சாத்தான்குளம் சம்பவம் சிபிஐ வழக்குப்பதிவு: டெல்லி 8 பேர் குழு, 7 மணி நேர விசாரணை - இன்று நடந்தது என்ன?

சாத்தான்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, தலைமை மருத்துவர் உள்ளிட்டவர்களிடம் நேற்று ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி-ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப் பரிந்துரை செய்தது அதன்பேரில் புதுடெல்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ஆம் தேதி மாலையில் வழக்குப்பதிவு செய்தனர்.
சிபிஐ விசாரணை

பட மூலாதாரம், CBI
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக டெல்லியிலிருந்து வந்துள்ள சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா, தலைமையில் அனுராக் சிங், பவன்குமார் திவேதி, சைலேஷ்குமார் , சுஷில் குமார் வர்மா , அஜய்குமார், சச்சின், பூனம் குமார். ஆகிய 8 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி அனில்குமாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவில் பெற்றுக் கொண்டனர்.

இன்று (சனிக்கிழமை) காலையில் சிபிஐ ஏடிஎஸ்பி வி.கே.சுக்லா தலைமையில் ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர்ச்சியாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் தங்களது மதிய உணவினை ஜெயராஜ் வீட்டிற்கே வரவழைத்துச் சாப்பிட்டு பின்னர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டனர்.
மருத்துவமனையில் விசாரணை
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு சாத்தான்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள மருத்துவர்,செவிலியரிடம் தங்களது விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.
அரசு தலைமை மருத்துவர் ஆத்திகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ குழுவினர் அங்குள்ள ஆவண பதிவோடு, சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணையை நடத்தினார்.
முன்னதாக நேற்று (சனிக்கிழமை) காலை 10:40 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்று விசாரணையை தொடங்கிய நீதிபதி பாரதிதாசன் சிறைக் கைதிகளிடமும் சிறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












