தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு சுமத்திய 4 நீதிபதிகளின் பின்னணி என்ன?

உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளார்கள் . அந்த நான்கு நீதிபதிகளின் பின்னணி பற்றிய விரிவான தொகுப்பு இது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி

நீதிபதி ஜஸ்தி செல்லமேஸ்வர்

பதவிக்காலம் - 10-10-2011 முதல் 22 -06 -2018 வரை

1976-ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைகழகத்தில் செல்லமேஸ்வர் சட்டப்படிப்பை முடித்தார். 1995 ஆம் ஆண்டு மூத்த வழக்குரைஞராக தகுதி உயர்த்தப்பட்டார். 1995 அக்டோபர் 13-ஆம் தேதி அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்டடார். பின்னர் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 03.05.2007 அன்று கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செல்லமேஸ்வர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு 17.03.2010 அன்று பொறுப்பேற்றார்.

2011 அக்டோபர் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக செல்லமேஸ்வருக்கு பதவி உயர்த்தப்பட்டது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஆவார்.

செல்லமேஸ்வர்

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, செல்லமேஸ்வர்

குறிப்பிடத்தக்க தீர்ப்புகள் :-

இணையத்தில் மனதை புண்படுத்தும் கருத்துகளை பதிபவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்க வழி செய்த சட்டத்தை ரத்து செய்து நீதிபதி செல்லமேஸ்வர் மற்றும் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

அந்தரங்கத்துக்கான உரிமை (2017)

அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை என தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழுவில் இவரும் இருந்தார். இந்த மைல் கல் தீர்ப்பை 2017-ஆம் ஆண்டு அரசியலமைப்பு அமர்வு வழங்கியது.

தேசிய நீதித்துறை நியமன ஆணையம் குறித்த தீர்ப்பு (2015)

தேசிய நீதித்துறை நியமன ஆணையம் குறித்த வழக்கை விசாரித்த பெஞ்சின் பெரும்பான்மைத் தீர்ப்புடன் மாறுபட்ட தீர்ப்பை செல்லமேஸ்வர் வழங்கினார். உயர்நீதி்மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு தற்போது பின்பற்றப்படும் "கொலீஜியம் முறை"யானது வேண்டியவர்களுக்கு பதவியை கொடுப்பதற்கான நாசூக்கான பெயர் என்று குறிப்பிட்ட அவர், போதிய திறமையின்மையும், திறமைக் குறைவும் இந்த முறையால் ஊக்குவிக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படக்கூடிய அரசமைப்புச் சட்ட சீர்கேடு வெகுதொலைவில் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

2. நீதிபதி மதன் பீமராவ் லோகுர்

பதவிக்காலம் - 04.06.2012 முதல் 30.12.2018 வரை

1977-ஆம் ஆண்டு டெல்லி பல்கலைகழகத்தில் சட்டபடிப்புக்கான பட்டம் பெற்றார் லோகுர். 1977, ஜூலை 28-ஆம் தேதி அவர் வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் பணிபுரிந்துள்ளார். சிவில், குற்றவியல், அரசியலைமப்பு, வருவாய் மற்றும் சேவை குறித்த சட்டங்களில் அவர் பரந்த அனுபவம் உள்ளவர்.

1998 ஜூலை 14-ஆம் தேதி இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் மேலும் 1999 பிப்ரவரி 19 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படும் வரை அந்தப் பணியை தொடர்ந்தார். 1999 ஜூலை 5 ஆம் தேதி உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 2010ஆம் ஆண்டின் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை அவர் பணிபுரிந்தார். 2012 ஜூன் நான்காம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், DDnews

படக்குறிப்பு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

குறிப்பிடத்தக்க தீர்ப்புகள் :-

மணிப்பூரில் போலி என்கவுன்டர் கொலைகள் :-

கடந்த தசாப்தத்தில் மணிப்பூரில் நடந்த 98 காவல்துறை என்கவுன்டர்கள் குறித்து விசாரிக்க சிபிஐக்கு 2017 ஜூலையில் நீதிபதிகள் லோகுர் மற்றும் உதய் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

சிறுபான்மையினருக்கு உள் இட ஒதுக்கீடு :

மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு பிரிவில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அளிக்கும் இந்திய அரசின் முடிவை 2012 மே மாதத்தில் நீதிபதி பிவி சஞ்சய் குமார் மற்றும் தலைமை நீதிபதி மதன் லோகுர் அடங்கிய ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது.

உச்ச நீதிமன்ற நிர்வாகம் மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு

3. நீதிபதி ரஞ்சன் கோகாய்

பதவிக்காலம் - 23.04.2012 முதல் 17.11.2019 வரை

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மறைந்த கேஷப் கோகாயின் மகன் ரஞ்சன் கோகாய். 1954 நவம்பர் 18 ஆம் தேதி பிறந்தார். 1978-ல் வழக்கறிஞராக சேர்ந்தார் மேலும் குறிப்பாக கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பணி புரிந்தார். 2001 பிப்ரவரி 28 -ஆம் தேதி கவுகாத்தியில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2010 செப்டம்பர் ஒன்பதாம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 2011 பிப்ரவரி 12-ஆம் தேதி அவர் அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். 2012 ஏப்ரல் 23-ஆம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.

குறிப்பிடத்தக்க தீர்ப்புகள் :

அரசியல்வாதிகளின் இலவச வாக்குறுதிகள்

இலவச வாக்குறுதிகள் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களின் வேரை பெரிய அளவில் அசைத்துப் பார்ப்பதாக ஜூலை 2013-இல் தலைமை நீதிபதி பி சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு கூறியது.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசித்து வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அந்த அமர்வு வழிகாட்டியது. இந்த விஷயத்தை சமாளிக்க ஒரு தனிச் சட்டம் வேண்டும் என அந்த அமர்வு கூறியது.

தேர்தல் சீர்திருத்தங்கள்

தலைமை நீதிபதி பி சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சனா பி தேசாய் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறையில் சீர்திருத்தங்களை செய்ய உத்தரவிட்டது. வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களடங்கிய அஃபிடவிட் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. அப்போதுதான் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்க அது உதவியாக இருக்கும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்புமனு பரிசீலிக்கும் அதிகாரி வேட்பாளர்கள் தங்களது மனு தாக்கலில் விவரங்களை குறிப்பிடாமல் ஏதாவது வெற்றிடங்களை விட்டிருந்தால் வேட்பாளரிடம் நிரப்பச் சொல்லி கேட்கவேண்டும் என அந்த அமர்வு கூறியது.

உச்ச நீதிமன்ற நிர்வாகம் மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Reuters

4. நீதிபதி குரியன் ஜோசெப்

பதவிக்காலம் - 08.03.2013 முதல் 29.11.2018 வரை

திருவனந்தபுரத்திலுள்ள கேரள சட்ட அகாடெமியில் சட்டம் பயின்றார் நீதிபதி குரியன் ஜோசெப். கேரள உயர் நீதிமன்றத்தில் 1979-ஆம் ஆண்டு வழக்குரைஞர் பணியை துவங்கினார். ஜூலை 12, 2000-ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2006 முதல் 2008 வரை கேரள நீதித்துறை அகாடெமியில் தலைவராக பணி புரிந்துள்ளார்.

லட்சத்தீவுகள் மற்றும் கேராளாவின் சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவராகவும் குரியன் ஜோசெப் பணிபுரிந்துள்ளார். மேலும், இரண்டு முறை கேரள உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாகவும், இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் 8,பிப்ரவரி 2010 முதல் 7, மார்ச் 2013 வரை தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார். 8, மார்ச் 2013-இல் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

குறிப்பிடத்தக்க தீர்ப்புகள் :-

முத்தலாக்கை தடை செய்த உச்ச நீதிமன்ற பெஞ்சில் இவரும் இடம்பெற்றிருந்தார். நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தை விசாரித்துவரும் அமர்வில் நீதிபதி ஆர் எம் லோதா மற்றும் நீதிபதி மதன் லோகுருடன் நீதிபதி குரியன் ஜோசப்பும் உள்ளார். முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் மது கோடா மீது குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்கியதும் இதே அமர்வே.

நாடாளுமன்ற தாக்குதலில் அச்சுப்பதிவு மற்றும் குறுந்தகடு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை உரிய அங்கீகாரங்களின்றி பிரதான ஆதாரமாக கருதி 2005-இல் அளிக்கப்பட்ட தீர்ப்பை செப்டம்பர் 2014-இல் ரத்துச் செய்தார். தீர்ப்பில் நீதிபதி குரியன் கூறுகையில் பாராளுமன்ற தாக்குதல் குறித்த வழக்கின் தீர்ப்பானது சட்டப்படி சரியானது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :