திரைப்பட விமர்சனம் : இணையதளம்

சமூக வலைதளங்களில் "லைக்", "ஷேர்" ஆகியவற்றைப் பெறுவதற்காக பகிரும் தகவல்களால் எதிர்பாராதவிதத்தில் பலர் பாதிக்கப்படுகிறார்கள், குடும்பங்கள் அழிகின்றன என்ற நீதியைச் சொல்லவிரும்பும் படம்.
அந்தரங்கமான படங்களை பாலியல் இணையதளங்களில் பகிர்வதால் ஏற்படும் பிரச்சனையைச் சொன்ன 'லென்ஸ்' கடந்த வாரம்தான் வெளியாகியிருந்த நிலையில், இந்த வாரம் கிட்டத்தட்ட அதே மாதிரியான கதையுடன் ஒரு படம். ஆனால், படமாக்கியதில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்.

சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றுகிறார்கள் ஸ்வேதா மேனனும் ஈரோடு மகேஷும். திடீரென ஒரு இணையதளத்தில், முதியவர் ஒருவர் கொல்லப்படும் காட்சி நேரலையாக ஒளிபரப்பாகிறது. அதனைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவர் கொல்லப்படும் வேகம் அதிகரிக்கிறது. இந்தக் கொலையைச் செய்தது யார் என காவல்துறை விசாரிக்கும்போது, ஊடகச் செய்தியாளர் ஒருவர் இதே பாணியில் கொல்லப்படுகிறார். இதனையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இடைநீக்கம் செய்யப்படும் மகேஷும் இதேபோல கொல்லப்படுகிறார்.
திரைக்கதை, படமாக்கப்பட்டவிதம், தொகுப்பு என எல்லா அம்சங்களிலும் பலவீனமான ஒரு படம்.

படம் நெடுக வரும் ஸ்வேதா மேனன், பல தருணங்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றுகொண்டேயிருக்கிறார். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் மகேஷ், நடிப்பில் ஓகே என்றாலும் நகைச்சுவை என்ற பெயரில் அவர் பேசும் வசனங்கள், புன்னகையைக்கூட ஏற்படுத்துவதில்லை. இந்தப் படத்தில் என்ன நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ அதைச் செய்திருக்கிறார் ஹீரோவான கணேஷ் வெங்கட்ராம். படம் முடியும் நேரத்தில் வில்லியாக அறிமுகமாகும் சுகன்யா, படம் முடியும்வரை தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறார்.
ஒரு இணையதளத்தில் கொலை நேரடியாக ஒளிபரப்பாகும்போது, அந்த இணையதளத்தை யாராலும் பார்க்க முடியாமல் செய்வது எளிதான காரியம். அதைவிட்டுவிட்டு, ஊடகங்கள் மூலமாக தொடர்ந்து அந்த இணையதளத்தை பார்க்க வேண்டாமென அறிவிக்கிறார்களாம். உடனே எல்லோரும் அதற்குச் சென்று பார்க்கிறார்களாம். கொலை நடக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பிறகும் யார் அதைச் செய்தவர்கள் என்று கண்டுபிடிக்காமல் அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுகிறது போலீஸ். பிறகு இன்னொரு நபர் கடத்தப்பட்டுகிறார் என்று சொதப்புகிறார்கள்.

உண்மையிலேயே இப்படி ஒரு இணையதளம் இருப்பதைப் போல, படம் நெடுக அந்த இணையதளத்தின் பெயர் வரும் இடங்களில் ஒலி இல்லாமல் செய்திருக்கிறார்கள். தாங்க முடியவில்லை.
படத்தின் துவக்கத்தில் ஏடிஎம்களுக்கு வருபவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பணம் களவாடப்படுகிறது. ஏதோ பயங்கரமாக சொல்லப்போகிறார்கள் என்று பார்த்தால், அந்த பகுதி துண்டாக முடிந்துவிடுகிறது.
காட்சிகளே மோசமாக இருக்கும்போது இசையமைப்பாளர் என்ன செய்ய முடியும்? படம் தொடர்புடைய அனைவருக்கும் 'Better luck next time'!
பிற திரைப்பட விமர்சனங்கள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












