உச்ச நீதிமன்றம்: வழக்குகளை அமர்வுகளுக்கு ஒதுக்கும் அதிகாரம் யாருடையது?
இதற்கு முன்னால் நடந்திராத வகையில், ஜனவரி 12ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தை தலைமை நீதிபதி நிர்வகிப்பதில் குறைபாடுகள் இருப்பதாக கூறி செய்தியாளர்களை சந்தித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிட்டு ஒதுக்குவது தொடர்பான பிரச்சனைகள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.
வழக்குகள் ஒதுக்கீடு என்பது என்ன? யார் ஒதுக்குகிறார்கள்?
உச்ச நீதிமன்ற வழக்கு பட்டியல் ஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நீதிபதிகளை கொண்ட அமர்வுகள் விசாரணை செய்வதற்கு ஒதுக்கப்படும் வழக்குகளின் பட்டியலை குறிக்கிறது.
ஒரு வழக்கை விசாரணைக்கு என்று எப்போது பட்டியலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்கிறார்.
இந்த சிறப்புரிமை 'மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், DDNEWS
இதனால், குறிப்பிட்ட ஒரு வழக்கை விசாரிக்க ஓர் அமர்வை ஏற்படுத்துவதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் நடைமுறை மற்றும் செயல்முறை மற்றும் அலுவலக நடைமுறை, 2017-ன்படி; தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் உச்ச நீதிமன்ற பதிவாளரால் வழக்குகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை தாங்கிய அரசியல் சாசன அமர்வு ஒன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் 'மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர்' என்று தீர்ப்பு அளித்தது.
தலைமை நீதிபதியால் வழங்கப்பட்டாலொழிய எந்தவொரு நீதிபதியும் இதனை தன்னுடைய அதிகாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீபக் மிஸ்ரா குறிப்பிட்டிருந்தார்.
வழக்குகள் ஒதுக்கீட்டின் முக்கியத்துவம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இருக்கின்ற அதிகாரம் பற்றி 4 உயர் நிலை நீதிபதிகளும் வெளிப்படையாக பேசியபோது, உச்ச நீதிமன்றத்தின் வழக்குகள் ஒதுக்கீடு பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வழக்குகள் ஒதுக்கீடு செய்வதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எல்லா உரிமைகளும் உள்ளன என்றும் தெரிவித்திருக்கும் அவர்கள், "முதலில் சம நிலையில் இருக்கும் நீதிபதிகளில் தலைமை நீதிபதி முதன்மையானவர், அவர் அதற்கு மேலானவரும், குறைவானவரும் இல்லை" என்று தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், PTI
தற்போதைய சமூக -அரசியல் மற்றும் கலாச்சார சூழலில் சட்ட உரை விளக்கத்திற்கு தயாராகவே இருப்பதாக உணரப்படுகிறது.
எனவே, இந்த நீதிபதிகள் அமர்வு சட்டத்தை ஒரே மாதிரி புரிந்து கொள்ளலாம்.
ஆனால், ஒரே மாதிரியான உண்மைகளுக்கு வித்தியாசமான முறையில் விளக்கம் அளிக்கலாம்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்குகளை பட்டியலிடுவதையும், ஒதுக்கீடு செய்கின்ற முறையையும் இந்த 4 நீதிபதிகளும் எதிர்த்துள்ளனர்.
நாட்டிற்கும், நாட்டின் அமைப்பிற்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் வழக்குகளை, குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கியது எந்தவொரு பகுப்பாய்வு அடிப்படையும் இன்றி தலைமை நீதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட அமர்வுகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தப் பிரச்சனை தொடர்பான பிபிசியின் நேர்காணலில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் கவலை தெரிவித்தார்.
"வழக்குகளை ஒதுக்குவதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாபெரும் அதிகாரங்களை கொண்டுள்ளார். விளைவுகளை முடிவு செய்வதில் இது மிகவும் முக்கியமானது. இதனை தவறாக பயன்படுத்த யாராவது விரும்பினால் செய்ய முடியும். இந்த வழக்குகள் ஒதுக்கீடு தொடர்பாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் யாரும் கேள்வி கேட்க முடியாது. இது தலைமை நீதிபதிக்கே உரிய உரிமை" என்று அவர் கூறினார்.
"எல்லா வழக்குகளும் வழமையான வழக்குகள் அல்ல. பல சமூக - அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமான வழக்குகளும் உள்ளன. இத்தகைய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட உயர் நிலையிலுள்ள 5 நீதிபதிகளால்தான் நடத்தப்பட வேண்டும்" என்பதை வலியுறுத்தி தலைமை நீதிபதி மிஸ்ராவுக்கு நீதிபதி பி.பி.சாவந்த் கடிதமும் எழுதியுள்ளார்.
பிற நாடுகளில் நடைமுறை என்ன?
இந்திய உச்ச நீதிமன்றத்தில் 25 நீதிபதிகள் உள்ளனர். இந்த நீதிபதிகள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட அமர்வுகளில் இடம்பெறுவர்.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் உள்ளனர். விசாரணைக்கு வருகின்ற வழக்கை விசாரிக்க இந்த 9 பேரும் ஒரே அமர்வாக பங்கேற்பர்.
பிரிட்டனில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் 12 நீதிபதிகள் உள்ளனர். அதில் 5 அல்லது 6 நீதிபதிகள் ஒரு அமர்வில் இடம்பெறுவர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பதற்கு தேர்தெடுக்கும் வழக்குகளை இந்த இரு நாடுகளும் குறைத்து கொண்டுள்ளன.
ஆனால். இந்தியாவில், சக நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதிக்குதான் அதிக அதிகாரம் உள்ளது.
பிற செய்திகள்
- கிரிக்கெட்: வெளிநாட்டு மண்ணில் மீண்டும் தொடரை இழந்தது இந்தியா
- ஏர் இந்தியா: உடைந்த கழிவறை, ஓடும் எலிகள் மற்றும் கனிவான கவனிப்பின் கதைகள்
- ஹைதராபாத்தின் கடைசி நிஜாம்: வரலாறு சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்
- ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா ? ரஜினிகாந்த் பதில்
- ஜல்லிக்கட்டை பார்க்க வந்த அப்பாவிகள் பலியானதற்கு யார் பொறுப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












