18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கப் புதையல் கண்டுபிடிப்பு
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, 29 லட்சம் பவுண்டு மதிப்புள்ள தங்க நாணயங்களைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த புதையல் வேட்டையர்கள் கூறியுள்ளனர். இந்த நாணயங்கள் ஸ்பெயினைச் சேர்ந்தவை.

பட மூலாதாரம், Reuters
இந்த 350 தங்க நாணயங்களும் ஃப்ளோரிடாவை ஒட்டியுள்ள அட்லாண்டிக் கடற் படுகையில் கடந்த 300 ஆண்டுகளாக புதைந்து கிடந்தன.
க்யூபாவிலிருந்து ஸ்பெயினை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 11 ஸ்பெயின் நாட்டுக் கப்பல்கள், புயலில் சிக்கி கடலில் மூழ்கின. இந்தக் காசுகள் அந்தக் கப்பல்களைச் சேர்ந்தவை.
ஃப்ளோரிடாவை ஒட்டிய கடல் பகுதியில் புதையலைத் தேடுவது ஒரு வழக்கமான நடவடிக்கையாகும்.
சமீப மாதங்களில் இப்படிப் புதையல் கிடைப்பது இது இரண்டாவது தடவையாகும். ஜூன் மாதத்தில் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள 50 காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த 350 காசுகளும் கரையிலிருந்து ஒரு மீட்டர் தூரத்தில் மணலில் புதைந்திருந்தன.
அமெரிக்கச் சட்டப்படி, இந்தப் புதையலில் 20 சதவீதம் ஃப்ளோரிடாவுக்குக் கிடைக்கும்.
தண்ணீரில் மூழ்கி இந்தக் காசுகளைத் தேடி எடுத்த வில்லியம் பார்லே, இந்தப் புதையளில் தன்னுடைய பங்கு என்ன என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
"ராயல் எய்ட் எஸ்க்யூடோ" என்ற அரிதான காசுகளும் இதில் கிடைத்திருக்கின்றன. ஸ்பெயின் நாட்டு அரசின் ஆணையின் பேரில் அடிக்கப்பட்ட இந்தக் காசுகள், அந்த காலகட்டத்தில் நாணயங்கள் எப்படி இருந்தன என்பதற்கான சான்றுகளாகும்.
தற்போதைய கண்டுபிடிப்புக்கு முன்புவரை, 20 "ராயல் எஸ்க்யூடோ" காசுகள் மட்டுமே கிடைத்திருந்தன.












