அதிமுக ஒற்றைத் தலைமை பிரச்னை: ஜெயலலிதா - ஜானகி அணிகள் பிரச்னை முடிவுக்கு வந்தது எப்படி?

அதிமுக

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தும் கூட, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்டு அவமரியாதைப்படுத்தப்பட்ட நிலையில் வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து அதிமுகவில் ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு என இரண்டு அணிகளுக்கிடையில் அதிகாரப்போட்டி இருப்பது வெளிப்படையாக தெரியவந்தது.

ஆனால், அதிமுக வரலாற்றில் இது புதிதல்ல. இரட்டைத் தலைமைக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு, இதைவிட சிக்கலான பெரும் பிரளயத்துக்குப் பிறகுதான் ஜெயலலிதா ஒற்றைத் தலைமையாக உருவானார் என்கிறது வரலாறு.

வரலாறு திரும்பும்போது இரண்டாம் முறை கேலிக்கூத்தாக இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. தற்போது, அதிமுகவில் நடக்கும் ஒற்றைத்தலைமை விவகாரத்தால், 1988இன் வரலாறு திரும்புகிறது என்றுதான் பார்க்கப்படுகிறது. அப்படி1988இல் அதிமுகவில் என்னதான் நடந்தது? அந்த பிரச்னை எப்படி முடிவுக்கு வந்தது?

ஜெ.ஜெ. அணி - ஜானகி அணி

1987 டிசம்பர் 24இல் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் இறந்தார். தலைவர் இறந்ததும் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. ஆனால், கேள்விக்கு விடை காணும் முறை அதிமுகவில் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. ஏறக்குறைய குடுமிப்பிடி சண்டையாகவே இருந்தது.

எம்.ஜி.ஆரின் சக நடிகையாக இருந்து பின்னர் அதிமுகவில் வேகமாக வளர்ந்து வந்த ஜெயலலிதா ஒருபுறம் அரசியல் வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இருந்தார். அதற்கு எதிர்திசையில், எம்.ஜி.ஆரின் மனைவியும் நடிகையுமான ஜானகி முன்னிறுத்தப்பட்டார். ஜானகியின் பின்னணியில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் இருந்தார்.

அந்த இரட்டைத்தலைமைக்கு இடையில் அதிமுக உருண்டபோது நடந்தவை தற்போது நடப்பவற்றை விட அதீதமானவையாக பார்க்கப்படுகிறது.

ஜானகி தரப்புக்கு வெற்றி

ஜெயலலிதா

ஜானகி - ஜெயலலிதா இடையிலான போட்டி என்பது எம்.ஜி.ஆர் இறந்து அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே நடந்த சம்பவங்களால் மக்கள் கவனத்துக்கு வெளிவந்தது.

ஆனால், எம்.ஜி.ஆரின் உடல் இறுதி ஊர்வலத்துக்காக ராணுவ பீரங்கி வண்டியில் ஏற முயன்ற ஜெயலலிதாவை, அப்போதைய ஜானகி அணி எம்.எல்.ஏ ஒருவர் கீழே தள்ளிவிட, அதுவே ஜெயலலிதாவுக்குப் பெரும் அனுதாபத்தைத் தேடித்தந்தது. இதற்குப் பிறகான ஜெயலலிதாவின் மாற்றம் வீரியமிக்கதாக இருந்தது.

யார் முதல்வர் என்ற கேள்விக்கு தற்காலிக விடையும் கிடைத்தது. ஜானகிக்கு முதல்ராகப் பதவி பிரமாணம் செய்து வைத்து அடுத்த 21 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசமும் கொடுத்தார் ஆளுநர் குரானா.

பொதுக்குழு அறிவிப்புகள்

ஜெயலலிதா

கட்சிக்குள் நடக்கும் இந்த குளறுபடியை முறைப்படி சரிசெய்ய பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான அறிவிப்பு இருவர் தரப்பிலிருந்தும் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக ஜானகி அணி அறிவித்தபடி பொதுக்குழுவை நடத்தவில்லை. ஜெயலலிதாவின் அணி நடத்த முயற்சித்த நிலையில் அதுவும் போலீசாரால் தடுக்கப்பட்டு ஜெயலலிதா உள்ளிட்ட ஜெ. அணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1988 ஜனவரி 28. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் குரானா கொடுத்த காலக்கெடு அன்றோடு முடிகிறது. சட்டப்பேரவையில் 97 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் இருந்த ஜானகிக்கு வேறு வழியில்லை. ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வேறுபாடுகளை மறந்து அதிமுகவுக்காக எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், நடக்கப்போவது என்ன என்பது ஜானகிக்கும் தெரியும்.

அப்போதைய அவைத்தலைவர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா தரப்பு எம்.எல்.ஏக்களை பதவியிலிருந்து நீக்கி, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் போக மீதமிருந்த 110 எம்.எல்.ஏக்களில் 99 பேர் ஆதரவுடன் ஜானகி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

1988 - அவையில் நிறைவேறிய தீர்மானம்

பட மூலாதாரம், Screengrab

படக்குறிப்பு, 1988 - அவையில் நிறைவேறிய தீர்மானம்

சட்டமன்றத்தில் தடியடி

ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளின் உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கையில் கிடைத்த மைக்குகள், பேப்பர் வெயிட்டுகள் என எல்லாவற்றையும் ஆயுதமாக்கி மோதிக்கொள்ள, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் வால்டர் தேவாரம் தலைமையில் ஆயுத போலீசார் சட்டமன்றத்துக்குள் நுழைந்து, சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தி சட்டமன்ற கூட்டத்தை கலைத்தனர்.

தடியடியிலும், வன்முறையிலும் காயமடைந்த எம்.எல்.ஏக்கள், அவையில் பிடுங்கப்பட்ட மைக்குகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் அவையிலிருந்து வெளியேறிய காட்சியை, இணையம் மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், அரச தொலைக்காட்சியான தூர்தர்ஷனும், பத்திரிகைகளும் காட்டின.

ஜெயலலிதா

அவையில் நடந்த இந்த அமளிக்குப் பின்னர், தமிழக சட்டசபையை கலைக்க குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார், பின்னர் நடந்த தேர்தலில் ஜானகி அணியும், ஜெயலலிதா அணியும் தனித்தனியாக வெவ்வேறு சின்னத்தில் நின்றனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜெயலலிதா வென்றார். ஆனால், இந்தத் தேர்தலில் ஆட்சியை திமுக பிடித்தது.

இதன் பிறகு, ஜானகி தானாக முன்வந்து இந்தப்போட்டியிலிருந்து விலகினார். ஜெயலலிதா ஒற்றைத்தலைமையாக மாறினார்.

சட்டமன்ற வன்முறை என்று குறிப்பிட்டாலே ஜெயலலிதா - கருணாநிதி இடையிலான பட்ஜெட் கூட்டத்தொடர் வன்முறை மட்டுமே பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், அதிமுகவின் உள்விவகாரங்கள் காரணமாக, 1988இல் சட்டமன்றத்தில் வன்முறை நடந்திருக்கிறது என்ற வரலாறும் உள்ளது.

இந்த நிகழ்வையும் தற்போது அதிமுகவில் நடக்கும் ஒற்றைத்தலைமை விவகாரத்தையும் ஒப்பிட்டு வரும் பதிவுகள் தொடர்பாக அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன் பிபிசி தமிழுடன் பேசியபோது "இது ஒப்பிட முடியாதது" என்று தெரிவிக்கிறார்.

ஜெயலலிதாவுடன் நத்தம் விஸ்வநாதன் (கோப்புப்படம்)
படக்குறிப்பு, ஜெயலலிதாவுடன் நத்தம் விஸ்வநாதன் (கோப்புப்படம்)

"அன்று ஜானகி அம்மாவின் பக்கம் ஏராளமான எம்.எல்.ஏக்கள் இருந்தபோதிலும் தொண்டர்களின் ஆதரவைப் பெற்றவராக ஜெயலலிதா இருந்தார். தற்போதைய சூழலில் கட்சியின் நிர்வாகிகளுக்கு தொண்டர்கள் தந்த அழுத்தத்தின் விளைவாகவே எடப்பாடி பழனிசாமியை தலைமையேற்க அழைக்க வேண்டும் என்று சொல்கிறோம்." ஆனால், தொண்டர்களின் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செல்ல உள்ளாரே என்று கேட்டோம்.

"ஸ்டாலினை பாராட்டி, கலைஞரை பாராட்டி, திமுகவுடன் நட்பு பாராட்டுவது ஆகிய தன் செயல்கள் மூலம் தொண்டர்களின் வெறுப்பைத்தான் சம்பாதித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதே சம்பவங்கள் அம்மா இருந்தபோது நடந்திருந்தால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட நீக்கப்பட்டிருப்பார். ஜானகி அம்மா மிகச்சிறந்த தலைவர். எம்.ஜி.ஆரின் மனைவியாக இருந்தபோதும் தொண்டர்கள் அவரை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் திமுகவுடன் நட்பு பாராட்டினார் என்பதே காரணம். இதனால், அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவை தலைவியாக ஏற்றுக்கொண்டனர்.அதேபோல, தன் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொண்டும் இருந்தார் ஓபிஎஸ். அன்று சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் கூடத்தான் நடத்தினார். இன்று அதே சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். அப்படியானால் இது என்ன அதர்மயுத்தமா?" என்றும் கேள்வி எழுப்புகிறார் நத்தம் விஸ்வநாதன்.

ஓ.பன்னீர்செல்வம்

தீர்வு என்ன?

ஆனால், மீண்டும் இரட்டைத் தலைமை முறைக்கு வருவதுதான் இந்த பிரச்னையின் முடிவாக இருக்க முடியும் என்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.டி. பிரபாகர்.

"ஜானகி அம்மா தானாக முன்வந்து கட்சியின் நன்மைக்காக விட்டுக்கொடுத்தார்கள். கட்சியின் சின்னம், கொடி, வங்கிக்கணக்கில் இருந்த பணம் உட்பட அனைத்தையும் விட்டுக்கொடுத்தார். அதனால்தான் அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. எம்.ஜி.ஆரிடமிருந்து அவர் பெற்றிருந்த பண்புகளில் ஒன்று அது.

ஆனால், இந்தமுறை சூழலே வேறு. அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பொறுப்பை எப்படி ஒரு குழுவினர் சேர்ந்து நீக்க முடியும் என்பதுதான் அடிமட்டத் தொண்டனின் கேள்வி. தொண்டர்கள் இணைந்து, ஒற்றை வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரட்டைத் தலைமையில் ஒருவரை நீக்க இன்னொருவர் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார். இது தவறானது.

ஜேசிடி பிரபாகர்

பட மூலாதாரம், Facebook/JCD Prabhakar

படக்குறிப்பு, ஜே.சி.டி. பிரபாகர்

கலைஞரை பாராட்டினார் என்ற கூற்று எல்லோருக்கும் பொருந்துமே. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் சட்டமன்றத்தில் இப்படி பேசியுள்ளனர். இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் குறி வைப்பது சரியல்ல" என்றார்.

அன்று ஜானகி விட்டுக்கொடுத்ததால் முடிவுக்கு வந்த இரட்டைத் தலைமை பிரச்னை, தற்போது என்ன நடந்தால் முடிவுக்கு வரும் என்று கேட்டபோது, "யார் முதலில் தவறிழைக்க ஆரம்பித்தார்களோ, அவர்களாகவே திருந்தி மீண்டும் பழைய நிலையைக் கொண்டுவந்தாலொழிய இந்த பிரச்னை முடிவுக்கு வராது" என்கிறார் ஜே.சி.டி. பிரபாகர்.

".பி.எஸ். விட்டுக்கொடுக்கமாட்டார்"

ஓ.பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

"ஓபிஎஸ் விட்டுக்கொடுப்பாரா என்ற கேள்விக்கே இடமில்லை. அன்று ஜானகி அம்மா விட்டுக்கொடுத்தபோது, அவருக்கு எதிராக அநீதி ஏதும் இழைக்கப்படவில்லை. ஆனால், ஓபிஎஸ் அவர்களுக்கு இந்த விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொறுப்பை விட்டுக்கொடுத்தபோதும் சரி, எதிர்கட்சித் தலைவர் பொறுப்பை விட்டுக்கொடுத்தபோதும் சரி, நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த முறை அவர் விட்டுக்கொடுப்பதாயில்லை. தொண்டர்களுக்கு எதிராகவும் கழக சட்டவிதிகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட இந்த முடிவை ஓபிஎஸ் ஆதரிக்கமாட்டார்" என்று அவர் மேலும் கூறினார்.. ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்படலாம் என்று செய்திகள் வருகிறதே என்று கேட்டதற்கு, "ஊகங்களுக்கு நான் இப்போது பதிலளிக்க முடியாது. ஆனால், அப்படி ஒன்று நடந்தால் அதற்கான வியூகமும் எங்களிடம் உண்டு" என்று தெரிவித்தார். ஏற்கனவே உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் இரண்டு அணிகளாக பிரிந்து சின்னத்துக்கான போட்டி வரவும் வாய்ப்புண்டு என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: