அரசியல் பரபரப்பில் பின்தள்ளப்படும் மக்கள் பிரச்சனைகள்?
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா நடராஜன் என இரு அணிகளாக அஇஅதிமுக பிளவு பட்டு, அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள சூழலில்,மக்கள் பிரச்சனைகள் மறக்கப்பட்டு, அவை பின் தள்ளப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் அரசியல் நெருக்கடியை அடுத்து, அதற்கு முன்னர் ஊடகங்களில் இடம் பிடித்து வந்த தமிழக வறட்சி நிலை போன்ற பிரச்சனைகளின் மீது கவனம் குறைந்திருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.
இவற்றில் சில பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்க்கலாம்.
வறட்சி , குடிநீர்ப் பிரச்சனை
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வறட்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு அளிக்க வேண்டிய இழப்பீடு பற்றிய அறிவிப்புகளும் தாமதமாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மத்திய நிபுணர் குழு அறிக்கையின் கதி என்ன, அதன் தொடர் நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்துக்காக, 1929ல் தொடங்கப்பட்ட சிறுவானி குடிநீர் வழங்கல் திட்டம் முதல் முறையாக வறட்சி காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், லாரிகள் மூலம் கோவை மக்களுக்கு குடிநீர் அளிக்கப்பட்டது விவாதிக்கப்படாமலே போய்விட்டது.

அடுத்த அபாயமாக, பாதிக்கப்பட்ட ஆழ்குழாய்களில் கூட நீர் இல்லாததால், தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகிறது.
நீட் தேர்வுக்கு எதிரான நீளும் போராட்டம்:

பட மூலாதாரம், Getty Images
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் (NEET -National Eligibility cum Entrance Test) தேர்வு தமிழக மாணவர்களுக்கு தேவை இல்லை என்று தமிழ் நாடு சட்ட மன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு தற்போது வரை பதில் கிடைக்காத நிலை இருக்கிறது. மார்ச் மாதம் நெருங்கும் நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டுமா, இல்லையா என்ற குழப்பத்தில்தான் பொதுத் தேர்வு எழுத வேண்டியுள்ளது என்கிறார் ஆசிரியர்கள்.
வெளியாகாத எண்ணெய் கசிவு இழப்பீடு:
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தில் 70 டன்னுக்கும் மேற்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டதாக மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

அந்த கழிவுகள் சென்னையை அடுத்த மாமல்லபுர கடற்கரையிலும் தற்போது காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எண்ணெய் கசிவிற்கான இழப்பீடு குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கப்பல் நிறுவனங்கள் மீதான நடவடிக்கை குறித்த தகவல்களும் இல்லை.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்:
பாலியல் வன்கொடுமையின் உச்சமாக சென்னையில் ஏழு வயது சிறுமி ஹாசினி வன்புணர்வு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. பெற்றோர் மத்தியில் இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், GAVASKAR
திங்களன்று முதல்வர் பன்னீர்செல்வம் ஹாசினியின் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் அளித்தார்.
ஹாசினி இறப்பிற்கு முன்னதாக இந்து முன்னணியை சேர்ந்த நபர் என்று கூறப்படும் ஒருவரால் , அரியலூர் நந்தினி(16) கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எழுந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் புகார் அளிக்க வந்த போது காவல் துறையினர் புகாரை கடத்தல் வழக்காக அல்லாமல் மகளை காணவில்லை என்று மட்டும் புகார் அளிக்க கூறிய சம்பவம் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், மாநிலத்தில் அதிகாரம் இல்லாத அரசு நீடிக்கும் நிலையில், ஆளுநர்தான் இந்தக் குழப்பங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.












