யுக்ரேனிலிருந்து ஊர் திரும்பிய தமிழக மாணவர்கள் - '2 நாட்கள் பனியில், சரியான உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம்'

தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எல்லையில் காத்திருக்கின்றனர். அவர்களை அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என யுக்ரேனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கோவில்பட்டியை சேர்ந்த மாணவி திவ்யாபாரதி மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதல் காரணமாக, அங்குள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கல்வி பயில சென்ற மாணவர்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, மத்திய அரசு அங்குள்ளவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.
யுக்ரேனில் சிக்கிய மாணவ, மாணவிகளை, அருகில் உள்ள நாடுகளின் எல்லை பகுதிகளுக்கு வரவழைத்து, அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரும் பணியை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், யுக்ரேனில் சிக்கி இருந்த தமிழக மாணவர்களை மீட்கும் வகையில், தமிழக அரசும், மத்திய அரசுடன் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மூன்று மாணவ மாணவிகள் சொந்த ஊர் வந்தனர்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ், ராணி தம்பதியின் மகன் நவநீத ஸ்ரீராம் யுக்ரேன் நாட்டில் உள்ள வின்னிட்ஷா தேசிய மருத்துவக் கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் ஸ்ரீதர், பானு தம்பதியின் மகள் ஹரிணி 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்; பாலமுருகன், கற்பகவள்ளி தம்பதியின் மகள் திவ்யபாரதி 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
இவர்களை போல் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் இந்த கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர். யுக்ரேனில் போர் தொடங்கியது முதல், இவர்கள் தங்களை மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
மாணவர் நவநீத ஸ்ரீராமிடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். அப்போது, அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்து, 'தைரியாக இருக்க வேண்டும், அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவீர்கள்' என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை காரணமாக, கடந்த மாதம் 26-ம் தேதி ஒரு குழுவிற்கு 50 பேர் என்ற அடிப்படையில், பேருந்து மூலமாக புறப்பட்டு, 27-ம் தேதி ருமேனியா நாட்டு எல்லைக்கு வந்துள்ளனர்.
இவர்களில் கோவில்பட்டியை சேர்ந்த மாணவர்கள் இன்று விமானம் மூலம் ஊருக்கு வந்தனர். அவர்களை பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
'2 நாட்கள் பனியில், சரியான உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம்'
சொந்த ஊர் திரும்பிய மாணவி திவ்யாபாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், யுக்ரேன் வின்னிட்ஷாவில் 5-ம் ஆண்டு மருத்துவ படித்து வருகிறேன். அங்கு முதலில் போர் பதற்றம் இல்லை. அதனால் கல்லூரி வகுப்புகள் வழக்கம் போல் நடந்தன.
பின்பு எல்லையிலும், கீயவ், கார்கிவ் ஆகிய நகரங்களில் போர் பதற்றம் அதிகமானது. இதனால் எங்களுக்கு பயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டோம். அவர்களது அறிவுரைப்படி நாங்கள் யுக்ரேன் எல்லை வரை பேருந்தில் வந்தோம்.

அங்கு தான் கொஞ்சம் கடினமாக இருந்தது. அங்கு ஏராளமான மாணவர்கள் நின்றிருந்தனர். அவர்களை கொஞ்சமாக பிரித்து அனுப்பி வைத்தனர். நாங்கள் அங்கே 2 நாட்கள் பனியில், சரியான உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம்.
நாங்கள் ரோமேனியாவின் எல்லையை கடந்து வந்தபோது, இந்திய தூதரக அதிகாரிகள் எங்களுக்கு தங்குமிடம் வழங்கி பார்த்துக்கொண்டனர்.
மேலும் ரோமேனியாவில் இருந்து டெல்லி வருவதற்கு மத்திய அரசும், டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு வருவதற்கு தமிழக அரசும் உதவி செய்ததாக மாணவி திவ்யாபாரதி தெரிவித்தார்.
"உங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது. ஆனால், எங்களுக்கு இது தான் ஊர்"
தொடர்ந்து பேசிய மாணவி திவ்யாபாரதி, நாங்கள் கடந்த வாரம் சனிக்கிழமை அங்கிருந்து புறப்பட தயாரானோம்.
எங்களது பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த 600 பேர் படிக்கின்றனர். அவர்களில் இன்னும் பலர் எல்லையில் காத்திருக்கின்றனர். யுக்ரைனில் உள்ளவர்களே நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
எங்களது பேராசிரியர்களிடம் கேட்டபோது, "உங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது. ஆனால், எங்களுக்கு இது தான் ஊர். இங்கே தான் இருக்க வேண்டும்." என்றனர்
நான் புறப்பட்டு 9 நாட்களாகி விட்டது. இந்த நாட்களில் எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதற்றமடைந்துவிட்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எல்லையில் காத்திருக்கின்றனர். அவர்களை அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும், என்றார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












