இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடம்: சட்ட தடையுடன் தொடங்கும் அடிக்கல் விழா

பட மூலாதாரம், OM BIRLA OFFICIAL TWITER PAGE
இந்திய நாடாளுமன்றத்துக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா டெல்லியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
பிரதமர் மோதியின் முழக்கமான ஆத்மநிர்பார் பாரத் எனும் சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின்கீழ் இந்த புதிய கட்டுமானம் உருப்பெறவுள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் 2022ஆம் ஆண்டில் கொண்டாடப்படும்போது அப்போதைய கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் என்று மோதி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நவீன கலைநயம், எரிசக்தி சேமிப்பு, சமரசத்துக்கு இடமில்லாத பாதுகாப்பு வசதிகள் என முக்கோண வடிவில் இந்த கட்டுமானம், தற்போதைய நாடாளுமன்றத்துக்கு பக்கத்தில் உள்ள இடத்தில் எழுப்பப்படவிருக்கிறது. அளவில் இது தற்போதைய மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தின் வயது 93 ஆண்டுகள். அந்த வகையில், புதிய கட்டடம் 130 கோடி இந்தியர்களின் பெருமைமிகு அடையாளமாக திகழும் என்று இந்த அடிக்கல் நாட்டு விழா குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
புதிய கட்டடத்தில் மக்களவை அரங்கில் 888 இருக்கைகளும் மாநிலங்களவை அரங்கில் 384 இருக்கைகளும் இருக்கும். தற்போதைய நிலையில் மக்களவையின் இருக்கைகள் எண்ணிக்கை 543, மாநிலங்களவை இருக்கை இடங்கள் 245 ஆகும். இதேபோல, இரு அவை கூட்டத்தொடரின்போது மக்களவையில் 1,224 பேர்வரை அமர்ந்து அவை நிகழ்வில் பங்கெடுக்க முடியும். இந்த புதிய கட்டடத்தில் மைய மண்டபமும் இருக்கும்.
சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் அளவில் அமையவிருக்கும் புதிய கட்டடத்தின் கட்டுமானச்செலவு, ரூ. 971 கோடி ரூபாய் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மின்துறை அமைச்சகம் அமைந்துள்ள ஷ்ரம் சக்தி பவன் பகுதியில் புதிய கட்டடம் எழுப்பப்படவிருக்கிறது. அதில் எம்.பி.க்களுக்கான ஓய்வறைகள் இருக்கும். நாடாளுமன்ற புதிய கட்டடத்தையும் இந்த கட்டடத்தையும் சுரங்கப்பாதை இணைக்கும். இது தவிர அனைத்து அரசுத்துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு என பிரத்யேக அலுவலகங்கள், செயலக அறைகள் புதிய கட்டடத்தில் இடம்பெறும்.
இந்த கட்டுமானத்தின் வடிவமைப்புப் பணி ஹெச்சிபி டிசைன், பிளானிங், மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் டாடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்ற மறு நிர்மாண கட்டுமான திட்டத்தின்படி நாடாளுமன்ற கட்டடங்கள் மட்டுமின்றி, சென்டரல் செக்ரட்டேரியட் எனப்படும் மத்திய அரசு பொது கட்டடங்களும் மறுநிர்மாணம் செய்யப்படவிருக்கின்றன.
புதிய நாடாளுமன்றம் செயல்பாட்டுக்கு வந்ததும் பழைய நாடாளுமன்ற கட்டடம், நாட்டின் பெருமை மிகு தொல்பொருள் சொத்தாக பராமரிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
சட்டத்தடையுடன் தொடங்கும் அடிக்கல் நாட்டு விழா
இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் மற்றும் அதையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தை தொடங்க இந்திய அரசு காட்டி வரும் வேகத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டலாம், ஆனால் கட்டுமானத்தை மறுஉத்தரவு வரும்வரை தொடங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்த கட்டுமான திட்ட வடிவமைப்பு, அமலாக்கத்தில் விதி மீறல்கள் இருப்பதாக 10 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.
அதில் முக்கியமானது வழக்கறிஞர் ராஜீவ் சூரி தாக்கல் செய்த மனு. அதில் அவர் கட்டுமானத்துக்கான நிலம் பயன்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் விதிமீறல் இருப்பதாக முறையிட்டிருக்கிறார்.
குறிப்பிட்ட அந்த பகுதி, புதிய கட்டுமானம் எழுப்புவதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என வேறு சில மனுதாரர்கள் தங்களுடைய மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்ட நடைமுறைகள், சுற்றுச்சூழல் அனுமதி போன்றவை முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறப்பட்டுளளது.
மற்றொரு மனுதாரரும் வழக்கறிஞருமான ஷியாம் திவான், "மக்கள் வரிப்பணத்தில் மிகப்பெரிய சொத்துகளை அழித்து விட்டு புதிய கட்டுமானம் எழுப்ப எத்தகைய ஆக்கப்பூர்வ ஆய்வுகள் நடத்தி முடிவு எடுக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் மத்திய அரசிடம் இல்லை," என்று கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம் தொடர்பாக முடிவெடுக்கப்பட வேண்டிய ஒவ்வொரு கட்டடத்திலும் முறையாக ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், அந்த கட்டுமானத்தை எழுப்ப ஒப்பந்தப்பள்ளிகள் வரவேற்றபோது அதில் பங்கெடுக்க நியாயமாக போட்டி நடத்தப்பட்டிருக்க வேண்டும், நிபுணத்துவம் வாய்ந்த குழுவால் அந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனறு வழக்கறிஞர் ஷியாம் திவான் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்திய அரசு விளக்கம் என்ன?
இந்த வழக்கில் இந்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் 1927ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. 100 ஆண்டுகளை எட்டவுள்ளது அந்த பழமையான கட்டடம். அது நிலநடுக்க பாதுகாப்பை கொண்டிருக்கவில்லை. தீ விபத்து காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வது கடினம். அதே சமயம், புதிய கட்டடம் எழுப்பப்படும்போது பழைய கட்டடத்தின் ஒரு செங்கல் கூட பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்," என்று உறுதியளித்தார்.
மேலும், "புதிய மறுநிர்மாண திட்டத்தின் மூலம் ஆண்டுச் செலவினத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு சேமிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் எதிர்காலத்தில் பல்வேறு அமைச்சகங்கள் உள்ளிட்ட துறைகள் 10 புதிய கட்டடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு மெட்ரோ ரயில் வசதி செய்யப்படும்," என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் அனைத்து மத்திய அரசுத்துறைகள், ஒரே இடத்தில் இருப்பதன் மூலம் பல தாமதங்கள் தவிர்க்கப்படும் என்றும் அவற்றை ஒரே குடையின்கீழ் இருப்பது போல அமைப்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்றும் துஷார் மேத்தா விளக்கினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












