அசாதுதின் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இஸ்லாமியர்களுக்கு வரமா சாபமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அஹமத்,
- பதவி, பிபிசி செய்தியாளர்
தற்சமயம் இந்திய முஸ்லிம்களுக்கான தேசிய அளவிலான தலைவர் ஒருவர் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இம்தியாஸ் ஜலீல் கூறும் ஒரே பதில், ஏஐஎம்ஐஎம்- இன் தலைவர் தான் இந்திய முஸ்லிம்களுக்கான ஒரே தலைவர் என்பது தான்.
அகில இந்திய மஜ்லிஸ்-இ இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் சார்பாக மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் ஜலீல். தனது கருத்து குறித்து சந்தேகம் எழுப்புவோருக்கு அவர் விடுக்கும் பதில் கேள்வி, " வேறு ஒரு தலைவர் பெயரைக் கூற முடியுமா?" என்பது தான்.
ஒவைசியைத் தவிர, மக்களால் பெரிதும் விரும்பப்படும் வேறு ஒரு இஸ்லாமியத் தலைவரைக் கை காட்ட முடியுமா என்று அவர் சவால் விடுகிறார். நாடாளுமன்றத்தில் வலிமையாக, கடுமையாக, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் வேறு ஒரு தலைவரின் பெயரை குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்று அவர் கேட்கிறார். வேறு எந்த மாநிலத்திலோ நகரிலோ அப்படி ஒரு பெயரைக் குறிப்பிட்டுச் சொல்ல வாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாக இவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், REUTERS/MUHAMMAD HAMED
தனது தலைவர் குறித்து இம்தியாஸ் ஜலீல் கொண்டிருக்கும் அதே கருத்தைத் தான் தனது கட்சி குறித்தும் அவர் கொண்டுள்ளார்.
பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து இடங்களை வென்ற பிறகு, ஏஐஎம்ஐஎம் முஸ்லிம்களின் தேசிய அளவிலான கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும், அதன் தலைவர் அசாதுதீன் ஒவைசி சமூகத்தின் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏஐஎம்ஐஎம் 1927 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த கட்சி தெலுங்கானாவில் மட்டுமே இருந்தது. 1984 முதல், இந்தக் கட்சி ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
2014 தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஏழு இடங்களை வென்றது ஏஐஎம்ஐஎம், 2014 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களை வென்றதையடுத்து, சிறிய நகர்ப்புறத்தில் இருந்து மாநில அளவிலான கட்சியாக மாறியது.
பிகாரில் வெற்றி பெற்ற பிறகு, கட்சி உற்சாகமும் உத்வேகமும் பெற்றுள்ளது. தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவுக்குப் பிறகு, அக்கட்சி இப்போது பிகாரில் தனது தடத்தைப் பதியத் துவங்கியுள்ளது. அதன் தலைமையகமான ஹைதராபாத்திற்கு வெளியே முதல் முறையாக அதிகபட்ச சட்டசபை இடங்களை வென்றுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் தனது ஆட்டத்தைத் துவக்கவும் கட்சி இப்போது முடிவு செய்துள்ளது.பிகாரை விட அதிக முஸ்லிம் மக்களைக் கொண்ட மாநிலம் மேற்கு வங்கம்.
தமிழக சட்டசபை தேர்தலிலும் ஓவைசியின் கட்சி போட்டியிடப்போவதாக சில ஊடக செய்திகள் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.
2017 ல் உத்தரபிரதேசத்தில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்திருந்த போதிலும், 2022 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி சிந்தித்து வருகிறது.
கட்சியின் தேர்தல் வெற்றிக்கு பிறகு ஒவைசி மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அதிகரித்து வருவதாக இம்தியாஸ் ஜலீல் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"ஓவைசி கொஞ்சம் கடுமையாகப் பேசக் கூடியவர். ஆனால் அவர் முற்றிலும் உண்மையே பேசக் கூடியவர் என்பதை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அவர் பேசுவது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவர் பேசுவது குற்றமாகத் தெரியலாம். ஆனால், அவர் சரியானதையே பேசுவார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்," என்று இம்தியாஸ் ஜலீல் கூறுகிறார்.
இஸ்லாமியர்களுக்கு இக்கட்சி உதவுகிறதா உபத்திரவம் செய்கிறதா?
தற்சமயம் எழுந்துவரும் விவாதம் என்னவென்றால், இஸ்லாமிய சமூகத்தினருக்கு ஒரு விடிவெள்ளியாக இந்தக் கட்சி செயல்படுகிறதா அல்லது சமூகத்தின் பின்னடைவுக்கு இது காரணமாகி விடுமா என்பது தான்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜைத் அன்சார் கட்சியின் தீவிர ஆதரவாளர்களில் இதுகுறித்து பேசும்போது, "முஸ்லிம்களை நாட்டின் அரசியல் மற்றும் அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் அனாதைகள் போல் உணர்கிறோம். எங்களுக்காகப் பேச யாரும் இல்லை. எங்கள் வாக்குகளைப் பெற்று வரும் கட்சிகளும் செயலற்றுப் போயுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஓவைசி எங்களுக்கு ஒரு குரல் கொடுத்தார், எங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார், இது எங்களுக்கு பலத்தை அளிக்கிறது, " என்று கூறுகிறார்.
எம்.பி. இம்தியாஸ் ஜலீல் தனது கட்சி முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியன்று என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறார். தேர்தலில், குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல்களில் தனது கட்சி பல தலித்துகள் மற்றும் இந்துக்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று அவர் கூறுகிறார்.
ஆனால் அரசியல் அமைப்பில் சுருங்கி வரும் முஸ்லிம்களின் இடத்தைத் தனது கட்சி நிரப்புகிறது என்பதையும் வலியுறுத்துகிறார்.
"ஏஐஎம்ஐஎம் என்பது முஸ்லிம்களுக்கான கட்சி என்று நாங்கள் எங்கும் எப்போதும் சொல்லவில்லை. முஸ்லிம்களுக்கான பிரச்னைகள் அதிகம் என்பது உண்மை. இவை குறித்து யாரும் குரல் கொடுக்காத நிலையில், நாங்கள் எழுப்புகிறோம். மற்ற கட்சிகள் முஸ்லிம்களின் பிரச்னையை எழுப்பியிருந்தால், எங்கள் கட்சிக்கான தேவையே எழுந்திருக்காது," என்கிறார்.
முஸ்லிம் இளைஞர்களிடையே ஏஐஎம்ஐஎம் கணிசமான ஆதரவைப் பெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.
மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளர் பதவியில் பணிபுரியும் தீபா அரிஸ், தனது வாடகை வீட்டை மாற்ற விரும்புகிறார். ஆனால், ஒரு இஸ்லாமியராக இருப்பதால், வாடகைக்கு ஒரு வீடு கிடைப்பது சிக்கலாக உள்ளது. அவரது நண்பரே ஏஐஎம்ஐஎம்-ன் ஆதரவாளராக இருந்தாலும், ஓவைசி, ஜாகிர் நாயக் போன்ற முஸ்லிம் தலைவர்களை அவர் விரும்பவில்லை.
"ஒவைசியின் வளர்ந்து வரும் புகழ் , இத்தனை நாளாக, எனக்குப் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தில் எனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் நாங்கள் பலமுறை விவாதித்துள்ளோம். நான் ஒரு மதச்சார்பற்ற முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் மதத்தின் பெயரால் பாகுபாடு ஏற்படும்போது, வாடகைக்கு ஒரு வீடு கூடக் கிடைக்காத போது, நான் இதுவரை நினைத்தது தவறு என்றும் என் தோழர்கள் நிலைப்பாடு தான் சரி என்றும் தோன்றுகிறது," என்று தீபா கூறுகிறார்.
தீபாவுக்கு இன்னும் வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை என்ற கசப்பான அனுபவம் இருந்தபோதிலும், அரசியல் ரீதியாக ஒவைசியின் கட்சியை ஆதரிக்கப் போவதில்லை என்று கூறும் அவர், அது இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிர்காலத்தில் கேடாக விளையும் என்று காரணம் கூறுகிறார்.

பட மூலாதாரம், Nur Photo
ஃபஹத் அகமது என்பவரும் மும்பைவாசி தான். அவர் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் மாணவர். பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்வம் காரணமாக அவர் தேர்தலின் போது பிகாரில் இருந்தார்.
AIMIM க்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ முன்வைக்கப்படும் வாதங்களை ஏற்கவில்லை என்று அவர் கூறுகிறார். மதச்சார்பற்ற கட்சிகள் இஸ்லாமியர்களின் பிரச்னைகளை எழுப்பவில்லை, ஒவைசி இதுபோன்ற பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கிறார் என்ற உணர்வு முஸ்லிம் இளைஞர்களிடையே இருப்பதாக அவர் கூறுகிறார்.
"மதச்சார்பற்ற கட்சிகள் ஓவைசியை ஒரு பன்சிங்க் பேக்(punching bag) போலப் பயன்படுத்தி வருகின்றன. அவரை நீங்கள் குத்தினால், அது உங்களுக்கே திரும்பி வரும்," என்று அவர் எச்சரிக்கிறார்.
ஒவைசிகட்சியின் வளர்ச்சி இஸ்லாமியர்களின் உரிமையில் தான் உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகள் இளம், வளர்ந்து வரும் முஸ்லிம் தலைவர்களுக்கு இடம் கொடுத்தால், ஒவைசியின் முக்கியத்துவம் தானாகவே சரியும் என்று ஃபஹத் அஹமது கருதுகிறார்.
ஏஐஎம்ஐஎம் ஒரு மதவாதக் கட்சியா?
பாபர் மசூதி தீர்ப்பு, 'லவ் ஜிஹாத்' பிரச்னை அல்லது குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி என, அசாதுதீன் ஒவைசி பெரும்பாலும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார் என்பது உண்மைதான்.
அவரது குரல் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கிறது, மற்ற தலைவர்களை விடச் சிறந்த வாதங்களை வெளிப்படையாகவும் திறமையாகவும் அவர் முன்வைக்கிறார்.
ஆனால் ஒருபுறம் சாதாரண முஸ்லிம்களிடையே கட்சியின் புகழ் அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை, மறுபுறம் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினருக்குக் கவலையும் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், NURPhoto
இந்தியன் முஸ்லிம் முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்கான அமைப்பின் உறுப்பினரான ஷீபா அஸ்லம் ஃபஹ்மி, "ஏஐஎம்ஐஎம்-க்கு ஆதரவு அதிகரித்து வருவது முற்றிலும் ஆபத்தானது. இது மிகவும் கவலைக்குரியது. 1947 இல் பிரிவினையின் போதிருந்த தாக்கத்தைச் சந்திக்காத பகுதிகள் கூட இன்று அதன் பாதிப்பைச் சந்திப்பது யாரும் எதிர்பாராதது, " என்று கூறுகிறார்.
இந்திய முஸ்லிம்களுக்கு மதவாதத்தை விட மதச்சார்பற்ற அமைப்பு தான் தேவை என்றும் இந்த அமைப்பில் தான், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் ஷீபா கூறுகிறார்.
" பாஜக தங்களுக்கு விருப்பமான எதிர்க்கட்சி தான் தங்களுக்குத் தேவை என்று நினைக்கிறது. அதனால் அவர்கள் தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஒவைசியின் கட்சியை எதிர்க்கட்சியாக அமர்த்த விரும்புகிறது." என்று ஷீபா கூறுகிறார்.
நாட்டின் பிரிவினைக்கு முன்னர் இருந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டு வருகிறது என்று ஷீபா எச்சரிக்கிறார். இதற்கு உண்மையான பொறுப்பு பாஜக என்றும் அவர் கூறுகிறார். பாஜக, நாட்டின் ஒருமைப்பாட்டை விட இந்து தேசம் உருவாக்குவதை அதிகம் விரும்புகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.
இருப்பினும், அரசியல் ஆய்வாளரும் ஸ்வராஜ் இந்தியாவின் தலைவருமான யோகேந்திர யாதவ், ஒவைசியின் வளர்ந்து வரும் செல்வாக்கை மதச்சார்பற்ற அரசியலின் தோல்வி என்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் தோல்வி என்றும் கருதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
தனது ஒரு அறிக்கையில், "பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்கள் ஒருபோதும் முஸ்லிம் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் அரசியல் பிரதிநிதித்துவத்திற்காக முஸ்லிம் தலைவர்களை நாடவில்லை, ஏனென்றால் பெரும்பான்மையைக் கவனித்துக் கொள்ளக்கூடிய கட்சி தங்கள் நலன்களுக்காகவும் பணி புரியும் என்று அவர்கள் நம்பினர்." என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த முறை பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிகரமான வேட்பாளர்களில் ஒருவரான ஷகீல் அகமது கான், ஒவைசியின் எழுச்சியை மறைந்த பிகார் தலைவர் சையத் ஷாஹாபுதீனுடன் ஒப்பிடுகிறார், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினரின் பிரச்னைகளைக் குறித்துக் குரல் கொடுத்தவர் அவர். அச்சமூகத்தினரின் தேசியத் தலைவராக உருவெடுக்கவும் அவர் முயற்சி செய்தார்.
ஏஐஎம்ஐஎம்-ன் பெருகி வரும் ஆதரவுக்குக் காரணம்
ஏஐஎம்ஐஎம் முஸ்லிம்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் கட்சி அன்று. கேரள முஸ்லிம் லீக் அல்லது அசாமின் ஏ.யு.யு.டி.எஃப் என்று, இதற்கு முன்பே, இந்த அடையாளத்துடன் கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன, ஆனால் இரு கட்சிகளும் தங்கள் பிராந்திய அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இப்போது ஹைதராபாத்தைத் தாண்டி, மற்ற மாநிலங்களில் அரசியல் ஊடுருவலை உருவாக்கும் வகையில் ஏஐஎம்ஐஎம் வேறுபட்டுள்ளது. ஆனால் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கான ஆதரவு அதிகரித்து வரும் நிலையிலும், மற்ற கட்சியினர் இது குறித்து ஒரு கவலை கொள்ளாத நிலை தான் நிலவுகிறது.
பிகாரில் ஏஐஎம்ஐஎம்-இன் வெற்றியை 'சோடாவில் உருவாகும் குமிழி' என்று ஷகீல் அகமது கான் விவரிக்கிறார், அது எவ்வளவு வேகமாக உயர்கிறது, அதே வேகத்தில் முடிகிறது என்று மதிப்பிடுகிறார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் இதை பாரதிய ஜனதா கட்சியின் ’பி-அணி’ என்றே பார்க்கிறார், கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை முஸ்லிம்களின் மதவாதக் கட்சியாகக் கருதுகின்றன.
இருப்பினும், பாஜகவின் பி-அணி என்ற விமர்சனங்களை அசாதுதீன் ஒவைசி எப்போதும் நிராகரித்துள்ளார். அவரது கட்சி வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாகவே செயல்படுகிறது என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. ஆனால் ஏஐஎம்ஐஎம்-ன் வளர்ச்சி குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் அவரவர் கருத்துகளும் மதிப்பீடுகளும் உள்ளன.
காங்கிரஸ் தலைவர் ஷகீல் அஹ்மத் கான் பார்வையில், ஏஐஎம்ஐஎம் முன்னோக்கி செல்ல மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன, "முதலாவதாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், ஒவைசி அவற்றை எதிர்த்து எழுப்பிய குரலும் அவரது வளர்ச்சிக்கு உதவியது. காரணம், அவரது குரல் மிக வலிமையானது என்று இளைஞர்கள் உணர்ந்தனர்.
ஆனால் இந்த வகையான அரசியலின் சிரமங்கள் என்ன, ஜனநாயகத்தில் இது என்ன தீங்கு ஏற்படக்கூடும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை."
"இரண்டாவது காரணம், கட்சி வென்ற இடங்களில், மக்கள் தொகையில் 73-74% முஸ்லிம்கள். எனவே இந்த கட்சி அப்பகுதிகளில் ஆதரவு பெறுவது அந்தப் பகுதியின் இஸ்லாமியத் தலைமையின் தோல்வி"
"மூன்றாவது காரணம், மதம் சார்ந்த கருத்தியல் உருவாகும் போது, முஸ்லிம் சமுதாய மக்கள் அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை."
ஷகீல் அகமது கான், ஏஐஎம்ஐஎம்-ன் மதவாத அரசியலை எதிர்கொண்டதால் தான் வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"ஒவைசியைப் போலவே, நானும் உருது பேச முடியும், கவிதை கூற முடியும். ஆனால் இது இங்குள்ள முஸ்லிம்களின் பிரச்னைகளை தீர்க்க முடியாது? அவர்களின் ஆத்திரமூட்டும் உரைகள் முஸ்லிம் சமுதாயத்திற்கு பயனளிக்கப் போவதில்லை என்று நான் சொல்கிறேன்." முஸ்லிம் சமூகம் அல்லது எந்த சமுதாயமும் ஒரு மதச்சார்பற்ற அரசியலில் மட்டுமே பயனடைய முடியும். நான் இந்த வழியைப் பின்பற்றினேன், மக்கள் எங்களை ஆதரித்தனர். " என்று அவர் கூறுகிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசியலை ஒவைசி முன்னெடுக்கிறார் என்பது ஷீபா ஃபஹ்மியின் கருத்து. "இந்த நாட்டில் யாருக்கும் சமூக நீதி கிடைப்பதில்லை. முஸ்லிம்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. தலித்துகள் மற்றும் ஏழைகளுக்கும் சமூக நீதி கிடைப்பதில்லை. ஆனால் உங்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கவில்லை என்று முஸ்லிம் சமூகத்திற்குக் கற்பிக்கப்படுகிறது. அதனால் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. இது இயல்பானது." என்று அவர் கூறுகிறார்.
காங்கிரஸ் இரட்டைக் கொள்கையை பின்பற்றுவதாகவும், முஸ்லிம்களைக் காட்டிக் கொடுப்பதாகவும் இம்தியாஸ் ஜலீல் விமரிசிக்கிறார்.
அவர் "காங்கிரஸ், என்.சி.பி போன்ற கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களைப் பயன்படுத்துகின்றன, பின்னர் அவர்களை மறந்துவிடுகின்றன. அவர்கள் தங்கள் இழப்புகளைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் முஸ்லிம்கள் தான் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்." என்று கூறுகிறார்.
"சமூக ஊடகங்களின் மூலம், இன்று ஒரு சிறு குழந்தை கூட என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் வெற்றி பெறுகிறார்கள், பின்னர் அவர்கள் பாஜகவின் காலில் தஞ்சமடைகிறார்கள். "
"நிதிஷ் குமாரால் தான் பிகாரில் மோடியைத் தோற்கடிக்க முடியும் என்று இஸ்லாமியர்கள் நம்பியதால் தான், 2015 பிகார் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிதீஷ் குமாருடன் நின்றனர். ஆனால் அவர் முஸ்லிம் வாக்குகளை வென்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மோடியுடன் சேர்ந்தார். மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா முஸ்லிம்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய கட்சி. ஆனால் இப்போது காங்கிரசும் என்சிபியும் அவர்களுடன் சேர்ந்து அரசமைத்துள்ளன. இது எவ்வளவு காலம் நீடிக்கும்? குறைந்தபட்சம் எங்கள் கட்சி பாஜகவுடன் கைகோர்க்காது என்பது உறுதி என்று மக்களுக்குத் தெரியும். " என்கிறார் இம்தியாஸ் ஜலீல்.
ஆனால், ஏஐஎம்ஐஎம் மீது வேண்டுமென்றே பாஜகவுக்கு நன்மை அளிப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஒவைசியின் கட்சி பாஜகவின் பி-அணி என்று, தான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருவதாக அகிலேஷ் பிரதாப் சிங் கூறுகிறார். "மோடி வந்ததிலிருந்து, அவர் ஒரு வகையில் AIMIM-ஐ ஊக்குவிக்கிறார். மகாராஷ்டிரா தேர்தல்களிலோ, டெல்லியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலோ அல்லது அதற்கு முந்தைய பிகார் சட்டமன்றத் தேர்தல்களிலோ அல்லது உத்தரப்பிரதேசத்திலோ இது தான் நடந்தது," என்று அவர் கூறுகிறார்.
"சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து எளிதில் வெல்வதே அவர்களின் நோக்கம். மோடி வந்த பிறகு, இரு தரப்பிலும் மதவெறி அரசியல் அதிகரித்துள்ளது என்பது உண்மை." என்கிறார்.
ஒவைசியின் கட்சி மீது பாஜகவின் பி-அணி மற்றும் வாக்குப் பிரிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு யோகேந்திர யாதவ் உடன்படவில்லை. இருப்பினும், இந்தக் கட்சியின் வெற்றி மதவாத அரசியலை ஊக்குவிக்கும் என்று அவர் கூறுகிறார்.
இந்துத்துவா அரசியல் முஸ்லிம்களின் பிரத்யேக கட்சியை ஊக்குவித்துள்ளது என்றும் இந்தப் போக்கு இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும் அவர் கருதுகிறார்.
அவர், "இதைச் சமாளிக்க ஒரே வழி மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம்கள் இந்துக்கள் மற்றும் அனைத்து மதங்களின் சாதாரண மக்களின் நம்பிக்கையையும் வெல்ல வேண்டும். இப்போது இந்துக்களும் அவர்களை நம்பவில்லை, முஸ்லிம்களும் நம்பவில்லை" என்று கூறுகிறார்.
பி ஜே பி, ஏஐஎம்ஐஎம் இருகட்சியும் ஒருவருக்கொருவர் குழி தோண்டிக்கொள்கின்றனவா?
தாரிக் அன்வர் பிகாரைச் சேர்ந்த ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார், இவர் பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் இருந்துள்ளார். பாஜக மற்றும் ஏ ஐ எம் ஐ எம் இரண்டும் வகுப்புவாத அரசியல் கட்சிகள் என்றும் அவை இரண்டும் எதிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் அவை நாட்டின் ஒற்றுமையை உடைக்கும் சக்திகள் என்று அவர் கூறுகிறார்.
"ஏஐஎம்ஐஎம் அல்லது ஓவைசி ஐயைப் பொருத்தவரை, எந்தவொரு வகுப்புவாதமும் நாட்டிற்கு எதிரானது என்று நான் கூறுவேன். அது இந்து மதவாதமாக இருந்தாலும் அல்லது முஸ்லிம் மதவாதமாக இருந்தாலும் சரி - இரண்டும் ஒன்றுக்கொன்று ஆபத்தானவை, இவற்றால் ஏற்படும் இழப்பு தேசத்தையே பாதிக்கும். " என்று அவர் கூறுகிறார்.
"ஏஐஎம்ஐஎம் என்னும் பெயரின் பொருள், முஸ்லிம் ஒற்றுமை என்பது தான். நீங்கள் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசும்போது, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது அடிப்படைவாதிகளான இந்துக்கள் இதன் பலனைப் பெறுகிறார்கள் என்பது தெளிவாகிறது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ AIMIM நிச்சயமாக இந்து மதவாதத்தை ஊக்குவிக்கிறது, அது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே தீங்கு விளைவிக்கும். "
மோடி அரசாங்கத்தை விமர்சிப்பதைத் தவிர்க்க அவர் முயற்சிக்கிறார் என்றும் அவரது இலக்கு பெரும்பாலும் காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகள் தாம் என்றும் ஒவைசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்து தெரிவித்த ஷீபா, "அசாதுதீன் ஒவைசியின் இளைய சகோதரர் அக்பருதின் ஒவைசியின் ஒரு கீழ்த்தரமான கருத்து, தொகாடியாவின் 100 கீழ்த்தரமான கருத்துக்களையும் உமா பாரதியின் 100 கீழ்த்தரமான கருத்துக்களையும் நியாயப்படுத்தப்படுகின்றது."
முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே ஒவைசி கட்சி போட்டியிடுகிறது என்றும் ஒவைசி எதிர்ப்புத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
"ஒவைசி, முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார். இதன் காரணமாக வாக்குகள் பிரிக்கப்பட்டு பாஜக தான் பயனடைகிறது, ஆனால் மதச்சார்பற்ற கட்சிகள் இழப்பைச் சந்திக்கின்றன" என்பது தாரிக் அன்வரின் வாதம்.
"பீகார் தேர்தலில் மாபெரும் கூட்டணியின் வாக்குகளை 15 தொகுதிகளில் ஒவைசி கட்சி பிரித்தது. இந்த 15 இடங்களை நாங்கள் வென்றிருந்தால், பீகாரில் இன்று நாங்கள் அரசமைத்திருப்போம்" என்று அவர் கூறுகிறார்,
ஆனால் அக்கட்சி எம்.பி. இம்தியாஸ் ஜலீல் முஸ்லிம்களின் நலனுக்காகப் பேசுவதை மதவாதமாகக் கருதுவதில்லை, மேலும் தனது கட்சியின் அரசியல் பாஜகவுக்கு நன்மை பயக்கும் என்றும் உணரவில்லை.
"எங்கள் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து நாங்கள் போட்டியிடாமல், ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளம், சிவசேனாவா போட்டியிடும்? " என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
கட்சியின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம். அங்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு முஸ்லிம் வாக்குகள் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை. "அல்லாவின் கருணையால், நாங்கள் போட்டியிடுவோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் செல்வோம்" என்று இம்தியாஸ் ஜலீல் கூறுகிறார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற பாஜக கடுமையாக முயல்கிறது. AIMIM அங்கு போட்டியிடும் என்ற செய்தி பாஜகவுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம்.
ஆனால் இந்தச் செய்தி காங்கிரசுக்கு எப்படி இருக்கும்? அகிலேஷ் பிரதாப் சிங் கூறுகையில், "நாங்கள் இப்போது மாநிலத்தில் தீவிரமாகச் செயல்படத் துவங்கிவிட்டோம். AIMIM ஐ தோற்கடிக்க நாங்கள் ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டோம்" என்று தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












