உகாண்டாவில் இருந்த ஒரே புற்றுநோய் கிசிச்சை எந்திரமும் பழுதானது

உகாண்டாவில் புற்றுநோயைக் குணப்படுத்தும் சிகிச்சைக்குப் பயன்பட்டுவந்த ஒரே ஒரு கதிர்வீச்சு சிகிச்சை எந்திரமும் முழுமையாகப் பழுதாகிவிட்டதாக அந்நாட்டின் பிரதான புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.

உகாண்டாவில் உள்ள கதிர்வீச்சு எந்திரம் பழுதானதால், நோயாளிகள் இனி கென்யாவுக்குச் செல்ல வேண்டும்.
படக்குறிப்பு, உகாண்டாவில் உள்ள கதிர்வீச்சு எந்திரம் பழுதானதால், நோயாளிகள் இனி கென்யாவுக்குச் செல்ல வேண்டும்.

இதனால், உயிரைக் காக்கும் இந்த சிகிச்சையைப் பெறமுடியாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள முலகோ மருத்துவமனையில் இருக்கும் இந்தப் புற்றுநோய் மையம் புதிய எந்திரத்தை வாங்குவதற்குத் தேவையான 13 லட்சம் பவுண்டுகளைத் திரட்ட முயன்று வருகிறது.

இந்த மையத்திற்கு உகாண்டாவிலிருந்தே வருடத்திற்கு 44,000 நோயாளிகள் வருகிறார்கள். இது தவிர, அருகிலுள்ள தேசங்களான ருவாண்டா, புருண்டி, தெற்கு சூடானிலிருந்தும் நோயாளிகள் இங்கு வருகிறார்கள்.

இவர்களில் 75 சதவீதம் பேருக்கு இந்த கதிர்வீச்சு சிகிச்சை தேவைப்படுகிறது.

உடலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக கதிர்வீச்சைச் செலுத்தி, புற்றுநோய் செல்களை இந்த எந்திரம் கொல்லும். பலவிதமான புற்றுநோய்களுக்கு இந்த எந்திரத்தைப் பயன்படுத்த முடியும்.

முலகோ மருத்துவமனையில் இருந்த இந்த எந்திரம், 1995ல் வாங்கப்பட்டது. அப்போதும்கூட, வேறு இடத்தில் பயன்படுத்தப்பட்டுவந்த பழைய எந்திரமே வாங்கப்பட்டது. கடந்த காலத்தில் பல முறை இந்த எந்திரம், பழுதாகி சரிசெய்யப்பட்டது.

இந்த முறை அதனை சரிசெய்யும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது புதிய எந்திரத்தை வாங்குவதற்காக சுகாதார அமைச்சகத்துடன் மருத்துவமனை நிர்வாகம் பேசிவருகிறது.

புதிய எந்திரம் வாங்கும்வரை, கதிர்வீச்சு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் பக்கத்து நாடான கென்யாவுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.