கொரோனா பரவல்: ஒரு வழியாக டொனால்டு ட்ரம்ப் முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றினார்

பட மூலாதாரம், Reuters
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுவெளிக்கு வந்துள்ளார்.அமெரிக்க தலைநகரான வாஷிங்டனிலுள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நலன் விசாரிப்பதற்காக சென்றபோதே டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்தார்.இதுகுறித்து வெள்ளை மாளிகையிலிருந்து மருத்துவமனைக்கு புறப்படுவதற்கு முன்னர் பேசிய டிரம்ப், "நான் எப்போதும் முகக்கவசங்களுக்கு எதிராக இருந்ததில்லை. ஆனால், அதை அணிவதற்கு தகுந்த நேரமும், இடமும் உள்ளதாக நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.முன்னதாக, வரும் நவம்பர் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனை முகக்கவசம் அணிந்ததற்காக கேலி செய்த டிரம்ப், தான் முகக்கவசம் அணியப்போவதில்லை என்று கூறியிருந்தார்.எனினும், இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமையன்று பேசிய டிரம்ப், "நீங்கள் ஒரு மருத்துவமனையில் இருக்கும்போது, குறிப்பாக அந்த குறிப்பிட்ட அமைப்பில், நீங்கள் நிறைய வீரர்கள் மற்றும் மக்களுடன் பேசும்போது முகக்கவசத்தை அணிவது நல்ல விடயம் என்றே நினைக்கிறேன்" என்றார்.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுவெளியில் நடமாடும்போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென்று அந்த நாட்டின் நோய்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரை செய்தபோது, அதை தான் கடைபிடிக்கப்போவதில்லை என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், பொதுவெளியில் நடமாடும்போது கண்டிப்பாக முகக்கவசத்தை அணிய வேண்டுமென்று அதிபர் டிரம்பை அவரது உதவியாளர்கள் நீண்டகாலமாக கேட்டுக்கொண்டு வந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ்: உலக அளவில் அடுத்த ஹாட்ஸ்பாட் ஆக மாறுகிறதா இந்தியா?

பட மூலாதாரம், Hindustan Times
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெதுவாக அதிகரித்தது. ஆனால் முதலாவது நோயாளி கண்டறியப்பட்டதிலிருந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யாவைக் கடந்து உலகில் மூன்றாவது இடத்திற்கு இந்தியா சென்றுவிட்டது.
உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடாக, நகரங்களில் அதிக மக்களைக் கொண்டுள்ள இந்தியா, உலகில் கொரோனா பாதிப்பின் ஹாட்ஸ்பாட் ஆக மாறுவதற்கான வாய்ப்பு எப்போதும் இருந்து கொண்டே உள்ளது.
ஆனால், நோய் பாதிப்பு எண்ணிக்கைகளின் பின்னணியில் உள்ள தகவல் தொகுப்பு கேள்விக்கு உரியதாக உள்ளது. ஏனெனில், போதிய அளவுக்கு இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. வழக்கத்திற்கு மாறாக மரண விகிதம் குறைவாக இருப்பது விஞ்ஞானிகளைக் குழப்பம் அடையச் செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தினமும் பத்தாயிரம் கணக்கில் அதிகரிப்பதால், அண்மைக்காலமாக இது வேகமாக அதிகரித்து வருகிறது. கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்த வாரங்களில் ஜூன் மாதத்தில் தான் அதிகபட்ச எண்ணிக்கையில் நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி நிலவரத்தின்படி 719,664 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம்: டெல்லி 8 பேர் குழு, 7 மணி நேர சிபிஐ விசாரணை - நேற்று நடந்தது என்ன?

சாத்தான்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தந்தை மகன் சிறை மரணம் தொடர்பாக 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, தலைமை மருத்துவர் உள்ளிட்டவர்களிடம் நேற்று ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி-ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப் பரிந்துரை செய்தது அதன்பேரில் புதுடெல்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ஆம் தேதி மாலையில் வழக்குப்பதிவு செய்தனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று

பட மூலாதாரம், Getty Images
பாலிவுட் திரைப்பட உலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“எனக்கு நடத்தப்பட்ட சோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவமனை நிர்வாகம் அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து எனது குடும்பத்தினருக்கும், ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனும் தனக்கும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் முதல் டிஜிட்டல் தேர்தல்: தமிழர்கள் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்துள்ளது . மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கடந்த 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று தனி நாடாக மலர்ந்த பிறகு சிங்கப்பூரர்கள் எதிர்கொண்ட 14ஆவது நாடளுமன்ற பொதுத் தேர்தல் இது. சிங்கப்பூரின் சிற்பி என்று குறிப்பிடப்படும் அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சியின் ஆட்சிதான் கடந்த 55 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இம்முறையும் அக்கட்சியே வென்று ஆட்சி அமைக்கிறது.
இத்தனை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே அவ்வப்போது மாறியுள்ளனவே தவிர, பல தேர்தல்களில் வேட்புமனுத்தாக்கல் நடக்கும் தினத்தன்றே இக்கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிடும்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த 13ஆவது பொதுத் தேர்தலில்தான் மக்கள் செயல் கட்சி முதன்முறையாக அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை எதிர்கொண்டது. இந்தத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கின.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












