வாபஸான 'ரெட் அலர்ட்': என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

பட மூலாதாரம், Slavica
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பளிக்கும் வகையில் தமிழகத்திற்கு நாளை மழை பொழிவதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 4ஆம் தேதி அனுப்பிய எச்சரிக்கைக் குறிப்பில் அக்டோபர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகத்தில் கன மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநிலத்தின் பல இடங்களில் 25 செ.மீட்டருக்கும் மேலான மழைப்பொழிவு இருக்கும் என்பதால், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இப்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை என்ன நடக்கும் என்பது குறித்து மக்களிடையே அச்சம் நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்று ஃபேஸ்புக்கில் அறியப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜானை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது.
'மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை"
"முதலில் ரெட் அலர்ட் என்பது மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் தமிழகம் முழுவதும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைளை முடிக்கிவிடுவதற்காக தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்த நிர்வாக ரீதியிலான எச்சரிக்கை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ரெட் அலர்ட்டிற்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு கிடையாது" என்று பிரதீப் ஜான் கூறுகிறார்.

பட மூலாதாரம், FACEBOOK
சிவப்பு, ஆம்பர், மஞ்சள், பச்சை போன்ற நிறத்தின் அடிப்படையிலான எச்சரிக்கையை விடுப்பது குறித்து பிரதீப் ஜானிடம் கேட்டபோது, "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழையின் தீவிரத்தை பொறுத்து தேசிய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் எச்சரிக்கைகளுக்கு நிறம் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். சமீபத்திய கேரள வெள்ளத்தின்போது கூட, அம்மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது" என்று அவர் கூறினார்.
நாளை என்ன நடக்கும்?
தமிழகத்தை பொறுத்தவரை நாளை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் போன்ற வட மாவட்டங்களைவிட தென் தமிழகத்திலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.


ஒவ்வொரு வருடமும் பொழியும் சாதாரண பருவ மழைதான் இது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வகையிலான மழைப்பொழிவு அடுத்த சில நாட்களுக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்பில்லை.
சமூக வலைத்தளங்களில் பரவும் அதிகாரப்பூர்வமற்ற கற்பனை செய்திகளை மக்கள் நம்பக்கூடாது என்று வெதர்மேன் மேலும் கூறினார்.
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?
கடந்த 25 வருட சராசரியை பார்க்கும்போது வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் 15 - 22ஆம் தேதிக்குள் தொடங்கும். தற்போதுள்ள சூழ்நிலை, வடகிழக்கு பருவமழை தொடங்கியதற்கான அறிகுறிகளை காண்பித்தாலும், இன்னும் ஒருசில நாட்களில் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.

பட மூலாதாரம், Onnes
தற்போது தெற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நாளையோ அல்லது நாளை மறுநாளோ புயலாக மாறி ஓமனை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல்கள் மூலமே தமிழகத்திற்கு இந்த பருவத்திற்கான பெரும்பாலான மழைப்பொழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
45 நாட்கள் தொடர் மழையா?
தமிழகத்தில் அடுத்த 45 நாட்களுக்கு தொடர் மழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக நேற்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
இதுகுறித்து, வெதர்மேனிடம் கேட்டபோது, "45 நாட்கள், அதாவது ஒன்றரை மாதம் தொடர்ந்து மழைப்பொழியும் என்று முன்னரே கணித்து கூற முடியாது.
வானிலை கணிப்பு என்பது 2-7 நாட்கள் வரையிலான காலத்திற்கு துல்லியமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நல்ல நிலையில் உள்ளதால், விட்டுவிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்கு வழக்கம்போல் மழைப்பொழியும்.
சென்ற ஆண்டைவிட இந்தாண்டு நல்ல மழைப்பொழிவு இருக்குமென்று கருதுகிறேன்" என்று கூறினார்.
எல்-நினோவால் அதிக மழைப்பொழிவு இருக்குமா?
புவி வெப்பமயமாதலின் காரணமாக கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையில் ஏற்படும் ஒழுங்கற்ற காலநிலையே எல்-நினோ என்றழைக்கப்படுகிறது.
இதன் காரணமாக பல நாடுகளில் அதிகளவிலான மழை பெய்து பேரழிவுகள் நிகழந்து வருகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்கும் இந்த எல்-நினோவே காரணமென்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், DurkTalsma
2 முதல் 4 வருடத்திற்கு ஒருமுறை ஏற்படும் எல்-நினோ, இந்த வருடம் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்று வெதர்மேனிடம் கேட்டதற்கு, "பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை வேறுபாட்டை பொறுத்தே இதுகுறித்து சொல்ல முடியும்.
தற்போதைக்கு எல்-நினோவால் தமிழகத்தில் மழைப்பொழிவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், இம்மாதத்தின் இறுதியிலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் எல்-நினோவால் மழைப்பொழிவதற்கான வாய்ப்புள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
'ரெட் அலர்ட்' என்றால் என்ன? மற்ற நிற எச்சரிக்கைகள் என்ன கூறுகிறது?
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திலோ அல்லது மாநிலம் முழுவதுமோ அடுத்த ஐந்து நாட்களில் நிலவவுள்ள வானிலையை முன்னரே கணித்து அதுகுறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆராய்ச்சி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.


அந்த வகையில் சமீபத்தில் கேரளாவை புரட்டிப்போட்ட மழையின்போது 'ரெட் அலர்ட்' என்னும் சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்திருந்தது.
சிவப்பு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் பிறப்பிக்கும் மிகவும் அதிகபட்ச எச்சரிக்கையே சிவப்பு எச்சரிக்கை எனப்படும்.
அதாவது, மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும், சாலைகள், கட்டடங்கள், போக்குவரத்து போன்றவற்றிற்கு சேதத்தையும் விளைவிக்கும் வகையிலான மோசமான வானிலையை முன்கூட்டியே தெரிவிப்பதற்காகவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Vikrant_Sardana
இச்சூழ்நிலையின்போது, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதற்கான சூழ்நிலை உள்ளதால் மக்கள் தங்களது உயிரையும், உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஆம்பர் எச்சரிக்கை - சிவப்பு எச்சரிக்கையை விட சற்றே குறைந்த வீரியமுடைய எச்சரிக்கை ஆம்பர் எச்சரிக்கை என்றழைக்கப்படுகிறது.
இந்த நிலையிலும் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருந்தாலும், போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகும். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
மஞ்சள் எச்சரிக்கை - மோசமான வானிலையை குறிப்பதற்கே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் நாளிலிருந்து அடுத்த 2-3 தினங்களுக்கு நிலவும் வானிலையை மக்கள் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.
பச்சை எச்சரிக்கை - சாதாரண மழைப்பொழிவை தெரிவிப்பதற்காகவே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதுகுறித்து மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை.
பிற செய்திகள்:
- பாலியல் ஆசைகளை பணத்தால் தணிக்கும் ஆணின் கதை #HisChoice
- தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு
- பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதிக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ஆதரவு
- ’என் உடலின் விருப்பம் நீங்கள் விரும்பும்படி ஏன் இருக்க வேண்டும்?’ #beingme
- பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பேசும் பெண் பத்திரிகையாளர்கள் #MeToo
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












