இந்திய குடியரசு தினம்: நரேந்திர மோதி அரசு போரிஸ் ஜான்சனை டெல்லிக்கு அழைத்ததில் மறைந்திருக்கும் உண்மைகள்

பட மூலாதாரம், Jeff J Mitchell - Pool/ Getty Images
- எழுதியவர், ரஜ்னிஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தினத்துக்கு தலைமை விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரவிருப்பது உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், அவரது இந்திய வருகை பிரிட்டன் அரசின் குறிப்பிடத்தக்க சர்வதேச உறவின் விரிவாக்கமாக பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் இந்திய குடியரசு தின தலைமை விருந்தினராக வெளிநாட்டு தலைவரை இந்திய அரசு அழைப்பது வழக்கம். அந்த வகையில் 2021ஆம் ஆண்டு நிகழ்வுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வரவிருக்கிறார். அவரது இந்திய வருகை, இரு நாடுகள் இடையிலான ஆழமான உறவின் அடையாளமாக கருதப்படுகிறது.
கடந்த மாதம் சிந்தனை மையம் ஒன்றின் தலைமை நிர்வாகியாக இருக்கும் கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்பர், "இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவுடன் போட்டி போட இந்தியாவுடன் இணக்கமாக இருக்க வேண்டியது பிரிட்டனுக்கு அவசியம்" என்று கூறியிருந்தார்.
பிரெக்சிட் அமலாக்கத்துக்குப் பிறகு இந்திய - பசிஃபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பிரிட்டன் மிகப்பெரிய பங்களிப்பை அதில் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பரஸ்பர நல்லுறவை விரும்பும் நாடுகள்
பிரிட்டன் பிரதமரின் வருகை தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு போரிஸ் ஜான்சன் வருகிறார். இந்திய - பசிஃபிக் பிராந்திய நலன்களில் அவர் கொண்டிருக்கும் அக்கறை இந்த பயணத்தின் மூலம் தெரிகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் ஜி7 நாடுகள் மற்றும் சிஓபி 26 உச்சிமாநாடுகளை பிரிட்டன் நடத்தவிருக்கிறது. இதில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருக்கிறார்.

பட மூலாதாரம், Dylan Martinez - Pool/Getty Images
இந்த உச்சி மாநாட்டில் இந்தியா தவிர, தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் கெளரவ பிரதிநிதிகளாக கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் இந்திய பசிஃபிக் பிராந்திய நலன்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்று பிரிட்டன் நம்புகிறது.
இது தவிர இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தொழிற்துறையில் கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே ஆண்டுதோறும் அதன் சந்தையில் 24 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு வர்த்தக முதலீடுகள் செய்யப்படுகின்றன.
பிரிட்டனில் மொத்தம் 842 இந்திய நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் வருவாய் மதிப்பு, 41.2 பில்லியன் பவுண்டுகளாக ஆக உள்ளது. அந்த நிறுவனங்களில் மில்லியன் கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இதைக்கருத்தில் கொண்டே இந்திய வருகை குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள பிரிட்டன் பிரதமர், "அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு செல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புத்தாண்டை இந்தியாவில் இருந்து பிரிட்டன் தொடங்குகிறது. எனது பயணம் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும். இந்திய, பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் இந்தியாவுடனான உறவு பிரிட்டனுக்கு முக்கியம்," என்று கூறியுள்ளார்.
உலகையே கடந்த ஓராண்டாக புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக இந்தியாவின் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வுடன் இணைந்த அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி தயாரிப்பில் 50 சதவீதம் உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் 1.1 கோடி முக கவசங்கள், 30 லட்சம் பாரசிட்டமால் மருந்துகள் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அந்நாட்டுடனான இந்திய அரசின் பிணைப்பின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு அதன் குடியரசு நாளில் தலைமை விருந்தினராக அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள போரிஸ் ஜான்சனின் பயணத்துடன் சேர்த்து, இரண்டாவது முறையாக இருக்கும். இதற்கு முன்பு ஜான் மேஜர் என்ற பிரிட்டன் பிரதமர் 1993ஆம் ஆண்டில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

பட மூலாதாரம், Noel Celis - Pool/Getty Images
அடுத்த திட்டம் என்ன?
ஜி7 உச்சி மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், அடுத்த கட்டமாக டி-10 என்ற அமைப்பை வலுப்படுத்த பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. "டி" என்றால் ஆங்கிலத்தில் "டெமாக்ரடிக்" என்று அர்த்தம்.
உலகின் ஜனநாயக சக்திகளாக விளங்கும் 10 நாடுகள் கொண்ட அமைப்பாக அது இருக்கும். எதேச்சதிகாரத்துடன் உள்ள நாடுகளுக்கு போட்டியாக இந்த ஜனநாயக நாடுகளின் செயல்பாடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த டி-10 அமைப்பை வலுப்படுத்த பிரிட்டன் விரும்புகிறது. இந்த டி-10 அமைப்பில் பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இணைய இசைவு தெரிவித்துள்ளன.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகளை இதில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழுவின் அங்கமாக ரஷ்யா ஏற்கெனவே இருந்தது. ஆனால், கிரைமியா பகுதியை தனது நாட்டுடன் ரஷ்யா இணைத்த சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்குப் பிறகு அந்த அமைப்பில் இருந்து ரஷ்யா விலக்கப்பட்டது.
ஆனால், ஏதோ ஒரு வடிவில் இந்திய, பசிஃபிக் பிராந்தியத்தில் ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு அதிகரித்து வருவது சீனாவுக்கு சங்கடத்தை தருவதாக கருதப்படுகிறது. இந்த ஜனநாயக நாடுகளுக்கு அமெரிக்கா பக்க பலமாக இருப்பதும் சீனாவுக்கு கவலை தரக்கூடிய செய்தி. இந்த நிலையில், டி-10 அமைப்பில் இந்தியா இணையுமானால், பிறகு உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்திகள் பங்கெடுக்கும் அமைப்பாக அது உருவெடுக்கும்.
இதுபோன்ற காரணங்களால்தான் பிரிட்டனுக்கு இந்தியாவும், இந்தியாவுக்கு பிரிட்டனும் தேவைப்படுகிறது என்று முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் கன்வால் சிபல் கூறுகிறார்.
"ஜி7 உச்சி மாநாட்டுக்கு இந்தியாவை அழைப்பது புதிய விஷயம். முன்பும் அந்த உச்சி மாநாட்டில் இந்தியா விருந்தினர் நாடாக கலந்து கொண்டுள்ளது. ஆனால், குறிப்பிடத்தக்க விஷயமாக இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தில் பிரிட்டன் தனது விரிவாக்க கொள்கையை அமல்படுத்தி வருகிறது. பிரிட்டனில் ஏற்கெனவே சீனாவுக்கு எதிரான உணர்வு மேலோங்கி வருகிறது. அதுவும் தனது காலனியாக முன்பு இருந்த ஹாங்காங்கில் சீனாவின் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுகை, பிரிட்டனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சரியான பாதையில் செல்லவில்லை என்பதை உணர வேண்டும்," என்று கன்வால் சிபல் கூறுகிறார்.
இந்த டி-10 உறுப்பு நாடுகள் ஒன்று கூடினால், அது எதிர்காலத்தில் சீனாவுக்கு அழுத்தம் தரக்கூடிய சக்தியாக மாறலாம் என்ற அச்சம் அந்நாட்டுக்கு உள்ளது.
இதேவேளை, பிரிட்டன் அரசு தனது வெளியுறவுக்கொள்கையை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதை அதன் சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுவதாக வெளியுறவு விவகாரங்கள் நிபுணர் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.
"சீனாவை மையப்படுத்தியே டி-10 நாடுகளை பிரிட்டன் வலுப்படுத்த விரும்புகிறது," என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்தியாவுடன் நட்பு பாராட்டி வரும் ரஷ்யா, இதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. "ஐரோப்பிய நாடுகள் தங்களின் அமைப்பில் இந்தியாவை சேர்ப்பதன் மூலம் அவை சீன எதிர்ப்பு முகாமை வலுப்படுத்துகின்றன. அதை எங்களுடைய நாடு விரும்பவில்லை," என்கிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்.
எந்த சூழ்நிலையிலும் அமெரிக்காவின் தலைமையில் உலகின் பிற நாடுகள் முன்னோக்கிச் செல்வதை தமது நாடு விரும்பவில்லை என்று வலியுறுத்தும் அவர், அந்த காரணத்துக்காகவே ரஷ்யாவுக்கு சீனாவின் ஆதரவு தேவைப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












