மேட்டூர் அணையில் முழு உபரி நீரும் திறப்பு: கரை புரண்டு ஓடும் காவிரி
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதும் திறந்துவிடப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோரப்பகுதிகளில் பொதுமக்கள் செல்லவேண்டாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் (திங்கள்கிழமை) மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120.4 அடியை எட்டியது.
தற்போது வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருக்கும் நிலையில், 16 ‘கண் மதகு‘ வழியாக வினாடிக்கு 53 ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு 8 ‘கண் மதகுகள்‘ வழியாக 700 கனஅடி உபரிநீரும் வெளியேற்றப்படுகிறது.
மேலும், பசனத்திற்காக 30 ஆயிரம் கனஅடியும், சுரங்க மின்நிலையம் மற்றும் அனல் மின்நிலையம் வழியாக 23 ஆயிரம் கண அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி கரையோரப்பகுதிகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்த அவர், புகைப்படம் மற்றும் சுயப்படம் (செல்பி) எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காவிரி செல்லும் பகுதி மற்றும், அணை பூங்காக்களில் சிறப்பு காவல் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து பகுதிகளிலும் பேரிடர் மீட்புக்குழுவினர் 24 மணிநேரமும் தயாராக உள்ளனர்.

1077 என்ற கட்டண இலவச (டோல்ப்ரீ) தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டால், உடனடியாக அவர்களுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ரெட்டியூர் பகுதியில் காவிரியில் மூழ்கி உயிரிழந்த 5 நபர்களில் ஒருவரது சடலம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், சடலத்தை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் ரோகிணி கூறினார்.
பிற செய்திகள்:
- முக்கிய ராக்கெட் ஏவுதளம் அகற்றம்: வாக்குறுதியை நிறைவேற்ற வட கொரியா உறுதி?
- திருப்பூர் பாப்பாள் விவகாரம்: நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்
- கோயில் போல கட்டப்பட்ட கீழக்கரை பள்ளிவாசல்கள்: நல்லிணக்கத்தின் சாட்சி
- மூன்று பெண்களின் வாழ்வை மாற்றிய ட்ரெக்கிங் அனுபவங்கள்
- அமேசான் காட்டில் 22 ஆண்டுகள் தனி ஆளாக வாழ்ந்து வரும் மனிதன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













