ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

ராணி எலிசபெத் II

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார்.

வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.

1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார்.

அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார்.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்தார். அரசர் மற்றும் அவரது துணைவியான அரசி இன்று மாலை பால்மோரலில் தங்குவார்கள். நாளை அவர்கள் லண்டனுக்குத் திரும்புவார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.

ராணியை மருத்துவ கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்த நிலையில், அவரது பிள்ளைகள் அனைவரும் அபெர்தீனுக்கு அருகே உள்ள பால்மோரலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

ராணியின் பேரனான இளவரசர் வில்லியமும் அங்கு இருக்கிறார். அவரது சகோதரர் இளவரசர் ஹாரி அங்கு சென்று கொண்டிருக்கிறார்.

ராணி எலிசபெத் II அரச தலைவராக இருந்த காலம் போருக்குப் பிந்தைய சிக்கன நடவடிக்கையின்போது நடந்தது. பேரரசில் இருந்து காமன்வெல்த் ஆக நாடு மாற்றம் அடைந்தது, பனிப்போரின் நிறைவுக்காலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தது மற்றும் வெளியேறிய காலம் அதில் அடங்கியது.

ராணியின் ஆளுகை, 1874இல் பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1975இல் பிறந்த லிஸ் டிரஸை இந்த வாரத்தில் புதிய பிரதமராக நியமிக்கும்வரை 15 பிரதமர்களைக் கண்டது.

"பால்மோரலில் இன்று பிற்பகல் ராணி அமைதியாக உயிரிழந்தார். அரசரும், அவரது மனைவியான ராணியும் மாலை வரை பால்மோரலில் இருப்பார்கள். நாளை அவர்கள் லண்டன் திரும்புவார்கள்," என்கிறது பக்கிங்காம் அரண்மையில் ஊழியர்கள் நேற்று வியாழக்கிழமை தொங்கவிட்ட இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "பால்மோரலில் இன்று பிற்பகல் ராணி அமைதியாக உயிரிழந்தார். அரசரும், அவரது மனைவியான ராணியும் மாலை வரை பால்மோரலில் இருப்பார்கள். நாளை அவர்கள் லண்டன் திரும்புவார்கள்," என்கிறது பக்கிங்காம் அரண்மையில் ஊழியர்கள் நேற்று வியாழக்கிழமை தொங்கவிட்ட இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.

தமது ஆட்சிக்காலம் முழுவதும் தமது பிரதமருடன் வாராந்திர சந்திப்புகளை அவர் நடத்தி வந்தார்.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்விப்பட்டதும் அழத் தொடங்கினர். அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரிட்டன் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டது.

ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர், லண்டனில் உள்ள மேஃபேரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்தார்.

அவர் எதிர்காலத்தில் ராணியாவார் என்று யாரும் கணிக்கவில்லை. ஆனால், இருமுறை மணவிலக்கு பெற்ற அமெரிக்கரான வாலிஸ் சிம்ப்சனை மணந்துகொள்வதற்காக 1936ம் ஆண்டு டிசம்பரில் அரியணையை விட்டு விலகினார் எலிசபெத்தின் பெரியப்பா எட்டாம் எட்வர்ட் அரசர்.

இதையடுத்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆனார். இதன் மூலம் அரியணை வாரிசு ஆனார் எலிசபெத். குடும்பத்துக்குள் லிலிபெட் என்று அழைக்கப்பட்ட எலிசபெத்துக்கு அப்போது வயது 10.

மூன்றாண்டு காலத்தில் நாஜி ஜெர்மனியுடன் போரில் ஈடுபட்டது பிரிட்டன். போர்க் காலத்தில் இளவரசி எலிசபெத் மற்றும் அவரது இளைய சகோதரி இளவரசி மார்கரெட் ஆகிய இருவரையும் கனடாவுக்கு அனுப்பிவிடலாம் என்ற யோசனையை அவர்களது பெற்றோர் நிராகரித்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் பெரும்பாலான நேரத்தை விண்ட்சர் கோட்டையில் கழித்தனர்.

2009ல் எலிசபெத்தின் 60 ஆண்டு கால ஆட்சியில் உடன் நின்றவரானார் எடின்பரோ கோமகன். இதன் மூலம் பிரிட்டிஷ் வரலாற்றில் அரியணையில் இருந்தவருக்கு துணைவராக நீண்ட காலம் பணி செய்தவர் ஆனார் அவர்.

பட மூலாதாரம், Tim Graham/PA

படக்குறிப்பு, 2009ல் எலிசபெத்தின் 60 ஆண்டு கால ஆட்சியில் உடன் நின்றவரானார் எடின்பரோ கோமகன். இதன் மூலம் பிரிட்டிஷ் வரலாற்றில் அரியணையில் இருந்தவருக்கு துணைவராக நீண்ட காலம் பணி செய்தவர் ஆனார் அவர்.

18 வயது ஆன பிறகு, ஆக்சிலரி டெரிடோரியல் சேவையில் 5 மாதங்கள் கழித்தார் எலிசபெத். அப்போது அடிப்படையான மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் சீர் செய்நர் திறன்களைப் பெற்றார்.

"துன்பக் காலத்தில் மலரும் சக மனிதர்களிடையிலான நேயத்தையும் பரஸ்பர பெருமித உணர்வையும் தாம் அப்போது உணரத் தொடங்கியதாக" என்று பிற்காலத்தில் அவர் நினைவுகூர்ந்தார்.

போர்க் காலத்தில் தமது மூன்றாம் நிலை உறவினரான கிரீஸ் இளவரசர் பிலிப்புடன் கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டிருந்தார் எலிசபெத். அவர்களுக்கிடையிலான காதல் வளர்ந்து 1947 நவம்பர் 20ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். பிலிப் எடின்பரோ கோமகன் பட்டத்தைப் பெற்றார்.

2021ம் ஆண்டு தமது 99வது வயதில் பிலிப் இறப்பதற்கு முன்பாக, தங்களது 74 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவரே தமது வலிமை என்று கூறினார் ராணி.

இந்த தம்பதியின் முதல் மகன் சார்ல்ஸ் 1948ல் பிறந்தார். பிறகு 1950ல் இளவரசி ஆன் பிறந்தார். இளவரசர் ஆண்ட்ரூ 1960ல் பிறந்தார். இளவரசர் எட்வர்ட் 1964ல் பிறந்தார்.

இந்த நால்வரும் தங்கள் பெற்றோருக்கு 8 பேரக் குழந்தைகளை அளித்தனர். பிறகு 12 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் பிறந்தன.

நோய்வாய்ப்பட்டிருந்த தமது தந்தைக்குப் பதிலாக இளவரசி எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் ஃபிலிப்பும் 1952ம் ஆண்டு கென்யா சென்றிருந்தபோது, அரசர் இறந்த செய்தியை ஃபிலிப் எலிசபெத்திடம் கூறினார். இதையடுத்து புதிய அரசியாகி, உடனடியாக அவர் லண்டன் திரும்பினார்.

"இது திடீரென பொறுப்பெடுத்துக்கொண்டு உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் நிகழ்வானது," என்று பின்னாளில் நினைவுகூர்ந்தார் ராணி.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 1953, ஜுன் 2ம் தேதி ராணியாக முடிசூட்டிக்கொண்டார் எலிசபெத். தொலைக்காட்சி மூலமாக இந்த நிகழ்வை 2 கோடி பேர் பார்த்ததாக மதிப்பிடப்பட்டது.

கடந்த மே மாதம் முதல் முறையாக ராணியின் உரையை அவர் சார்பாக வழங்கினார் அவரது மகன் வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, கடந்த மே மாதம் முதல் முறையாக ராணியின் உரையை அவர் சார்பாக வழங்கினார் அவரது மகன் வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ்.

அடுத்தடுத்த பத்தாண்டுகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. வெளிநாடுகளில் பிரிட்டீஷ் பேரரசு முடிவுக்கு வந்தது. உள்நாட்டிலும் 60களில் தீவிர சமூக மாற்றங்கள் ஏற்பட்டன.

போற்றுதல் குறைந்துபோன இந்தக் காலத்துக்கு ஏற்றபடி முடியாட்சியை சீர்திருத்தினார் எலிசபெத். நடந்து சென்று மக்களைப் பார்ப்பது, அரச குடும்பப் பயணங்கள், பொது நிகழ்வுகளில் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் இதனை அவர் செய்தார்.

காமன்வெல்த் அமைப்புக்கு அவர் கொண்டிருந்த கடப்பாடு தொடர்ச்சியாக இருந்தது. எல்லா காமன்வெல்த் நாடுகளுக்கும் குறைந்தது ஒரு முறையாவது அவர் சென்றுள்ளார்.

ஆனால், தனிப்பட்ட முறையிலான மற்றும் பொதுவில் தெரிந்த வலிகளும் சில நேரம் ஏற்பட்டன.

1992ம் ஆண்டினை "அன்னஸ் ஹாரிபிலிஸ்" (துயரங்கள் நிறைந்த ஆண்டு) என்று குறிப்பிட்டார் ராணி. அந்த ஆண்டில்தான் அவரது மூன்று பிள்ளைகளின் திருமணங்கள் முறிந்தன. அந்த ஆண்டில்தான் வின்ட்சர் கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டது.

வேல்ஸ் இளவரசி டயானா 1997ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் இறந்த நிலையில் பொது வெளியில் எதிர்வினையாற்றுவதில் தயக்கம் காட்டியதாக ராணி விமர்சனத்துக்கு உள்ளானார்.

நவீன சமுதாயத்தில் முடியாட்சிக்கான பொருத்தப்பாடு உண்டா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

"தங்களுக்கு விஸ்வாசத்தையும், ஆதரவையும் வழங்குகிறவர்களின் பரிசீலனை இல்லாமல் இருக்க முடியும் என்று எந்த நிறுவனமும் எதிர்பார்க்க முடியாது. அப்படி விஸ்வாசமும், ஆதரவும் வழங்காதவர்களும் பரிசீலிப்பார்கள் என்பதை கூறவே வேண்டியதில்லை" என்று ராணியே குறிப்பிட்டார்.

இளவரசியாக இருந்தபோதே 21 வயதில் தன் வாழ்வை சேவைக்கு அர்ப்பணிப்பது என்று சூளுரைத்திருந்தார் எலிசபெத்.

தனது ஆளுகையின் 70ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பக்கிங்காம் அரண்மனையின் உப்பரிகையில் தனது குடும்பத்தின் 3 தலைமுறை உறுப்பினர்களோடு தோன்றி மக்கள் கூட்டத்தை மகிழ்வித்தார் ராணி. ஜுன் 05, 2022, லண்டன்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது ஆளுகையின் 70ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பக்கிங்காம் அரண்மனையின் உப்பரிகையில் தனது குடும்பத்தின் 3 தலைமுறை உறுப்பினர்களோடு தோன்றி மக்கள் கூட்டத்தை மகிழ்வித்தார் ராணி.

1977ம் ஆண்டு வெள்ளி விழாவின்போது இதனைக் குறிப்பிட்ட ராணி, "அந்த சூளுரையை எனது இளம் பருவத்தில், நான் முடிவெடுப்பதில் முதிர்ச்சி பெறாமல் இருந்த நிலையில் ஏற்றிருந்தாலும்கூட அது குறித்து பின்னளில் வருத்தம் அடையவோ, அதில் இருந்து பின்வாங்கவோ இல்லை" என்று தெரிவித்தார்.

45 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் மாதம் தனது ஆளுகையின் 70ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது அவர் நாட்டுக்கு எழுதிய ஒரு நன்றிக் கடிதத்திலும் சேவை ஆற்றுவதில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் ராணி.

இந்த மைல் கல்லை கொண்டாடும் வகையில் அரசு விழாக்களும், பிரிட்டிஷ் பண்பாட்டை வெளிப்படுத்தும் வண்ணமயமான விழாக்களும், உயிரோட்டமுள்ள தெருமுனை விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தமது உடல் நிலை காரணமாக சில நிகழ்வுகளில் ராணியால் பங்கேற்க முடியாமல் போனாலும்கூட, "என் இதயம் உங்களோடு இருக்கிறது," என்று குறிப்பிட்டார் அவர்.

ஒரு அலங்கார அணி வகுப்பின் இறுதி நிகழ்வில் பங்கிங்காம் அரண்மனையின் உப்பரிகையில் தமது குடும்பத்தின் மூன்று தலைமுறை உறுப்பினர்களுடன் ராணி சேர்ந்திருந்த தருணத்தில் மாலில் (பங்கிங்காம் அரண்மனை அருகே உள்ள ஒரு சாலை) பெரும் கூட்டத்தின் வாழ்த்தொலிகள் எழுந்தன.

73 வயதுடைய மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் 14 காமன்வெல்த் ஆட்சிப் பகுதிகளின் அரசுத் தலைவர் ஆகியுள்ளார்.

இளவரசர்கள் ஆன்ட்ரூ, எட்வர்ட் உள்ளிட்ட அரச குடும்ப உறுப்பினர்களுடன் பால்மோரலுக்கு கார் ஓட்டிச் சென்ற இளவரசர் வில்லியம்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, இளவரசர்கள் ஆன்ட்ரூ, எட்வர்ட் உள்ளிட்ட அரச குடும்ப உறுப்பினர்களுடன் பால்மோரலுக்கு கார் ஓட்டிச் சென்ற இளவரசர் வில்லியம்.

அவர் தமது உடன் பிறந்தோரான இளவரசி ஆன், இளவரசர்கள் ஆன்ட்ரூ, எட்வர்ட் மற்றும் தமது அவரது மனைவி கமிலா ஆகியோருடன் பால்மோரலில் உள்ளார். எட்வர்ட் மனைவி சோஃபி, இளவரசர்கள், வில்லியம், ஹாரி ஆகியோரும் அவர்களுடன் உள்ளனர்.

வில்லியம் மனைவி கேத்தரின் தமது பிள்ளைகள் ஜார்ஜ், ஷார்லட், லூயிஸ் ஆகியோருடன் வின்ட்சர் மாளிகையிலேயே இருந்துவிட்டார். அந்த பிள்ளைகளுக்கு புதிய பள்ளியில் முதல் முழு நாள் என்பதால் அவர்கள் வரவில்லை.

அரச குடும்பம் தற்போது ஓர் இரங்கல் காலகட்டத்தில் நுழைந்துள்ளது. அடுத்து வரும் நாள்களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இருக்காது. அதிகாரபூர்வ நிகழ்வுகள் ரத்து செய்யப்படும். அரச குடும்ப இல்லங்களில், அரசாங்கக் கட்டடங்களில், ஆயுதப்படை வளாகங்களில், வெளிநாடுகளில் உள்ள பிரிட்டன் தூதரகங்களில் யூனியன் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அரசர் மூன்றாம் சார்ல்சுக்கு உறுதிமொழி அளிப்பார்கள்.

தேவாலய மணிகள் ஒலிக்கும். துப்பாக்கிகள் முழங்கி மரியாதை செய்யும். தேசிய, உள்ளூர் நிறுவனங்கள் நினைவு நிகழ்வுகள், இரங்கல் நூல்கள் மூலம் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யும்.

அடுத்த இரண்டு வாரங்களில் ராணிக்கு அரசு முறை இறுதிச் சடங்குகள் நடக்கும்.

வெளிநாட்டுத் தலைவர்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகான இருண்ட நாட்களில் ராணி அமெரிக்காவுக்கு ஆதரவாக நின்றார் என்பதை நினைவுகூர்ந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அவர் "அன்பான மனம் படைத்த ராணி" என்றும், "பிரான்சின் நண்பர்" என்றும் தெரிவித்துள்ளார் பிரான்ஸ் அதிபர் மக்ரோங்.

உலகில் "தாம் விரும்பும் மனிதர்களில் ஒருவர்" என்றும், "கனடா மக்களின் வாழ்க்கையில் தொடர்ந்து இடம் பெற்றவர்" என்றும் தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

செய்தி அளித்தோர்: ஜார்ஜ் பௌடன், மேரி ஜேக்சன், அரச குடும்ப செய்தியாளர் சீன் கஃப்லான்.