திரைப்பட விமர்சனம்: லென்ஸ்

பட மூலாதாரம், Youtube
இணையத்தின் மூலமாக பிறரது அந்தரங்க படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்தால், அதன் விளைவுகள் எந்த அளவுக்கு விபரீதமாக இருக்கக்கூடும் என்பதைச் சொல்லும் படம்.
அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) இணையத்தில் நிர்வாண படங்களை பதிவேற்றம் செய்வது, பிற பெண்களுடன் வீடியோ மூலம் உறவாடுவதில் மூழ்கிக்கிடக்கும் ஓர் அடிமை. ஒரு நாள் புதிதாக ஒரு பெண்ணிடமிருந்து ஃபேஸ்புக்கில் அழைப்புவர, அந்தப் பெண்ணுடன் உரையாட ஸ்கைப் வீடியோவை ஆன் செய்கிறான் அரவிந்த். ஆனால், உண்மையில் அழைப்பு யோகன் (ஆனந்த் சமி) என்ற ஒரு ஆணிடமிருந்து வந்தது என்பது அப்போதுதான் தெரிகிறது. யோகன் தான் தற்கொலை செய்யப்போவதாகவும், அதனை அரவிந்த் ஸ்கைப் மூலம் பார்க்க வேண்டுமென்றும் கூறுகிறான். யோகனுக்கும் அரவிந்திற்கும் என்ன தொடர்பு, யோகன் இப்படிச் செய்வதற்கான காரணம் என்ன என்பது மீதிக் கதை.
நள்ளிரவில், ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக அரவிந்த் உரையாடுவதில் துவங்குகிறது படம். அடுத்த சில காட்சிகளிலேயே மடமடவென திருப்பம் ஏற்பட 20 நிமிடங்களுக்குள்ளேயே த்ரில்லராக மாறி, பரபரக்க வைக்கிறது.

பட மூலாதாரம், youtube
ஆபாச படங்களை எடுப்பது, பதிவேற்றம் செய்வது, அடையாளம் தெரியாத நபர்களுடன் அந்தரங்கமாக வீடியோ மூலம் உறவாடுவது என்பதைப் பின்னணியாக வைத்து, இவ்வளவு துல்லியமான தகவல்களுடன் வெளியாகியிருக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் (தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட படம் இது).

பட மூலாதாரம், Youtube
சிறிது தவறினாலும் ஒரு செக்ஸ் படமாகக் கருதப்படக்கூடிய வாய்ப்புள்ள ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதனை த்ரில்லராக மாற்றுவது உண்மையிலேயே ஒரு சவாலான காரியம். அதில் பெருமளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது.
அரவிந்த், யோகன், ஏஞ்சல், ஸ்வாதி, சில காவல்துறையினர் என மிகக் குறைவான கதாபாத்திரங்களே படத்தில் இருப்பதால் சில சமயங்களில் சலிப்புத்தட்டினாலும் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது லென்ஸ்.

பட மூலாதாரம், youtube
இடைவேளைக்குப் பிந்தைய சில காட்சிகள், குறிப்பாக யோகனுக்கும் அவனது மனைவி ஏஞ்சலுக்கும் இடையிலான காட்சிகள் சற்று குறைவாக இருந்திருக்கலாம். பின்னணி இசையும் சற்று இயல்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டிருப்பதால், சமயங்களில் எந்த இடத்தில் கதை நடக்கிறது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அதேபோல சில க்ளோஸ் - அப் காட்சிகளில் உதட்டசைவும் வசனமும் பொருந்தவில்லை. இவை மட்டுமே இந்தப் படத்தில் சுட்டிக்காட்டத்தக்க சிறு குறைகள்.
பாலியல் சார்ந்த படங்களை இணையத்தில் தொடர்ந்து பார்த்து அதற்கு அடிமையாவது, மெய்நிகர் (Virtual) வாழ்க்கையிலேயே மூழ்கிக் கிடப்பது போன்றவை சம்பந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், முன்பின் அறியாதவர்களின் வாழ்வையும் எப்படிச் சீரழிக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுவதே இயக்குனரின் நோக்கம். அதில் அவருக்கு முழு வெற்றி கிடைத்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












