புது வகை எரிபொருள்: செளதி அரேபியாவில் இருந்து வரவுள்ள பசுமை ஹைட்ரஜன் பாதுகாப்பா? ஆபத்தா?

பட மூலாதாரம், Alamy
பசுமை ஹைட்ரஜன் உலகெங்கும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கார்பன் உற்பத்தியைத் தவிர்ப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று இதை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதன் பாதுகாப்பு மற்றும் நடைமுறை சாத்தியம் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.
செளதி அரேபியாவின் பாலைவனத்தின் எல்லையில் செங்கடலை ஒட்டி, நியோம் என்ற எதிர்கால நகரம் உருவாகி வருகிறது. 500 பில்லியன் டாலர் செலவில் உருவாகும் இந்த நகரம், பறக்கும் டாக்சிகள், வீடுகளில் ரோபோ உதவியாளர்கள் என நவீன வசதிகளுடன் உருவாகிறது. பல மில்லியன் பேர் இந்த நகரத்தில் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நகருக்கான எரிபொருள் தேவையை எது பூர்த்தி செய்யப் போகிறது, உலகிற்கு என்ன எரிபொருள் கிடைக்கப் போகிறது?
அது கச்சா எண்ணெய் கிடையாது. அதற்கு மாறாக, பசுமை ஹைட்ரஜன் என்ற மாற்று எரிபொருளை செளதி அரேபியா நம்பியிருக்கிறது. கார்பன் கழிவை ஏற்படுத்தாத இந்த எரிபொருள் நீரில் உள்ள ஆக்சிஜன் மூலக்கூறுகளில் இருந்து ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பிரிப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க வகையில் தயாரிக்கப்பட்ட மின்சாரம் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.
செளதி அரேபியாவில் கடந்த 4 ஆண்டுகளாக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்து வருவதாக, இந்த கோடையில், ஏர் புராடக்ட்ஸ் & கெமிக்கல்ஸ் என்ற அமெரிக்க கேஸ் நிறுவனம் அறிவித்தது. பாலைவனத்தில் அமைக்கப்பட்ட 4 கிகாவாட் திறன் உள்ள காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து இதற்கான மின்சாரம் கிடைக்கிறது. உலகின் மிகப் பெரிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் இதுதான் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. செளதியில் இதுபோல இன்னும் நிறைய மின் திட்டங்கள் வரவுள்ளதாகவும் கூறுகிறது.
எரிசக்தித் தேவையில் அடுத்த பெரிய மாறுதலாக பசுமை ஹைட்ரஜனை செளதி மட்டும் எதிர்நோக்கி இருக்கவில்லை. அமெரிக்காவில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் காலத்திற்கு முடிவு கட்டுவதற்கு இது உதவும் என்று உலகெங்கும் நிறைய நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், அரசுகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். புவி வெப்பமாதல் வேகத்தைக் குறைக்கவும் இது உதவும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
``இது மிகவும் நம்பிக்கை தருவதாக இருக்கிறது'' என்று நியூயார்க்கைச் சேர்ந்த லாப-நோக்கற்ற இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்புக் கவுன்சிலின் எரிசக்தி ஆய்வாளர் ராச்செல் பாக்ரி கூறுகிறார். வீட்டு மின் தேவைகள் மற்றும் மின்சார கார்களுக்கான தேவையை காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரம் பூர்த்தி செய்துவிடும் நிலையில், அதிக மின்சாரம் தேவைப்படும் கான்கிரீட் மற்றும் ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு பசுமை ஹைட்ரஜன் தான் சரியான எரிபொருளாக இருக்கும் என்று பாக்ரி போன்ற நிபுணர்கள் கூறுகின்றனர். மின்மயமாக்குவதற்கு சிரமமான பகுதியளவு போக்குவரத்து வாகனங்களுக்கும் இதுவே உதவியாக இருக்கும் என்கின்றனர். ``விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, உற்பத்தித் தொழிற்சாலைகள், நீண்டதூர லாரி பயணம் போன்ற கடைசிநிலை சேவைகளில் 15 சதவீதத்தை சுத்தமான எரிபொருளால் இயக்குவது கடினம். அதை பசுமை ஹைட்ரஜன் செய்யும்'' என்று பாக்ரி கூறுகிறார்.
தொழில்நுட்ப சிந்தனையாளர்களின் கற்பனைகளில் பசுமை ஹைட்ரஜன் உறுதியான பிடிப்பைக் கொண்டிருக்கிறது - மைக்கேல் லைபிரெய்ச்
எரிசக்தி செலவுகள் அதிகம் இருக்கும் பொருளாதாரத்தைக் கொண்ட ஐரோப்பா, இயற்கை எரிவாயுவுக்கு ரஷியாவை பெரிதும் சார்ந்திருக்கிறது. மின்பகுப்பு நிலையங்கள் மற்றும் இதர ஹைட்ரஜன் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நிதி அளிப்பதன் மூலம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி முயற்சிகளுக்கு ஐரோப்பா ஆதரவு அளித்து வருகிறது.
தூய்மையான எரிசக்தி ஊக்கத் தொகையில் பெரும் பங்கினை பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கு ஜெர்மனி ஒதுக்கியுள்ளது. ``கார்பன் உற்பத்தி இல்லாத முழுமையான பொருளாதாரத்தில் உள்ள புதிருக்கு விடை தருவதாக இது இருக்கும்'' என்று தங்கள் ஹைட்ரஜன் உத்தி குறித்து ஐரோப்பிய கமிஷன் கருத்து கூறியுள்ளது.
ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றி பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பெரிய அளவில் இந்தத் தொழில்நுட்பத்தின் பயன் வெளியில் வரவில்லை. பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்துவதில் முக்கிய தடைகள் இருந்தன என்று இது குறித்த சந்தேகம் எழுப்பும் நிபுணர்கள் கூறுகின்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரித்தால் மட்டுமே அது பசுமை ஹைட்ரஜனாக இருக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பயன்படுத்தி, நீரை ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனாகப் பிரிக்கும் மின்பகுப்பு நிலையங்களை உருவாக்கினால் தான் இது சாத்தியமாகும். மாறாக, இப்போது ஹைட்ரஜன் தயாரிக்க இப்போது மிகவும் பொதுவாக கடைபிடிக்கும் நடைமுறை ``இயற்கை எரிவாயு சீராக்கம்'' என்பதாக உள்ளது. படிமங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருளை, இயற்கை எரிவாயு வடிவில் பயன்படுத்தி, நீராவியுடன் வினையாற்றச் செய்து ஹைட்ரஜன், கார்பன் மோனோ ஆக்சைடு மற்றும் கரியமில வாயு தயாரிக்கப்படுகிறது. மீத்தேனில் இருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் பாரம்பரிய முறையில் கரியமில வாயு வெளியாவதால், அது பருவநிலைக்கு உகந்ததாக இருக்காது; இப்படி உற்பத்தியாகும் ஹைட்ரஜன் ``கிரே ஹைட்ரஜன்'' எனப்படுகிறது.
அது எந்த வகையில் உற்பத்தி செய்யப்படுவதாக இருந்தாலும், ஹைட்ரஜனை சேமித்து வைப்பதும், குழாய் வசதி இல்லாமல் எடுத்துச் செல்வதும் கடினமானது. இப்போதைக்கு அமெரிக்கா போன்ற இடங்களில், இயற்கை எரிவாயு போன்ற பிற எரிபொருள்களைவிட ஹைட்ரஜனின் விலை அதிகமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அதில் சாதகங்கள் இருந்தாலும் ``அதே அளவுக்கு எதிர்மறை விஷயங்களும் இருக்கின்றன'' என்று அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் புதிய எரிசக்தி நிதி நிபுணரும், பசுமை ஹைட்ரஜன் குறித்து சந்தேகம் எழுப்புபவருமான லைபிரெய்ச் கூறுகிறார்.
``இது இயற்கையாக நிகழாது. இதைப் பிரிக்க எரிசக்தி தேவை'' என்று புளூம்பெர்க் என்.இ.எப்.-ல் சமீபத்திய கட்டுரைகளில் லைபிரெய்ச் எழுதியுள்ளார். ``வளிமண்டல அழுத்தத்தைவிட 700 மடங்கு அழுத்தமும், மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் குளிர்ச்சியும் இருந்தால் தான் இதை சேமிக்க முடியும். சம அளவு இயற்கை எரிவாயுவுடன் ஒப்பிடும்போது, இதில் கால்வாசி எரிசக்தி தான் கிடைக்கும். இது உலோகத்தை பலவீனமாக்கும், மிகவும் நுண்ணிய துளைகளில் இது கசியும், அப்படி வெளியேறும் போது வெடிக்கும் தன்மை காரணமாக ஆபத்தானதாக இருக்கும்.
சில பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையங்களில் இதுகுறித்து ஆய்வுகள் நடக்கின்றன. மேற்கு ஆஸ்திரேலியாவில் பில்பரா என்ற இடத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி செய்யப் போவதாக ஆஸ்திரேலியாவில் உள்ள எரிசக்தி கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்தது. 1,743 ராட்சத காற்றாலை டர்பைன்கள், 30 சதுர மைல்கள் அளவிலான சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம், 26 கிகாவாட் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு தொழிற்சாலை இயக்கப்படுகிறது.
ஆனால் ஹைட்ரஜன் என்பதைவிட அம்மோனியாதான் உண்மையில் ஏற்றுமதியாகும் வாயுவாக இருக்கும் என்று ஆசிரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் எனப்படும் இந்த மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு நீண்ட தொலைவிற்கு ஹைட்ரஜனை கொண்டு செல்வதில் உள்ள சிரமங்களே இதற்குக் காரணம் என்று ஏ.பி.சி. நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தாலும், தொழில்நுட்ப சிந்தனையாளர்களின் கற்பனைகளில் பசுமை ஹைட்ரஜன் உறுதியான பிடிப்பைக் கொண்டிருக்கிறது என்று லைபிரெய்ச் கூறியுள்ளார்.
இது புதிய எரிசக்தியாக இருப்பதால், இதன் எதிர்காலம் தெளிவற்றதாக உள்ளது என்று பசுமை ஹைட்ரஜன் குறித்து ஆய்வு செய்து வரும் எரிசக்தி ஆய்வாளரான பென் கல்லகெர் கூறுகிறார். இவர் உட் மெக்கென்சியில் பணிபுரிகிறார். ``இங்கே என்ன நடக்கிறது என்ற உண்மையான விஷயங்கள் யாருக்கும் தெரியாது'' என்கிறார் அவர். ``இப்போதைக்கு இது அனுமானம் தான். புதிய எண்ணெய்யாக இதை பார்ப்பது கடினம். இருந்தாலும், ஒட்டுமொத்த எரிபொருள் பட்டியலில் இது முக்கியமான பங்கு வகிக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.
பசுமை ஹைட்ரஜன் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது, இதைப் புறக்கணித்துவிட முடியாது என்று இதை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைக் கொண்டு இது தயாரிக்கப்பட்டால், கரியமில வாயு அற்றதாக இது இருக்கும். எரிபொருள் தயாரிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதாக இருந்தால், இப்போது காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தியில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவியாக இருக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவை குறைவாக இருப்பதால், உபரியாக இருக்கும் நேரங்களில் மின்பகுப்பாய்வு நிலையங்களை இயக்க அதைப் பயன்படுத்தலாம். அதன் மூலம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளைப் பிரிக்கலாம். பிறகு ஹைட்ரஜனை சேமிக்கலாம் அல்லது குழாய் வழியாக எடுத்துச் செல்லலாம்.
ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் இந்த எரிபொருளை பல நாடுகளும், நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா இதில் பின்தங்கி இருக்கிறது. இயற்கை எரிவாயு போன்ற பிற எரிபொருள்கள் அங்கே இன்னும் மலிவாகக் கிடைக்கின்றன என்பதே அதற்குக் காரணம். ஆனால் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உட்டாஹ் மாகாணத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. பழமையாகிவிட்ட நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்குப் பதிலாக இந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது. தெற்கு கலிபோர்னியா மற்றும் நெவாடா பகுதிக்கும், உட்டாஹ் பகுதிக்குமான மின்சாரம் இங்கே தயாரிக்கப்பட உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஜப்பானில், புதிய பசுமை ஹைட்ரன் உற்பத்தி நிலையம் புகுஷிமாவில் தொடங்கப்பட்டுள்ளது. இது உலகில் மிகப் பெரியது. 2011ல் அணுஉலை விபத்து நடந்த இடத்திற்கு அருகில் அடையாளபூர்வமாக இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கும் மற்றும் நிலையான மையங்களிலும் எரிசக்தி செல்களை சார்ஜ் செய்ய இது பயன்படுத்தப்படும்.
கார்பன் உற்பத்தியைத் தவிர்ப்பதில் தீவிரம் காட்டும் ஐரோப்பாவும், பசுமை ஹைட்ரஜன் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்கிறது. பெரிய அளவிலான பசுமை ஹைட்ரஜன் திட்ட விரிவாக்கத்துக்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் ஒரு உத்தியின் வரைவை தயாரித்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அது ஏற்கப்படவில்லை. தூய்மையான எரிசக்தி திட்டங்களுக்கு 550 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய ஐரோப்பிய யூனியன் உத்தேசித்துள்ளது. புதிய பசுமை ஹைட்ரஜன் வசதிகள் மற்றும், எடுத்துச் செல்தல், சேமிப்பு தொழில்நுட்பத்துக்கான முதலீடும் இதில் அடங்கும். ``பருவநிலை மாறுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் உயர் லட்சியங்களை எட்டுவதற்கு, தூய்மையான ஹைட்ரஜன் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது ஐரோப்பிய யூனியனுக்கு முக்கியமானதாக உள்ளது'' என்று ஐரோப்பிய கமிஷன் எழுதியுள்ளது.
காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் மத்திய கிழக்கு நாடுகள், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. ``சௌதி அரேபியாவில் வியப்பூட்டும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செலவு குறைவாக இருக்கிறது'' என்று ராக்கி மவுன்டன் இன்ஸ்டிடியூட்டின் பிரேக்த்ரூ டெக்னாலஜி புரோகிராம் தலைவர் தாமஸ் கோச் பிளாங்க் கூறியுள்ளார். ``தினமும் போதிய அளவுக்கு சூரிய வெளிச்சம் இருக்கிறது. ஒவ்வொரு இரவிலும் போதிய அளவு காற்று வீசுகிறது. அதைக் கைவிடுவது கஷ்டம்'' என்கிறார் அவர்.
உலக மின்தேவையில் கால் பங்கு அளவிற்கு பசுமை ஹைட்ரஜன் மூலம் ஈடு செய்ய முடியும் என்றால், உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிகளுக்கு 11 டிரில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்று புளூம்பெர்க் என்.இ.எப். கூறியுள்ளது. அதனால் தான் இப்போது காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் ஆற்றல் எட்ட முடியாத கனரக உற்பத்தி, நீண்டதொலைவு லாரி பயணம், சரக்கு கப்பல்கள் மற்றும் விமானத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் இதைப் பயன்படுத்த முயற்சிக்கப் படுகிறது. மொத்த தேவையில் இது 15 சதவீத அளவாக இருக்கும்.
விமான எரிபொருளைக் காட்டிலும் பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி அடர்வு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதால், விமானத்திற்கு, கார்பன் உற்பத்தி அல்லாத தூய்மையான தொழில்நுட்பமாக இது இருக்கும். ஆனால் ஐரோப்பாவின் பிரபலமான விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனம், கணிசமான பிரச்சினைகளை முறியடிக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. விமானத்தில் பத்திரமாக ஹைட்ரஜனை சேமிப்பது, விமான நிலையங்களில் ஹைட்ரஜன் கட்டமைப்புகள் இல்லாதது, இதற்கான விலை உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
``கார்பன் உற்பத்தியில்லாத விமான சேவையை சாத்தியமானதாக ஆக்கிட, குறைந்த செலவில் பசுமை ஹைட்ரஜன் தயாரித்தல் மற்றும் தொழில் துறைகளுக்கு இடையிலான பங்களிப்புகள் கட்டாய தேவையாக இருக்கும்'' என்று ஏர்பஸ் நிறுவனத்திற்கான ஜீரோ எமிசன் பிரிவு துணைத் தலைவர் கிளென் ல்லெவலின் கூறியுள்ளார். இது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது. 2035 ஆம் ஆண்டு வாக்கில் ஹைட்ரஜனில் இயங்கும் விமானங்கள் பறக்கத் தொடங்கும் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
சாலைப் போக்குவரத்து வாகனங்கள் சிலவற்றுக்கும் மாற்று எரிபொருளாக பசுமை ஹைட்ரஜன் இருக்கும் என கண்டறியப் பட்டுள்ளது. பிரிட்டனில் ஹைட்ரஜன் ரயில்கள், சரக்கு லாரிகள், இரண்டடுக்கு பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. கலிபோர்னியாவில் மின்சார மற்றும் ஹைட்ரஜன் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், குறைந்த கார்பன் எரிபொருள் தரநிலை 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. டீசல் சரக்கு லாரிகள், பேருந்துகள், ரயில்கள், விமானங்களுக்குப் பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தை துரிதமாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக, அக்டோபரில் கனரக வாகன மற்றும் எரிசக்தித் துறை அதிகாரிகள் இணைந்து மேற்கத்திய நாடுகள் ஹைட்ரஜன் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
``இந்த கனரக, மின்யமாக்குவது சிரமமாக உள்ள துறைகளில் கார்பன் உற்பத்தி இல்லாத கட்டமைப்புகளை, ஹைட்ரஜன் எரிசக்தி செல்கள் உருவாக்கும்'' என்று கூட்டமைப்பின் செயல் இயக்குநர் ரோக்சனா பெகெமோஹம்மடி கூறுகிறார். ``இந்த உண்மையை மறுக்க முடியாது. இந்தப் புரட்சியை விரைவுபடுத்துவதில் தழில் துறையும், அரசும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது'' என்று அவர் கூறியுள்ளார்.
தனி வீடுகளின் மின்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சிறிய அளவிலான ஹைட்ரஜன் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்தவும் திட்டங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து சேமித்து வைத்துக் கொள்வதற்கு சூரியசக்தியைப் பயன்படுத்தக் கூடிய லாவோ என்ற திட்டத்தை வீடுகளுக்காக உருவாக்கியுள்ளனர். உலக அளவிலான ஜி.எச்.டி. என்ற பொறியியல் நிறுவனத்துடன் சேர்ந்து நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம் இதை உருவாக்கியுள்ளது. தேவையான போது இந்த ஹைட்ரஜன் மின்சாரமாக மாற்றப்படும்.
ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுக்கு, பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு ``உண்மையிலேயே நல்ல செய்தியாக'' இருக்கும் என்று ராக்கி மவுன்டன் இன்ஸ்டிடியூட் நிபுணர் பிளாங்க் கூறுகிறார். ``பருவநிலை மாற்ற பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பது போல தெரிவதால், இதற்காக இரவிலும் கண்விழித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, சரியான தீர்வைத் தருவதாக பசுமை ஹைட்ரஜன் இருக்கும்'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
பிற செய்திகள்:
- ஜியோ சிம், அம்பானி, அதானி கம்பெனி பொருள்களை புறக்கணிப்போம்: விவசாயிகள் போராட்ட குழு
- புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல்: அதீத செலவு, வசதிகள் - முக்கிய தகவல்கள்
- விவசாயிகள் போராட்டம்: பிரிட்டன் பிரதமரின் குழம்பிய பதிலால் அதிர்ச்சியில் எம்.பிக்கள்
- சித்ரா பகிர்ந்த கடைசி படம்: அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள், ரசிகர்கள்
- பசுவை கொன்றால் 5 ஆண்டுகள் சிறை: கர்நாடகா நிறைவேற்றிய புதிய சட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












