திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்?

திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்?

தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களை எடுத்த எழிலும் முந்தைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த உதயநிதியும் இணைந்திருக்கும் படம் என்பதால் நகைச்சுவைப் படங்களை ரசிப்பவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இந்தப் படம்.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் கல்யாணம் (சூரி), சிறிய பிரச்சனையின் காரணமாக துபாய்க்குச் சென்றுவிட, சரவணனுக்கு (உதயநிதிக்கு) அந்தப் பதவி கிடைக்கிறது. கட்சி அலுவலகமாக தன் மாமாவின் வீட்டை வைத்துக்கொள்கிறார் அவர். மாமாவின் மகளான தேன்மொழியுடன் (ரெஜினா) சிறுவயது முதலே சரவணனுக்கு சண்டை. அந்த மாமா திடீரென ஊருக்குத் திரும்பிவிட கட்சி அலுவலகத்தை காலிசெய்ய வேண்டிவருகிறது. சிறுவயதில் சண்டைபோட்ட தேன்மொழியை காதலிக்கவும் ஆரம்பிக்கிறார் சரவணன். துபாயிலிருந்து திரும்பிவரும் கல்யாணம், தன் பதவி பறிபோய்விட்டதால் சரவணனை பழிவாங்குவதற்காக தேன்மொழியை வேறொருவருக்கு திருமணம் செய்துவைக்க முயல்கிறார். இந்த பிரச்சனைகளில் சரவணனுக்கு உதவுவதற்காக ஒரு ஆவி வருகிறது. அந்த ஆவி யாருடையது, ஏன் சரவணனுக்கு உதவுகிறது என்பது மீதிக் கதை.

திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்?

முந்தைய படமான மனிதன் படத்தின் மூலம், காமடியைவிட்டு வேறொரு பாணிக்குச் சென்றிருந்த உதயநிதி, இந்தப் படத்தின் மூலம் பழைய, பழகிய பாணிக்குத் திரும்பியிருக்கிறார். அதனால், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலிருந்தே பழகிப்போன முகபாவங்களையும் நடிப்பையும் வெளிப்படுத்துகிறார் உதயநிதி.

ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ருஷ்டி டாங்கே என இரண்டு நாயகிகள். கதாநாயகனைக் காதலிக்க வேண்டுமா, இல்லையா என்பது தெளிவாக இல்லாததால் ஒரு குழப்பமான பாத்திரமாக படம் முழுக்க வரும் ரெஜினாவின் நடிப்பு மோசமில்லை. ஷ்ருஷ்டி டாங்கேவுக்கு ஒரு பாடலும் சில காட்சிகளும்தான்.

திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்?

இவர்கள் தவிர, சூரி, மன்சூர் அலிகான், ஜி.எம். குமார், லிவிங்ஸ்டன், மதுமிதா என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள், பாத்திரங்கள். காமெடி கலந்த வில்லன் பாத்திரத்தில் வரும் சூரி, பல இடங்களில் வடிவேலுவை இமிடேட் செய்கிறார்.

படத்தின் துவக்க காட்சிகள் ரொம்பவுமே பொறுமையை சோதிக்கின்றன. சிறிது நேரத்திற்குப் பிறகு, சற்று பரவாயில்லை என்ற ரகத்தில் நகர ஆரம்பிக்கிறது படம். கதாநாயகியை இன்னொருவருக்கு நிச்சயித்த பிறகு, கதாநாயகன் மீண்டும் மீண்டும் நாயகியை மீட்க முயற்சிக்கும் காட்சிகள்தான் என்பதால், பிறகு அலுப்புத்தட்ட ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி சீரியல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்?

எழில் இதற்கு முன்பு இயக்கிய தேசிங்கு ராஜா படத்தையும் சில காட்சிகள் ஞாபகபடுத்துகின்றன. திடீரென ஒரு ஆவியையும் அறிமுகப்படுத்தினாலும் அது வெறும் உதவிசெய்யும் ஆவியென்பதால், படத்தின் விறுவிறுப்பை எந்த விதத்திலும் அதிகரிக்கவில்லை. படத்தின் பிற்பகுதி, ரசிகர்களைக் கடுமையாக சோதிக்கிறது.

இமானின் இசையில், அம்புட்டு இருக்குது ஆச உள்பட இரண்டு பாடல்கள் ஹிட் பாடல்களின் வரிசையில் சேர்ந்திருக்கின்றன. ஆனால், எழில், உதயநிதி ஆகியோருக்கு இது ஹிட் படமாக இருக்குமா என்றால், சந்தேகம்தான்.

பிற திரைப்பட விமர்சனங்கள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்