குடியரசுத் தலைவர், பிரதமர் பயணம் செய்ததற்கான கட்டண பாக்கி ரூ.1,146 கோடி
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "பயணம் செய்ததற்கான கட்டண பாக்கி ரூ.1,146 கோடி"

பட மூலாதாரம், Getty Images
இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் தனி விமானங்களில் பயணம் செய்த வகையில் 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1,146 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகிய தேசியத் தலைவர்கள் பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள்.
இவர்களுக்கான தனி விமானப் பயண ஏற்பாடுகளை பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் கவனிக்கிறது. பயணிகள் விமானத்தை, தலைவர்களின் வசதிக்கேற்ப மாற்றி அமைத்து அந்த நிறுவனம் வழங்குகிறது.
அவற்றுக்கான கட்டணத் தொகையை யார் பயணம் செய்கிறார்களோ அதற்கு ஏற்ப ராணுவ அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சரவை செயலகம் வழங்கும்.
இப்படி தலைவர்கள் தனி விமானங்களில் பயணம் செய்த வகையில் 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கட்டண பாக்கி தொடர்பாக அந்த நிறுவனத்திடம், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு அந்த நிறுவனம், ஏறத்தாழ 10 ஆண்டுகளாக இந்த விதத்தில் மத்திய அரசு வைத்துள்ள கட்டண பாக்கி ரூ.1,146 கோடி என தெரிவித்து இருக்கிறது.


ராணுவ அமைச்சகம் ரூ.211.17 கோடி, மத்திய அமைச்சரவை செயலகமும், பிரதமர் அலுவலகமும் ரூ.543.18 கோடி, வெளியுறவுத்துறை அமைச்சகம் ரூ.392.33 கோடி பாக்கி வைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு மத்திய அரசு விமான கட்டண பாக்கி வைத்துள்ள பிரச்சினை, 2016-ம் ஆண்டு தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்குகிற பொதுத்துறை நிறுவனத்துக்கு மத்திய அரசே ரூ.1,146 கோடி பாக்கி வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


பட மூலாதாரம், இந்து தமிழ்

"விரைவாக தீரும் கேஸ் சிலிண்டர்கள்"
சென்னையில் வினியோகம் செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களில் விரைவாக கியாஸ் தீர்ந்து விடுவதாக இல்லத்தரசிகள் புகார் தெரிவித்து உள்ளனர். 45 நாட்கள் வரை பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் தற்போது 35 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது என்று இல்லதரசிகள் கூறுவதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் சராசரியாக கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் 45 நாட்கள் வரை பயன்படுத்தப்பட்ட சிலிண்டரை தற்போது 30 முதல் 35 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. கடந்த 3 மாதமாகவே இந்த நிலை நீடித்து வருகிறது என்று அவர்கள் கூறுவதாக விவரிக்கிறது அந்த செய்தி.
சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் மையங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை. காரணம் மையத்தில் எவ்வளவு கியாஸ் இருப்பு உள்ளது?, எத்தனை சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பப்பட்டுள்ளது? என்பன போன்ற தகவல்கள் கணினி மூலம் தெரிந்துவிடும். அத்துடன் தரக்கட்டுப்பாடு செய்து தான் சிலிண்டர்கள் வெளியே வருகிறது. குறைந்த எடையில் கியாஸ் நிரப்பி விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரசு துறையிடம் கிடையாது. அவ்வாறு செய்வதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த லாபமும் இல்லை. அப்படியானால் எங்களிடம் இந்த பிரச்சினை இல்லை என்றால் வேறு எங்கு இருக்கிறது? என்பது ஆய்வு செய்யப்படும் என்று இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள் என்கிறது அந்த செய்தி.


தி நியூ இந்துயன் எக்ஸ்பிரஸ்: "நிச்சயம் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும்'
எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் மதுரையில் அமைக்கப்படுமென்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களை கொண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாது என்பது போன்ற செய்திகள் உலாவின.
இதுதொடர்பாக பேசிய ராதாகிருஷ்ணன் இது உண்மையில்லை. நிச்சயம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அவர் கூறியதாக அந்த செய்தி விவரிக்கிறது.
இந்து தமிழ்: "கிராமங்களில் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம்"
கிராமங்களில் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கப்படும் என்றும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றும் சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"சென்னை பகுதியில் மீன்பிடி படகு தயாரிப்பது, மீன்பிடி படகு பழுதுபார்க்கும் தளம், படகுத்துறை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்குவது, நல்வாழ்வுத் திட்டங் களை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலை யம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பது, நதிகளை சீரமைப்பது ஆகிய பணியை செயல்படுத்த வசதியாக தமிழ்நாட்டு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்புக் கழகம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்." என்றும் அவர் அறிவித்தார் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தினர் 8 பேர் சாவு'
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், தினமணி
"சென்னை பள்ளிக்கரணை ஜல்லடியான்பேட்டை திருவள்ளுவர் நகர் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மு.சுப்ரமணி(65). சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.
சனிக்கிழமை இரவு சுப்ரமணி தனது மனைவி ஜெயலட்சுமி(63), மகன்கள் விஜயராகவன் (48), பாலமுருகன் (43), மருமகள்கள் வி.கோமதி (38), பா.கவிதா(38), மகள் பாக்கியலட்சுமி (31), மருமகன் மஞ்சுநாதன்(45), இவர்களது மகள்கள் நிவேதா என்கிற வசந்தலட்சுமி (11), ரம்யா (5), விஜயராகவன் மகள்கள் கந்தலட்சுமி (12), அன்னலட்சுமி என்கிற இரண்டரை வயது மகள் ஜெயஸ்ரீ, பாலமுருகன் மகன் கந்தசாமி (9) ஆகியோருடன் திருச்சி சிறுகமணி சக்தி நகரிலுள்ள சொந்த வீட்டில் விடுமுறையை கொண்டாடுவதற்காக காரில் புறப்பட்டு வந்தார். காரை அவரது மகன் பாலமுருகன் ஓட்டினார்.
இவர்கள் வந்த கார், திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு வந்தபோது, சாலையின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பக்கம் லாரிக்குள் புகுந்தது.
இதில், காரில் பயணம் செய்த சுப்ரமணி, அவரது மனைவி ஜெயலட்சுமி, காரை ஓட்டி வந்த பாலமுருகன், அவரது மகன் கந்தசாமி, சுப்ரமணியின் மற்றொரு மகன் விஜயராகவன், அவரது மனைவி கோமதி, மருமகன் மஞ்சுநாதன், இவரது மகள் நிவேதா ஆகிய 8 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












