ஓபிஎஸ் Vs இபிஎஸ்: உள்ளாட்சிகளுக்கான தற்செயல் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யாரும் போட்டியிடாதது ஏன்? - தமிழ்நாடு அரசியல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அ.தி.மு.கவின் தலைமைப் பதவிக்கு ஏற்பட்டிருக்கும் மோதல் காரணமாக காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர் பதவிகளுக்கான தற்செயல் தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் யாரும் போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ஏற்பட்டுள்ள காலி இடங்களுக்கு வரும் ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடக்குமென தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரகப் பகுதிகளைப் பொறுத்தவரை மொத்தமாக 498 இடங்கள் காலியாக உள்ளன.
நகர்ப்புறப் பகுதிகளைப் பொறுத்தவரை 12 இடங்கள் காலியாக உள்ளன. ஆகவே மொத்தமாக 510 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. இந்த 510 இடங்களில் 34 இடங்களில் கட்சி அடிப்படையிலும் மீதமுள்ள 476 இடங்களுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமலும் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிக்கை ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பா.ஜ.க. அறிவித்துவிட்டது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, இந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து முறையான அறிவிப்பு ஏதும் வராத நிலையில், காலியான தொகுதிகளில் உள்ள கட்சிக்காரர்கள் திண்டாடிப் போயுள்ளனர்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான தேதி முடிவடைந்துவிட்டாலும், பல இடங்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதாக மனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு, கட்சியின் சார்பில் தரப்பட வேண்டிய A படிவத்திற்காகவும் B படிவத்திற்காகவும் காத்திருந்தார்கள்.
இந்த நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், "உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் A மற்றும் படிவம் B ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான இன்றைக்குள் எப்படியாவது படிவம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், பல இடங்களில் அ.தி.மு.கவினர் கட்சி சார்பில் மனுதாக்கல் செய்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, அத்தானி வார்டுகள், இளையாங்குடி பேரூராட்சியில் ஒரு வார்டு, தஞ்சாவூர் அய்யம்பேட்டையில் 9வது வார்டு, விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி, வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் கட்சியின் சார்பில் அ.தி.மு.கவினர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இன்று பிற்பகல் மூன்று மணிக்குள் A மற்றும் B படிவங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துடன் கிடைத்தால் கட்சி சார்பில் வேட்பாளராகவிடலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
ஆனால், ஓ. பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதம் குறித்து எடப்பாடி தரப்பில் இருந்து பிற்பகல் வரை எந்த பதிலும் வரவில்லை. சுமார் இரண்டரை மணியளவில், ஓ. பன்னீர்செல்வத்திற்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார் எடப்பாடி கே. பழனிசாமி.
அந்தக் கடிதத்தில், "கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல. உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூன் 27 அன்று முடிவடைந்த நிலையில் இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகம் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையிலும் 27ஆம் தேதியன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு மொத்தமுள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல் நிலை சரியில்லையெனத் தகவல் தெரிவித்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், இந்தக் கடிதம் ஏற்கத்தக்கதல்ல.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல், நாம் இருவரும் கூட்டாக அழைப்புவிடுத்த கழகத்தின் பொதுக் குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள் ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும் நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல்செய்தும் அ.தி.மு.க. செயல்படாத நிலைக்குக் கொண்டுசெல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை" என்று கூறியுள்ளார்.
இன்றோடு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் முடிந்துவிட்ட நிலையில், இந்த 34 இடங்களிலும் அ.தி.மு.க. சார்பில் யாரும் அதிகாரபூர்வமாக போட்டியிடாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து எடப்பாடி கே. பழனிசாமி பிரிவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டபோது, "A மற்றும் B படிவங்கள் கட்சியிலிருந்து கொடுக்கப்படாததால், கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக யாரும் போட்டியிடவில்லை" என்றார். அந்தப் படிவங்களில் கையெழுத்திட ஓ. பன்னீர்செல்வம் தயாராக இருந்தும், எடப்பாடி மறுப்புத் தெரிவித்தது ஏன் எனக் கேட்டபோது, "அதற்கான பதில் கடித்தத்தை எடப்பாடி கே. பழனிசாமி எழுதிவிட்டார். அதுதான் என்னுடைய பதில்" என்று தெரிவித்தார் ஆர்.பி. உதயகுமார்.
இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கென அ.தி.மு.க. அதிகாரபூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், சில இடங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஆதரவுடன் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். வேறு சில இடங்களில் சுயேச்சையாகக்கூட அ.தி.மு.க. வேட்பாளர்கள் களத்தில் இல்லை. குறிப்பாக கானாடுகாத்தான் பேரூராட்சியில் உள்ள ஒரு இடம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இடங்கள், கடலூர், புதுப்பேட்டை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான இரு இடங்கள், தஞ்சாவூர், காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் உள்ள தலா ஒரு வார்டு ஆகியவற்றில் அ.தி.மு.க. சார்பில் யாரும் போட்டியில் இல்லை.
இந்தத் தற்செயல் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 9ஆம் தேதி நடக்குமென்றும் வாக்கு எண்ணிக்கை 12ஆம் தேதி நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












