நாசாவின் புதிய முயற்சி: நிலவில் பாறைகளை சேகரிக்க பணம் தரும் திட்டம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜஸ்டின் ஹார்பர்
- பதவி, பிபிசி நிருபர் - தொழில் விவகாரங்கள்
நிலவில் இருந்து சிறிய அளவிலான பாறைகளை சேகரிக்க கொலராடோவை சேர்ந்த நிறுவனத்திற்கு ஒரு அமெரிக்க டாலரை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செலுத்தவிருக்கிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனத்துக்காக, சந்திரனில் இருந்து மாதிரிகளைச் சேமிக்கும் ஒப்பந்தம், கடந்த 3ஆம் தேதி லூனார் அவுட்போஸ்ட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
சந்திரனில் இருக்கும் வளங்களைக் குறைந்த விலை சேகரிக்கும் திட்டத்தின் கீழ் நாசா வழங்கியுள்ள நான்கு ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாஸ்டன் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ், டோக்கியோவைச் சேர்ந்த ஐஸ்பேஸ் மற்றும் அதன் ஐரோப்பிய துணை நிறுவனம் தான் ஏலத்தில் வெற்றி பெற்ற மற்ற மூன்று நிறுவனங்கள்.
50 கிராம் முதல் 500 கிராம் வரை எடையுள்ள சந்திரனின் தளத்தில் இருக்கும் ரெகோலித் எனப்படும் பாறைகள் அல்லது சந்திரனில் இருக்கும் மண்ணைச் சேகரிக்கும் நிறுவனங்களின் தனிப்பட்ட சேகரிப்புகளுக்கு, நாசா பணம் கொடுக்கும்.
"இந்த நிறுவனங்களின் சார்பில் விண்வெளி ஆய்வாளர்கள் சந்திரனில் மாதிரிகளைச் சேகரிப்பார்கள். மாதிரிகளையும், மாதிரிகள் சேகரிக்கப்பட்ட காணொளி ஆதாரங்கள் மற்றும் அவர்கள் திரட்டிய பிற தரவுகளை எங்களுக்கு வழங்குவார்கள்" என்று நாசாவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில் இந்த திட்டம் நடைபெற உள்ளது, ஆனால் நாங்கள் பல்வேறு லேண்டர் நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறோம், இதன் விளைவாக, இந்த திட்டம் விரைவில் நடக்கலாம் "என லூனார் அவுட்போஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜஸ்டின் சைரஸ் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
சந்திரனின் தென் துருவத்திலிருந்து பாறைகளை சேகரிப்பதற்கு, கொலராடோவைச் சேர்ந்த லூனார் அவுட்போஸ்ட் என்கிற ரோபாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஒரே ஒரு அமெரிக்க டாலர் பணம் வழங்கப்படும்.
இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பணம் முக்கியமல்ல. இந்த திட்டத்தின் மூலம், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து அதன் வளங்களை பிரித்தெடுப்பதற்கு நிறுவனங்களை அனுமதிக்கப்படுவது போன்ற பல அறிவியல் நன்மைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இது விண்வெளி ஆய்வைப் பற்றி சமூகம் நினைக்கும் விதத்தில் ஒரு பெரிய மாற்றம்" என்கிறார் சைரஸ்.
புளூ ஆரிஜின் உட்பட, சந்திரனுக்கு பறக்கும் திட்டத்தில் வேலை பார்த்து வரும் பல நிறுவனங்களுடன், லூனார் அவுட்போஸ்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அமைத்த விண்வெளி ஆய்வு நிறுவனம் தான் ப்ளூ ஆரிஜின்.
ஏலத்தில் வென்ற மற்ற நிறுவனங்களில், ஜப்பானின் ஐஸ்பேஸ் நிறுவனமும் ஒன்று. சந்திரனின் வடகிழக்கு பகுதிக்கு அருகில் இருந்து, 2022-ம் ஆண்டில் சந்திரனின் பாறைகளைக் கொண்டு வருவதாகக் கூறி இருக்கும் வேலைக்கு, ஐஸ்பேஸ் நிறுவனத்துக்கு 5,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
இது பணத்தைப் பற்றியது அல்ல
"நாசா ஒரு முக்கியமான முன்னுதாரணத்தை அமைக்கிறது" என விண்வெளி நிபுணர் சினியட் ஓ' சல்லிவன் கூறினார்.
"இந்த கண்டுபிடிப்புகள் நிதி மதிப்புடையது அல்ல, ஆனால் பூமியின் எல்லையைத் தாண்டி வெளியே இருக்கும் விஷயங்களுக்கு வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் என ஒரு சந்தையை உருவாக்குவதற்கான வணிக மற்றும் சட்ட விதிமுறைகளை உருவாக்குவது" என்கிறர் ஓ'சல்லிவன்.
மூன்று நிறுவனங்களுக்கான பணத்தை, மூன்று படி நிலைகளாகச் செலுத்தப்படும். ஒப்பந்தம் கொடுக்கும் நேரத்தில் மொத்த நிதியில் 10% வழங்கப்படும், நிறுவனங்கள் தங்களின் சேகரிப்பு விண்கலத்தை ஏவும்போது இன்னொரு 10% பணம் வழங்கும். மீதமுள்ள 80% பணத்தை, நாசா, நிறுவனங்கள் சேகரித்த பொருட்களை சரிபார்த்த பின் கொடுக்கும்.
"ஆம், எங்களுக்கான ஒரு டாலர் பணம், மூன்று சிறிய முக்கிய தவணைகளில் 0.1 டாலர், 0.1 டாலர், 0.8 டாலர் என வரும்" என்கிறார் லூனார் அவுட்போஸ்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சைரஸ்.
சீனா சொந்தமாக, சந்திரனின் மாதிரிகளைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருவதால், டிசம்பர் 3ஆம் தேதி வியாழக்கிழமை நாசா விண்வெளி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவின் சாங்கி -5 (Chang'e-5) சந்திர விண்கலன் தற்போது சந்திரனில் இருந்து சேகரித்த மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பி வந்து கொண்டு இருக்கிறது.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி ஆலோசனை: மோதியின் இந்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா
- ஆஸ்திரேலியா–இந்தியா டி20: முதல் போட்டியில் வெற்றியை பதித்த இந்திய அணி
- விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு
- "இலங்கை இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா?"
- நடராஜனின் மறுபக்கம்: வறுமையின் பிடியில் "அந்த 15 ஆண்டுகள்"
- இந்திய ஆசிரியருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு: இப்படி கூட செய்வாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












