என உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துருவிடம் கேட்டபோது, "தீர்ப்பை நிறுத்திவைப்பது வேறு. தண்டனையை நிறுத்திவைப்பது வேறு. தண்டனையை நிறுத்திவைத்திருப்பதால் அவர் குற்றவாளி அல்ல என்று ஆகாது. ஆகவே அவரது பதவி பறிபோகும்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












