அதிமுக நெருக்கடி: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள் - முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி என 'இரட்டைத் தலைமை' தொடருமா இல்லை 'ஒற்றை தலைமை' ஆக எடப்பாடி பழனிசாமி வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் அடுத்தடுத்து மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஒரு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த மாதம் இந்த ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கியது முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்க்கலாம்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒற்றைத் தலைமை குறித்து முழக்கம் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 'இது குறித்து வெளியில் பேச வேண்டாம்' என்றும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தொடங்கியது ஒற்றைத் தலைமை சர்ச்சை

ஆனால், கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், "இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அது ஆரோக்கியமானதாக இருந்தது. காலத்தின் கட்டாயத்தால், அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதை பெரும்பான்மையானவர்கள் வலியுறுத்தியுள்ளனர்" என்றார்.
இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒற்றைத் தலைமை முழக்கம் எழுந்த 24 மணி நேரத்திற்குள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு, "ஒற்றைத் தலைமை வேண்டும். ஓபிஎஸ் தலைமை வேண்டும்'' என்று அவருக்கு ஆதரவான சுவரொட்டிகள் சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒட்டப்பட்டன. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து கடந்த ஜூன் 15ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதை கட்சிதான் முடிவு செய்யும். அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.
இப்போதும் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அவர் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்கவில்லை என்று முன்பு சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை'' என்றார் ஜெயக்குமார்.
ஓபிஎஸ்- இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை
ஆனால், நடந்தவை வேறாக இருந்தன. எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும். அதை ஜுன் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். குறிப்பாக சி.வி. சண்முகம், எம்.சி. சம்பத், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும், எஸ்.பி. வேலுமணி, காமராஜ், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
'ஜுன் 23ம் தேதி பொதுக்குழுவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும். இரட்டைத் தலைமையே தொடரும்' என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ். தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இருதரப்பு விரிசல் வெளிப்படையாக தெரியத் தொடங்கியது.
இதையடுத்து ஒருமித்த முடிவு எடுக்கும் வகையில், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கடந்த 19ம் தேதி இருவரிடமும் பேசினர். தலைமை விவகாரத்தில் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் விட்டுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், அதை ஏற்க தயாராக இல்லை. இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
பொதுக்குழு ஏற்பாடுகள்

'ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டவர் ஓ.பி.எஸ் என்றும் அவரை முன்னிறுத்தாமல் போனதால்தான் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது' என்று நாளிதழ்களில் முழுபக்க விளம்பரம் வெளியிட்டு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மறைமுகமாக குற்றம்சாட்டினர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலர் இபிஎஸ் இல்லத்திற்கு வந்து அவருக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்கையில், ஓ.பி.எஸ் இல்லத்தில் இருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தேனி மாவட்டத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான் இபிஎஸ் இல்லத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.
இதனிடையே வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு ஏற்பாடுகளை தீவிரமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடங்கினர்.
'அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவுவதாகவும் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்' என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திரண்டனர். அங்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்தவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான புகழேந்தி ஓ.பி.எஸ்ஸை அவரது இல்லத்தில் சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, கட்சியிலும் சரி, அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி சர்வாதிகாரியாகச் செயல்பட்டவர் இபிஎஸ் என விமர்சித்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனிடையே, பொதுக்குழு கூட்டத்தை நடத்தக் கூடாது என்று அதிமுக நிர்வாகி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோரும், 'ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்டன. பொதுச் செயலாளரின் அதிகாரங்களை இந்த இரு பதவிகளுக்கும் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய நியமனங்களை மேற்கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளருக்கே அதிகாரம் இருப்பதால் இவர்கள் இருவரும் செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றைக் கூட்டவும் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு ஜூன் 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ் சார்பாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'பொதுக்குழு தொடர்பான அஜெண்டா எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, 23 வரைவு தீர்மானங்களின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது ஓ.பி.எஸ் தரப்பு, '23 வரைவு தீர்மானங்களும் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் மூலமாக வந்தது. இதனைத் தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது. கட்சி விதிகளுக்கு மாறாகவும் செயல்பட மாட்டோம். பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் பங்கேற்பார்' எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், 'ஒருங்கிணைப்பாளர்களும் இணை ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்துதான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் இருவரையும்விட பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. கடந்த 2ஆம் தேதி தேதியே பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது.
இதுநாள் வரையிலும் பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றுக்கான அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை. விதிகளை திருத்தம் செய்வதற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அப்போது என்ன நடக்கும் என உத்தரவாதம் தர முடியாது' எனத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'பொதுக்குழுவை நடத்த தடையில்லை. பொதுக்குழுவில் கட்சியின் விதிகளைத் திருத்தவும் தடையில்லை' என்று தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு, நள்ளிரவு விசாரணை
திட்டமிட்டபடி ஜூன் 23ம் தேதி பொதுக்குழு நடைபெறும், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செய்த மேல்முறையீட்டு மனு ஜூன் 22ம் தேதி நள்ளிரவு இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பும் மீண்டும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பொதுக்குழுவை நடத்தலாம். ஆனால், ஏற்கனவே முடிவு செய்துள்ள 23 தீர்மானங்களைத் தவிர வேறு முடிவுகள் எடுக்க கூடாது'' என்று உத்தரவிட்டனர்.
இத்தகைய பரபரப்பான சூழலில் அதிமுகவின் பொதுக்குழு அறிவித்தபடி, ஜூன் 23ம் தேதி தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் நடந்தவை

பொதுக் குழுவில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். இருப்பினும் பன்னீர்செல்வத்திடமும் வைத்திலிங்கத்திடமும் யாரும் பேசாமல் இருவரும் தனித்தே அமர்ந்திருந்தனர்.
தீர்மானங்களை வாசிப்பதற்கு முன்பாகவே, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், 'இந்த பொதுக் குழு 23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறது. நிராகரிக்கிறது. நிராகரிக்கிறது' என்று ஆவேசமாக அறிவித்தார். கே.பி. முனுசாமியும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.
வைகைச்செல்வன் பேசியபோது தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ் மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக்க வேண்டும் என்று முன் மொழிந்தார். அந்த முன் மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவைத் தலைவராக நியமிக்கும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இந்த தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது.
பின் மீண்டும் மேடைக்கு வந்து பேசிய சி.வி. சண்முகம், ஒற்றைத் தலைமைதான் தேவை என்று வலியுறுத்தி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் ஒப்படைத்தார். அடுத்த பொதுக் குழுவிற்கான தேதியை இந்த கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்டு, தமிழ் மகன் உசேன் உடனடியாக ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார்.
மேடையில் பேசிய அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் பேசினர்.
வெளியேறிய ஓ.பி.எஸ். தரப்பு
ஒரு கட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் இருக்கையில் இருந்து எழுந்தனர். சட்டத்திற்கு புறம்பான இந்த பொதுக்குழுவை நிராகரிக்கிறோம் என்று வைத்திலிங்கம் ஆவேசமாக முழக்கமிட்டார். அவர்களுடன் மனோஜ்பாண்டின், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் மேடையைவிட்டு இறங்கி, பொதுக் குழுவிலிருந்து வெளியேறினர்.
ஓ.பி.எஸ். மேடையை விட்டு இறங்கும்போது அவர் மீது பாட்டில் வீசப்பட்டது. பொதுக் குழுவிலிருந்து வெளியேறிய வைத்திலிங்கம், 'கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்' என தெரிவித்தார். அதைப்போல அடுத்த பொதுக் குழுவிற்கான தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது என்றார்.
இதற்கு எடப்பாடி ஆதரவாளரான சி.வி. சண்முகம், "பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டன. ஓ.பி.எஸ். பொருளாளராகவும் இ.பி.எஸ். தலைமை நிலையச் செயலாளராகவும் மட்டுமே உள்ளனர் என்றார். ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பொதுக்குழு நிச்சயம் நடைபெறும்" என்றார்.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பி.எஸ். அனுப்பிய 9 பக்க புகார் கடிதத்தில், அதிமுகவில் கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளரான தானும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து ஒப்புதல் அளிக்காமல் எந்த கூட்டமும் நடத்தப்படக் கூடாது. ஆனால், அதையும் மீறி கடந்த 14ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தப்படுவது குறித்து தெரிவித்திருந்தார். மேலும் அந்த கடிதத்தில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்போது பொருளாளர் என்ற முறையில் தாம் கட்சியின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தாம் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மூ வேட்புமனு தாக்கல் செய்யும் போது, டெல்லி சென்று ஓ.பி.எஸ், தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து ஆதரவு கேட்டு திரெளபதி முர்மூ தமிழ்நாடு வந்த போது, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருதரப்பும் தனித்தனியாக அவரை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ் சட்டப்படி நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதும் அவைத் தலைவர் நியமிக்கப்பட்டதும் நீதிமன்ற அவமதிப்பாகும் எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தல் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர், தற்காலிக அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து நியமித்ததாகவும் அவைத் தலைவரை நிரந்தரமாக்கும் தீர்மானம் எதையும் தான் வழிமொழியவில்லை என்று கூறினார்.
ஆனால், அவைத் தலைவர் நியமனத்தை ஓ. பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டதாக எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வாதிட்டது.
அப்படி எந்தத் தீர்மானத்தையும் தான் ஏற்கவில்லை என்பதற்கு பொதுக் குழு வீடியோவே ஆதாரமாக உள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கூறியது.
மேலும், அவைத் தலைவர் நியமனமே செல்லாது என்பதால் வரும் 11ஆம் தேதி அவர் அழைப்புவிடுத்திருக்கும் பொதுக் குழுவிற்கு தட விதிக்க வேண்டுமென்றும் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டுமே விசாரிக்கப் போவதாகவும் ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டுமென்றும் ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக் குழு குறித்து மட்டுமே இந்த அமர்வு விசாரிக்குமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு ஜூலை 7ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
ஜுலை 11ம் தேதி பொதுக்குழு நடக்குமா?

இந்நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ. பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக் குழு குறித்த உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.
ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த, அதிமுகவின் கட்சி பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எவரேனும் மேல்முறையீடு செய்தால், அதில், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவில் நடந்து முடிந்த பொதுக்குழு, நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பொதுக்குழு என இரண்டும் குறித்த வழக்கின் விசாரணை ஜூலை 6ஆம் தேதி நடைபெறுவது அதிமுக வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












