தமிழ்நாட்டின் மினி க்ளினிக்குகள் சுகாதாரக் கட்டமைப்பை எந்த அளவுக்கு மேம்படுத்தும்?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY FB

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மாநிலம் முழுவதும் 2,000 சிறிய மருத்துவமனைகளை அமைக்கும் முயற்சியை தமிழக அரசு துவங்கியிருக்கிறது. மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பை இந்த முயற்சி எந்த அளவுக்கு மேம்படுத்தும்?

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளருடன் இயங்கக்கூடிய 2,000 சிறிய மருத்துவமனைகளை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, சென்னையில் 47 மருத்துவமனைகளும் தமிழ்நாடு முழுவதும் 630 சிறிய மருத்துவமனைகளும் திங்கட்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டன. இந்த மருத்துவமனைகள் அம்மா மினி க்ளினிக் என அழைக்கப்படவுள்ளன.

இந்த மருத்துவமனைகளைத் துவக்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால், ஏழை, எளிய மக்கள் 100 ரூபாய், 200 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. அந்த சுமைகூட இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இந்த மினி க்ளினிக், தமிழ்நாட்டின் அரசு மருத்துவ சேவையில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்கிறார் மாநிலத்தின் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இது குறித்து பிபிசியிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தற்போது கிராமப்புறங்களின் 30,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், நகரங்களின் 50,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்றும் அதற்கு கீழே, துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர் மூலமும் ஆரம்ப நிலை மருத்துவம் வழங்கப்படுகிறது. இருந்தாலும் பொதுமக்கள் நடக்கும் தூரத்தில், சைக்கிளில் செல்லும் தூரத்தில் மருத்துவமனைகள் இருப்பது நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

"இம்மாதிரி அரசு மருத்துவ சேவை அருகிலேயே கிடைக்கும்போது, பெரிய நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். மேல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்க முடியும். இதற்கு முன்பு, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வேறு வாகனங்களில் பயணிக்க வேண்டும் அல்லது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. இனி அது மாறும்," என்கிறார் ராதாகிருஷ்ணன்.

கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு பல இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தியது. அந்தத் தருணத்தில்தான் சிறிய அளவிலான மருத்துவமனைகளின் தேவை வெகுவாக உணரப்பட்டது. இதையடுத்து இம்மாதிரி சிறிய க்ளீனிக்குகளை அமைப்பது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூட்டத்திலும் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 2,000 க்ளீனிக்குகளை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மூன்று மட்டங்களில் பொது மருத்துவக் கட்டமைப்பு செயல்படுகிறது. மிகச் சிக்கலான நோய்களுக்கான சிகிச்சை மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட பெரிய மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 50 மருத்துவமனைகள் இதுபோல இயங்கிவருகின்றன.

இதற்கடுத்த கட்டமாக மாவட்ட மட்டத்திலான பொது மருத்துவமனைகள் இயங்குகின்றன. இதற்கு அடுத்தகட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொறுத்தவரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 460ம் பிறபகுதிகளில் 1806 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என ஒட்டுமொத்தமாக 2,266 ஆரம்ப சுகாதர நிலையங்கள் இயங்கி வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY FB

இதற்கு அடுத்த மட்டத்தில் 8,713 துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு மருத்துவர்கள் இல்லாமல், கிராமப்புற சுகாதாரச் செவிலியர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால், கொரோனா காலகட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் துணை சுகாதார நிலையங்களுக்கும் இடைப்பட்ட ஒரு கட்டமைப்பின் தேவை உணரப்பட்டது என்கிறார் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைச்சாமி.

"கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு சாதாரண காய்ச்சல் என்றாலே மக்கள் அஞ்சுகிறார்கள். உடனடியாக மருத்துவரை அணுக நினைக்கிறார்கள். இதனை எதிர்கொள்ள எல்லா இடங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பது உடனடியாக நடக்காது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், பெரிய கட்டடம் எல்லாம் தேவைப்படும். ஆனால், ஒரு தனியார் மருத்துவர், இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு கட்டடத்தில் தனது சேவையை வழங்குகிறார். ஆகவே, அதைப் போன்ற ஒரு கட்டமைப்புதான் இந்த மினி க்ளினிக். கிராமங்களில் பஞ்சாயத்து மட்டத்தில் பல கட்டங்கள் இருக்கின்றன. அந்தக் கட்டடங்களில் இந்த மருத்துவமனைகள் இயங்கும். அந்தந்த பஞ்சாயத்து அமைப்புகள் மின்சாரம், சுத்தப்படுவது ஆகியவற்றை பார்த்துக்கொள்ளும். மருத்துவர், செவிலியர் ஆகியோரை அரசு வழங்கும்" என்கிறார் குழந்தைச்சாமி.

இந்த மினி க்ளினிக் மூலம் மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு வெகுவாக மேம்படும் என்கிறார் அவர். ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொறுத்தவரை எட்டு கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருக்கிறது. ஆனால், இந்த மினி க்ளீனிக் வரும்போது இந்த தூரம் பாதியாகக் குறையும். இந்த மாதிரி க்ளினிக்குகளின் கட்டமைப்பை மேம்படுத்திய பிறகு, தடுப்பூசிகளைக்கூட இருப்பு வைத்து, தடுப்பூசி மையங்களாகவும் செயல்படச்செய்யலாம். மக்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பது இன்னும் எளிதாகும் என்கிறார் குழந்தைசாமி.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY FB

ஆரம்ப சுகாதார நிலையங்களைவிட, இம்மாதிரி சிறிய மருத்துவமனைகளின் மீது அந்தப் பகுதியினருக்கு அதிக பொறுப்புணர்வும் உரிமையும் இருக்கும். எந்த அளவுக்கு இதுபோன்ற கட்டமைப்புகள் சிறிதாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை மக்களுக்கு நெருக்கமாகச் செல்ல முடியும் என்கிறார் குழந்தைசாமி.

ஆனால், இம்மாதிரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் அரசு மருத்துவர்களாக இல்லாதவரை, இம்மாதிரி அமைப்புகள் சரியாக இயங்காது என்கிறார் இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் எழிலன்.

"அ.தி.மு.க அரசு கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அப்போதெல்லாம் செய்யாமல், தேர்தல் நெருங்கும்போது அவசர அவசரமாக இதைச் செய்கிறார்கள். இதில் பணியாற்றும் மருத்துவர்கள் நிரந்தர மருத்துவர்களா, தற்காலிக மருத்துவர்களா என்பது தெளிவாகவில்லை. மருத்துவர்களும் செவிலியர்களும் நிரந்தர பணியாளர்களாக இல்லாவிட்டால் மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென்ற கடமை உணர்வை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது" என்கிறார் எழிலன்.

mini clinic tamil nadu

பட மூலாதாரம், Tn dipr

இப்போதைக்கு இந்த மருத்துவமனைகளில் ஒப்பந்த நிலையில்தான் மருத்துவர்களும் செவிலியர்களும் நியமிக்கப்படுவார்கள் எனக் கருதப்படுகிறது. "ஆனால், மருத்துவர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தமிழக மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களையும் செவிலியர்களையும் தேர்வுசெய்யும்போது, வெளியில் இருந்து தேர்வுசெய்யாமல் இந்த மினி க்ளீனிக் மருத்துவர்களை, செவிலியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அப்போதுதான் இந்த மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் முன்வருவார்கள்" என்கிறார் குழந்தைச்சாமி.

ராஜிவ்காந்தி மருத்துவமனை போன்ற மிகப் பெரிய மருத்துவமனைகளில்கூட தற்போது சாதாரண நோய்களுக்கு சிகிச்சையளிக்க வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. "இந்த மினி க்ளீனிக்குகள் மூலம் பெரிய மருத்துவமனைகளுக்கு வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை குறையுமென எதிர்பார்க்கிறோம். இதனால், பிற பெரிய, கடினமான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் இங்குள்ள மருத்துவர்கள் கவனம் செலுத்த முடியும்" என்கிறார் ராஜிவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர் ஒருவர்.

இதுபோன்ற சிறிய மருத்துவமனைகளை வெற்றிகரமாக செயல்படுத்தினால், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை போன்ற ஒரு கட்டமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும் என்கிறார் குழந்தைசாமி. ஆனால், இம்மாதிரி மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைவருமே அரசுப் பணியாளர்களாக இருக்கும்போதுதான் இந்த அமைப்பு வெற்றிகரமாக இயங்கும் என்கிறார் மருத்துவர் எழிலன்.

அரசு மருத்துவ சேவைகளை வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக விளங்கிவருகிறது. தேசிய அளவிலான குழந்தைகள் இறப்பு விகிதத்தைவிட, தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் குறைவு. மாநிலத்தில் நடக்கும் 100 சதவீத பிரசவங்களும் மருத்துவமனைகளிலேயே நடக்கின்றன. அவற்றில் 65 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: